J J Dreams-2

“War is not about who is right!
War is all about who is left!

நிலப்போர் புரிந்தவருள் நிலைப்போர்க்கு மட்டுமே நிற்பதற்கு நிழல் கொடுக்கிறது வரலாறு. நாளைப் போர் முடியப் போகிறது. பிழைத்தவர்களை எல்லாம் பிரபஞ்சம் பெரிதாய்ப் பேசும், ஆனால், உலக வரலாற்றில் உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்க ஆ! தாயம்! கேட்டு, மனைவி மனை மாடு இழந்து, கைப்பொருள் விட்டுக் காடு நுழைந்து, உட்பகை நெஞ்சுக்குள் உலையாய் கொதிக்க – அது கொதித்த வேகத்தில் கொலையாய் சுகிக்க, குடும்பத்திற்குள் நிகழ்ந்த குருட்சேத்திர போரா? எல்லைகளைப் பரப்ப – பலர் அல்லைகளை உருவிய முகலாய யுத்தங்களா? வீழ்ச்சியால் தவித்த வெவ்வேறினத்தை சூழ்ச்சியால் வென்று சுருட்டிக் கொண்ட அமெரிக்க யுத்தங்களா? பானிபட்டா? கலிங்கமா? வணிகம் என்ற வாசல் வழி வந்து, போகும் வரையில் பூசல் பல தந்து, அடல்களில் கூட அரசியல் குழப்பி, உடல்களைக் கொண்டு உட்சுவர் எழுப்பி, இங்கிலாந்தை எதிர்த்த இந்தியச் சுதந்திரப் போரா? பேராசையாலோ, வரலாற்றில் தத்தம் பேர் ஆசையாலோ நிகழ்ந்த, நிலப்பரப்பை, அரக்கத்தால் அகழ்ந்த முதலாம் உலகப் போரா? நிசியில் வன்மத்தின் பசியில் உறங்கிக் கொண்டிருந்த இரு நகரங்களை, நறுக்கி விட்டுப் பெருக்கி எடுத்த நகங்களைப் போல, மனித உடல்களை, உருக்கிக் கொன்று உலையில் உண்ட இரண்டாம் உலகப் போரா? இல்லை! இல்லவே இல்லை! கொடுமையான யுத்தங்களுள் முதன்மையானது, காதல் தான்! ஆனால் நான் அதிலும் வெல்லப் போகிறேன். நாளை தான் அவளைக் காணப் போகிறேன்” “கட் கட் கட்”, எங்கிருந்தோ ஒரு குரல் உரக்கக் கேட்க, ஜோதா தான் அணிந்திருந்த இளவரசித் தொப்பியைக் கழற்றியபடி, நிழலில் அமர்ந்திருக்கும் தன் தந்தையை நோக்கி நடந்தாள். வந்தவளிடம்,

“கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம்…”, என்று அவர் ஏதேதோ விளக்கிச் சொல்ல, அவர் விரல் அசைவைக் கூட விதியென பின் பற்றியவளாய், தந்தைச் சொல்வதைத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜோதா.

மறுநாள், பொழுது புலர்ந்ததில் இருந்து, கலவரமாய்க் காட்சி அளித்தது வீடு.

“எனக்கு புரியல டாடி. எனக்குப் பிடிச்ச எதையுமே நான் செய்யக் கூடாதா?”, கல்லூரி விண்ணப்பத்தைக் கையில் வைத்தபடி எரிச்சலில் குதித்தாள் ஜோதா. அப்பாவின் நிழலில் போதிய அளவுப் புகழடைந்தாயிற்று. இப்போது லியூவன் பல்கலைக்கழகத்தில் எப்படியாவது சேர வேண்டும் என்பதே அவள் ஒரே குறிக்கோள். அப்பாவைச் சம்மதிக்க வைக்கப் போராட வேண்டுமென்று அறிந்தே, லியூவன் பல்கலைக் கழகத்தில் அவள் விண்ணப்பித்திருந்தாள்.

“செய்யலாம். ஆனா இப்பப் படிப்புக்கான தேவை என்ன இருக்கு? நீ படிச்சி தான் இந்தக் குடும்பத்தக் காப்பாத்த போறியா?”

“படிக்கிறது அறிவுக்கும் அனுபவத்துக்கும் தான் டாடி”, ஜோதா.

“படிச்சித் தான் ஆகணும்னா சரி. ஆனா யூ.எஸ், யூ.கே எல்லாம் விட்டுட்டு, ஏன் லியூவனுக்கு போய்ப் படிக்கணும்?”

“காலமெல்லாம் நீங்க சொல்றத மட்டும் தான் கேட்டுட்டு இருக்கணுமா டாடி. எப்ப தான் நான் எனக்கான வாழ்க்கைய வாழுறது?”, ஜோதாவிற்கு அழுகை முட்டியது. ஜோதாவின் தந்தை, டேவிட் வில்லியம்ஸ், ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் ஒரு முன்னணி நடிகர். விரல் சொடக்கில், வியாபார மாற்றங்கள் செய்யும் பெரும் முதலாளி. இங்கிலாந்தின் அரச பரம்பரைக்கே அதிக நெருக்கமுடையவர்.

“முதல்ல யாரக் கேட்டு இந்த முடிவெடுத்த?”, அவளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல், புகைத்துக் கொண்டிருந்தார் வில்லியம்ஸ். அவர் அருகிலேயே கைகளைப் பிசைந்தபடி வில்லியம்ஸின் இரண்டாம் மனைவி, சாரு நின்று கொண்டிருக்க, ஜோதா அவர் மீதும் ஒரு வெறுப்புப் பார்வை வீசியபடி,

வெப்பம் தகிக்கும் மூச்சுக் காற்றை, இழுத்து இழுத்துப் பேசிய ஜோதா, “யாரக் கேக்கணும் டாடி?”, என்றாள்.

“என்னக் கேக்கணும் ஜோதா. உன் வாழ்க்கையப் பாத்து பாத்து செதுக்குறவன் நான். எவ்வளவு பெரிய வாய்ப்ப விட்டுட்டு போறேன்னுத் தெரியுமா? உன் கூட படம் சைன் பண்ண எத்தனப் பேரு காத்திருக்காங்கன்னு தெரியுமா உனக்கு? வெளிய போயி பாரு. படம் கூட பண்ண வேணாம், மியூசிக் கான்சர்ட்டுக்கு டேட்ஸ் குடு போதும்னு பல கம்பேனிஸ் காத்துட்டு இருக்கு. நீ என்னடான்னா பையித்தியக்காரத்தனமா படிக்கணும்னு அறிவ வளக்கணும்னு பேசிட்டு இருக்க”.

ஜோதா எதுவும் பேசாதிருக்க, வில்லியம்ஸ் தொடர்ந்தார், “பேரும் புகழும் எவ்வளவு பெருமைன்னு உனக்குப் புரியமாட்டிங்கிது ஜோதா”

“பேரும் புகழும் பெருமைக் கிடையாது டாடி. தண்டனை. கொஞ்ச நாளைக்கு எனக்குத் தேவை எல்லாம் தனிமை தான். நார்மல் லைஃப். திரும்ப வந்து நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்”, வில்லியம்ஸ் எதுவும் பேசாதிருக்க, ஜோதா அழுகைத் தோய்த்த குரலில், “உங்களுக்கு எல்லாம் என்னோட விருப்பத்தப் பத்தி அக்கறையே இல்லையா?

“சின்ன வயசுல இருந்தே உன்னையும் தேவ் மாதிரி வெளிலக் காட்டாம வளத்துருக்கணும். உனக்கு இதோட அருமையெல்லாம் தெரிய மாட்டிங்கிது”, என்று வில்லியம்ஸ் தேவ்-ஐப் பார்த்தார். தேவ், ஜோதாவுன் தம்பி. நான்காண்டுகளுக்கு இளையவன். தந்தை சொல்வதைக் கேட்டபடி அவனும் அவன் அம்மாவுக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்க, “ஐ நோ ஜோதா, மியூசிக் இஸ் யுவர் ட்ரீம்(I know Jodha, Music is your dream-இசை தான் உன்னுடையக் கனவென்று எனக்குத் தெரியும்). அதெல்லாம் விட்டுட்டு நீ அங்க போறது தான் ஏன்னு எனக்குப் புரியல. நாங்க சொல்றதக் கேளு. நாங்க உன்னப் பெத்தவங்க, நாங்க எடுக்குற முடிவெல்லாம் உன் நல்லதுக்காக தான் இருக்கும்”

“ஃபக்கிங்க் ஹெல்(Fucking hell)! அவங்க என்னப் பெத்தவங்கக் கிடையாது. அவங்க என் அம்மாக் கிடையாது”, என்று விண்ணப்பப் படிவத்தைக் கீழே எறிந்தாள் ஜோதா. இப்போதும் சாரு எதுவும் பேசாதிருக்க,

“மைண்ட் யுவர் லேங்குவேஜ்(Mind your language)”, வில்லியம்ஸின் குரல் கறார் ஆனது.

“எனக்குன்னு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துட்டீங்க டாடி. லெட் மீ ஹாவ் மை ஓன் ரைட்(Let me have my own ride-என்னுடையப் பயணத்தை நானேப் பார்த்துக் கொள்கிறேன்). இதையும் நீங்களே தீர்மானிச்சா அப்பறம் நான் எப்ப தான் என் வாழ்க்கைய வாழுவேன் சொல்லுங்க”, என்று ஜோதா வில்லியம்ஸின் அருகில் வந்து மன்றாடியபடி அமர, நீண்ட நேரம் சிந்தித்த வில்லியம்ஸ்,

”சரி. போய் படிச்சிட்டு வா. ஆனா அடிக்கடி நாங்க உன்னப் பாக்கணும்”

“மாசம் மாசம் கூட வரேன்”, என்று புன்னகையோடு அறைவிட்டுச் செல்ல எத்தனித்தவளிடம்,

“லியூவன்ல யுனிவர்சிட்டிப் பக்கத்துலயே ஸ்டேக்கும் ஏற்பாடு பண்ண சொல்லிடுறேன். அங்கயேத் தங்கிக்கோ”, என்றார் வில்லியம்.

“நான் எங்கத் தங்கணும்னு கூட நீங்க தான் முடிவு பண்ணனுமா டாடி?”

“சொன்னாக் கேளு ஜோதா. உன்னோட பாதுகாப்புக்கு தான் சொல்றேன்”

“அதான் போயிப் படின்னு சொல்லிட்டீங்கல்ல. தங்குறது கூட என் விருப்பத்துக்கு விடக் கூடாதா?”, என்று ஜோதா உரக்க பேச,

“விடுங்க. எல்லாத்துக்கும் அவளச் சின்னப்புள்ள மாதிரி நடத்துனா அவளுக்கும் வெறுப்பு தான் வரும்” என்று வில்லியம்ஸின் கைகளைப் பிடித்தார் சாரு.

“இது எனக்கும் எங்கப்பாக்கும் நடக்குற பிரச்சனை. தேவ இல்லாம நீங்க உள்ள வராதீங்க”

“ஜோதா!!!”, மீண்டும் உயர்ந்தது வில்லியம்ஸின் குரல். எதிர்ப்பேச்சு பேசாமல், வேகமாய் மாடி ஏறி, தன் அறைக்குச் சென்றாள் ஜோதா. ஜோதாவுக்கு அழுகைத் தொண்டையை அடைத்தது. மேசையில் இருந்த நாட்குறிப்பை எடுத்து கண்ணீரால் எழுதினாள்.

சாருவை நோக்கிய வில்லியம்ஸ், “அவப் பேசுனத எதுவும் மனசுல வச்சிக்காத”, என்றார்.

“அவச் சின்னப் பொண்ணுங்க. தேவ் எனக்கு எப்படியோ அப்படி தான் இவளும். ஆனா நீங்க அவள இந்த அளவுக்கு கண்காணிக்கத் தேவையில்ல”

“இல்ல சாரு! இப்ப அவ ஸ்டார். அவளோடப் புகழே அவளுக்கு ஆபத்து தான். அதுக்கு தான் பாதுகாப்பா நம்ம வீட்லயேத் தங்க சொன்னா”, என்று பெருமூச்சு விட்டார்…

வணிகத்தில் பெரும் இலாபம் ஈட்டிய ஜோதாவின் தாத்தா இங்கிலாந்தில் குடியேறினார். இங்கிலாந்திலேயேப் பிறந்து வளர்ந்த ஜோதாவின் அப்பா, ஹாலிவுட் திரைத்துறையில் ஒரு முன்னனி நடிகராக, சிறுவயது முதலே ஜோதாவுக்கும் திரை வெளிச்சம் கிட்டியது. மேடைப் பாடகியாக முடிவெடுத்த ஜோதா, பதின்ம வயதிலே புகழின் உச்சியை அடைந்துவிட்டாள் என்றே சொல்ல வேண்டும். சென்ற இடமெல்லாம் சூழும் இரசிகர் படையால், தனியாய் எங்கும் செல்லாத, சொன்ன சொல் மீறாத அப்பாப் பிள்ளை. அறிமுகமான பாலிவுட் படத்திலும் ஏகப்பட்ட வரவேற்பு. இப்படி ஏறுமுகத்தில் இருக்கும் இந்த நிலையில், அப்பாவின் பிடியும் அயராத நடிப்புமே அவளை இப்போது கல்லூரியில் காலடி எடுத்துவைக்கக் கட்டாயப்படித்தியுள்ளது. அதுவும் கடல் தாண்டி.

தொடரும்…

Shopping Cart
Scroll to Top