J J Dreams-1

“இங்கக் கம்யூன் எங்க இருக்கு?”, ஆறடிக்கும் உயரமாக, தொப்பி அணிந்திருந்த பெண்மணியிடம் கேட்டான் ஜெரோம். அப்பெண்மணி, வார்த்தையைச் செலவு செய்யாமல், வலது கையால் வழி சொல்ல, நன்றியுரைத்து அத்திசை நோக்கி விரைந்தான் ஜெரோம். ஃபேர் அண்ட் லவ்லி(Fair and Lovely) விளம்பரத்தில் வெள்ளைக்கு அடுத்து வரும் இந்திய நிறம். ஆறடிக்கு ஓர் அங்குலம் குறைவு. நெற்றியில் விழாமல் நேர்த்தியாய் சீவப்பட்ட முடி. தொட்டால் குத்தும் தாடி. குளிரை வெல்ல, ஆடையை மறைக்கும் கம்பளி மேலாடை. இடப்பக்கம் தோள் தொடங்கி வலப்பக்கம் விழுந்த, ஒரு பக்கப் பை அணிந்து, அந்தக் கண்ணாடிக் கட்டிடத்திற்குள் நுழைந்தான். வெளியே மழை விடாமல் தூறியது. அணிந்திருக்கும் ஆடையைத் தாண்டி குளிரின் முள் குத்துவதாய் உணர்ந்தான். ஊரில், ஊட்டிக் குளிரே பதினெட்டு, இருபதென்று இருக்க, இந்நாட்டின் வெயில் காலமே அந்நிலையில் இருந்தது. இரு கைகளையும் மார்புக்குக் கீழ் பொருத்தி, உடல் நெளிவில் உஷ்ணம் தேடினான். அவ்வப்போது உரசப்படும் உள்ளங்கைகள் குளிரை எதிர்த்துப் போர் தொடுத்தன. அரைகுறையாய் நனைந்திருந்தாலும் ஒருவழியாக வந்தடைந்தாயிற்று. உள்ளே சென்றவனுக்கு வேறொரு உலகத்திற்கு வந்ததாய்த் தோன்றியது. புதிய தேசம் புதிதாகப் புன்னகைத்தது. வந்திறங்கிய இரண்டு நாட்கள், புதுவித வாசனையே அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்ததால் உடல்நிலைக் கொஞ்சம் சீராக மாறுவதை உணர்ந்தான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கிச் செல்ல, மூக்கும் விழியும் முகத்திற்கேற்ப அமைய, சலவை செய்த நிலவைக் கொண்டு வந்து சர்க்கார் பணியில் அமர்த்திவிட்டதாய் எண்ண வைத்ததவள் அழகு. அவளிடம் சென்று தான் செய்த முன்பதிவைக் காட்ட, அவள் சொன்ன பதிலில் ஒரு சொல் கூட இவன் மூளைக்குள் நுழையவில்லை. ஒன்றும் புரியாதவனின் முகமொழியைப் புரிந்தவளாய், ஒரு அரசுப் படிவத்தை எடுத்து நீட்டினாள். அதிலும் அறிவுறுத்தல்கள் எல்லாம் டச்சு மற்றும் ஃப்ரென்ச்சு மொழியில் இருக்க,

“இங்க்லிஷ்?”, என்றான் ஜெரோம்.

“நீ”, என்றது அழகுப் பதுமை. டச்சு மொழியில் ‘நீ’ என்றால் ‘இல்லை’ என்ற அளவேனும் அறிந்திருந்தான். அவள் கொடுத்த படிவத்தின் ஒவ்வொரு அறிவுறுத்தல்களையும் கூகுளின் உதவியோடு மொழிபெயர்த்துப் பின்பற்றியவன், அருகிலிருந்த கண்ணாடித் திரையில் தன் பிறந்தநாளைப் பதிவு செய்தான். சில நொடிகளில் அது, காகிதத் துண்டொன்றைத் துப்பியது.

‘டோக்கன் நம்பர் 73’

திரைகளில் ஓடிய எண்களோடு தன் டோக்கனைச் சரிபார்த்தான். எழுபத்து மூன்றைத் தவிர, எழுபதில் தொடங்கி எண்பது வரை, எல்லா எண்களும் காட்சியளித்தன. நல்ல சகுனம். வெறுப்போடு அக்கம் பக்கம் அமர்ந்திருப்பவர்களைக் கவனிக்கத் தொடங்கினான். அங்கே எல்லா விதமான மனிதர்களையும் காணமுடிந்தது. பட்டாம்பூச்சியாய், நீல நிறக் கண்களைச் சிமிட்டி, காற்றோடு கதைப் பேசியது ஒரு குழந்தை. ஒருவருக்கொருவர் ஆறுதலாய், தோள் சாய்ந்த இரு முதியவர்கள். தலையில் பல வகிடெடுத்து, பின்னலிட்ட ஆப்பிரிக்கப் பெண். வெள்ளையர்களைப் போல ஆங்கிலம் பேச முயற்சிக்கும் இரு இந்தியப் பெண்கள். முக்காடு அணிந்த முஸ்லிம் பெண்மணி. கருப்பு உடையணிந்த வெள்ளைக் காவலாளிகள் இருபுறமும் நிற்க, எல்லோரையும் ஒருநொடி திரும்பிப் பார்க்க வைக்கும் அழகில், கால்மேல் காலிட்டுப் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் அவன் வயதொத்த மங்கை. வேயப்பட்ட புருவம். உளியில்லாமல் உருகொண்ட நாசி. ரோஜா இதழ். ராஜா திமிர். பார்ப்பவர் விழுந்து மூழ்கும் ஆழி நிறக் கண்களில் ஒரு மின்னல். பார்வையில் ஒரு கூர்மை. அடிக்கடி ஒத்திக் கொள்ளும் இமைகள். படிக்கையில் கூட பலரை ஈர்க்கும் இளமை. ஆண்களுக்கு எழுதப்பட்ட விதியினும் கொஞ்சம் நீளமான கரு முடி. அவ்வப்போது அது நெற்றியில் விழ, இடக்கையால் ஒதுக்கும் ஒய்யாரம். எட்டவே முடியாத ஒட்டாரம். அவள் வெள்ளையரா இந்தியரா எனப் பட்டிமன்றம் வைத்தால், பாப்பையாவைப் போல நடுநிலைமை எடுக்க வேண்டிய கட்டாயம்.

மெக்கல்லன் பெல்ஜியத்தில் இருக்கிறதா இந்தியாவில் இருக்கிறதா என்று வந்த நாளிலிருந்து ஜெரோம் அடிக்கடி எண்ணியதுண்டு. எல்லா இடத்திலும் ஓரிரு இந்தியர்களையாவது காண முடியும். தெருவுக்குக் கூட இந்திய நிறம். என்ன சொன்னாலும், முன் பின் பழக்கம் இல்லாத ஊர் ஆதலின் கொஞ்சம் அந்நியமாகவேத் தெரிந்தது. கடல் தாண்டிப் பார்க்காத கணியன் பூங்குன்றனார், எவ்வளவு எளிதாக எழுதிவிட்டார், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று? வந்த நாள் முதலே எப்படியாவது ஓரிருவரையாவது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டுமென எண்ணிய ஜெரோம், அருகில் படித்துக் கொண்டிருந்த பெண்ணை நோக்கிப் புன்னகை மின்னல் ஒன்றை வீசினான். ஆனால், எந்த ஒரு பதிலும் இன்றி அவள் ஏளனப் பார்வையொன்றை எறிந்துவிட்டு புத்தகத்திற்குள் மீண்டும் புகுந்துவிட, ஜெரோமுக்கு சற்று ஏமாற்றமே எஞ்சியது. சில நொடிகளில் திரையில் டோக்கன் எண் தெரிய, விறுவிறுவென எழுந்து சென்றவளைப் பின் தொடர்ந்து காவலர்களும் செல்ல, தன் எண்ணுக்காகக் காத்திருந்த ஜெரோம், பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

ஜெரோம் சேவியர். மைல்கள் கடந்து, பல மைல் கல் கடந்து கனவுகளைச் சுமந்து வந்திருக்கும் ஒரு இந்திய இளைஞன். திரைத்துறையில் விருப்பம் கொண்டு, ஒரு திருப்பம் ஏற்பட, திரைகடல் தாண்டி வந்திருக்கும் திறமைசாலி. மற்றவர் சொல்லுக்கு, செவி மடுத்து, முடிவெடுத்து, லியூவன் பல்கலைக்கழகத்தில் சேரவே இப்போது பெல்ஜியம் வந்துள்ளான். பெல்ஜியம், இந்தியாவை விட எல்லா விதத்திலும் மாறுபட்டிருக்கும் நகரம். இந்தியாவில் வாகனங்கள் செல்ல இடப்புறம் என்றால், இங்கே வலப்புறம். இந்தியாவைப் போல, நினைத்த இடத்தில் சாலையைக் கடக்க இங்கே அனுமதி இல்லை. அரசு அலுவல் எல்லாம், முன்பதிவின்றி முன்னே செல்லாது. இப்போது கூட அவன் இந்நாட்டில் இருத்தலைப் பதிவு செய்யவே இங்கு வந்திருக்கிறான். அந்நிய நகரத்தில், ஓரிருவர் உதவியுடன் தங்குவதற்கு ஒரு இடம், தனியாய்ப் பிழைக்கும் விதம் என எல்லாவற்றையும் அறிந்து கொண்டான். இன்னும் இரண்டு நாட்களில் கல்லூரி. தகுந்த சூழல் வாய்க்காத நாட்டில், கடல் கடந்து இனவிருத்தி செய்யும் பறவைகளைப் போல, கடல் தாண்டி வந்திருக்கிறான், தான் கருத்தரித்த கனவு முட்டை, உருத்தரிக்க வேண்டுமென்று.

தொடரும்…

Shopping Cart
Scroll to Top