J J Dreams – 3

கரைகளைத் தொட்டு நுரைகளைப் பரப்பி, மேடு பள்ளங்களிலும், ஏற்ற இறக்கங்களிலும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஏற்படும் அதிர்வுகள் எண்ணிலடங்காதவை. ஓடும் நதியில் எறியப்படும் ஒரு கல், எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாமல், ஆழம் சென்று அமைதியாய் உறங்கும். ஆனால், குளங்களில் எறியப்படும் கல், கரையைத் தொடும்வரை, தன்னைச்சுற்றி வளையம் உண்டாக்கும் வல்லமை கொண்டவை. வேறுபாடு என்ன?

அதிர்வுகளோடும் அசைவுகளோடும் செல்லும் வாழ்க்கை, ஓரிரு இடர்களில் ஒடுங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் முன்பே பழக்கப்பட்டிருப்பதால், ஒரு சிறு கல் அதை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் தேங்கிய குளத்தில் எறியப்படும் கல், ஆழம் சென்றாலும் சில காலம் ஒரு கவனிப்பை ஏற்படுத்துகிறது. கல்லுக்கு அசையாத நதி, இடைமறிக்கும் பாறைகளுக்கு இடங்கொடுத்து விலகிச் செல்கிறது. தாக்கம் ஏற்படுத்தும் அளவைப் பொருத்தே அதிர்வலைகள் மாறுபடுகின்றன. ஜோதாவின் வாழ்க்கை ஓடும் நதி. பல முகங்கள், பல இடங்களைக் கண்டதனால், எந்த உணர்வுகளும் அவளை அவ்வளவு எளிதில் பாதிப்பதில்லை. அவள் வாழ்வில் வருகிற அத்தனை மனிதர்களையும் அவள் ஒரு சிறு கல்லாகத் தான் பார்க்கப் பழகியிருந்தாள்.

அறுநூறு ஆண்டுகளுக்கு மேல் கலை, இலக்கியம், மருத்துவம் எனக் கல்வி கற்றுக் கொடுத்த, உலகிலேயே மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றான, லியூவன் பல்கலைக்கழகம் இருகரம் திறந்து வரவற்றது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு வந்து படிக்க, முதல் நாள் நடக்கும் தொடக்க விழாவில், எப்படியாவது இங்கே படித்து வாழ்வில் வெற்றி பெறவேண்டுமென்ற நினைப்போடு எல்லோரும் அமர்ந்திருக்க, தன் தோள் பையைக் கட்டி அணைத்தபடி சந்தோச முகத்துடன் அரங்கத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான், ஜெரோம்.

அறை முழுதும் அடைக்கப்பட்டு வெதுவெதுப்பாக இருந்தது. செயற்கை வெளிச்சத்தில் ஒளிர்ந்த அறையின் முன் பகுதியில் உள்ள அரங்கத்தில், சில நாற்காலிகளுக்கு முன் போடப்பட்ட நீளமான மேசை. அதன் வலப்பக்கம் ஒரு இராட்சச கடிகாரம், ஒன்பது இருபது காட்டியது. அங்கங்கே பலர் அமர்ந்திருக்க, அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் எனச் சுற்றிலும் உள்ள முகங்களை வைத்து தேசங்களை உத்தேசித்தான் ஜெரோம். தான் மட்டும் தான் இந்தியனோ என்றத் தவிப்போடிருக்க,

“ஹலோ! இந்தியாவா?”, என்ற பெண் குரல் கேட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ஐரோப்பாவுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் சுடிதார் அணிந்து, ஒரு நொடி இந்தியாவை நினைவுபடுத்தியது அந்த பெண்ணின் உடை. மாநிறத்தில், லட்சணமான, இல்லை இல்லை, அழகான முகம். குழிகள் வெட்டி ஆளை வீழ்த்தும், விழிகள் இரண்டும் விண்மீன்கள். கூரான நாசி, குறுகிய இதழ்கள். நேரான பார்வை. நெளிவான அங்கம். வற்றாத புன்னகை. வளமான மார்பு. எதுவும் பேசாத ஜெரோமிடம், “இந்தியாவா?”, என்றாள் மீண்டும் ஒருமுறை.

“ஆமாங்க. தமிழ்நாடு. நீங்க?”, ஜெரோம்.

“ஆந்திரா”, அவன் அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்தாள். “எவ்ளோ நாள் ஆச்சு வந்து?”

“ஒரு வாரம் ஆச்சு. நீங்க”

“ரெண்டு வாரம். ஊரெல்லாம் செட் ஆயிடுச்சா?”

“ஏதோங்க. இப்ப வெயில் காலம் அதனால கொஞ்சம் பரவால்லன்னு தோணுது. உங்களுக்கு எப்படி?”, என்றான் ஜெரோம்.

“அதே தான். சாரி, உங்க பேர் என்னன்னு கேக்கவே இல்ல. ஐ அம் ஷ்ராவனி”, என்று தன் வலக்கரம் நீட்டினாள்.

“ஓஹ் சாரி”, என்று தன் பையைக் கீழ வைத்து, “ஐ அம் ஜெரோம்”, என்று கைகுலுக்கினான். “என்ன மேஜர்?”

“ஃபிலிம் அண்ட் தேட்டர்ஸ். நீங்க?”, ஷ்ராவனி.

“வாவ். நானும் அதான். எங்க தங்கிருக்கீங்க?”

“மெக்கல்லன். பிரெண்ட்ஸ் கூட”, என்று இருவரும் பேசிக் கொண்டே இருக்க, அரங்கத்தின் மொத்தக் கூட்டமும் ஒரு திசையை நோக்கியது. பலர் எழுந்து, அத்திசையை நோக்கி முன்னேறினர். கூட்டத்தைக் காவலாளிகள் கலைக்க, மின்னும் உடையுடன், மிடுக்கும் நடையுடன் புடை சூழ அரங்கத்திற்குள் நுழைந்தாள் ஜோதா. செல்லும் இடமெல்லாம், அவளைப் புகைப்படம் எடுப்பதற்கென்றேத் தனியாய் ஒரு கூட்டம் சுற்றிச் சுற்றி ஓடியது. பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் என அனைவரும் வந்து அவளோடும் அவள் உடன் வந்தவர்களோடும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, முன்னிருக்கையில் தன் குடும்பத்துடன் வந்தமர்ந்தாள்.

“நாளைக்கே இது ஹெட் லைன்ஸ்ல வரும் பாருங்க”, என்றாள் ஷ்ராவனி.

“ஆமா, யாரிது?”, ஜெரோமுக்கு தான் புன்னகைக்கப் பதில் புன்னகை கூட செலுத்தாத அவளது முகமும், கம்யூனில் பார்த்த காட்சியும் நினைவுக்கு வந்தது.

“இவரத் தெரியாதா? ஹாலிவுட் ஆக்ட்ரஸ் அண்ட் சிங்கர், ஜோதா வில்லியம்ஸ். இப்ப பாலிவுட்லக் கூட நடிச்சிருக்காங்க. ரொம்ப வேகமா வளர்ந்து வர நடிகை”

“தொடக்க விழாக்கு வந்திருக்காங்களா?”. ஜெரோமின் கேள்விக்குப் புன்னகைத்த ஷ்ராவனி,

“இல்ல, இல்ல. இங்கப் படிக்க வந்திருக்காங்க. மியூசிக் அண்ட் ஆக்டிங்க் மேஜர். காலைலயே எங்க ரூம்ல இவங்களப் பத்தி தான் பேச்சு. நம்ம கூட தான் படிக்கப் போறாங்களாம்”, என்றாள்.

“ஓஹ்!”, என்று ஆசிரியர்கள் முதல் முதல்வர் வரை, பலர் அவளுடன் வந்து கைகோர்ப்பதைக் கவனித்தான் ஜெரோம். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு துறையில் சாதித்துப் புகழின் உச்சம் பெற்ற ஒரு பெண், அதை முழுமையாய்க் கற்க முயல்கிறாள் என்றால் அக்கலையின் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்க வேண்டும். தான் செய்யும் தொழிலில் பூரணம் அடைய எத்தனைப் பேர் விரும்புவார்கள்? வெற்றி தன்னைச் சுற்றி வர எல்லாத் தகுதிகளையும் அவள் கொண்டிருப்பதாக ஜெரோம் நினைத்துக் கொண்டிருக்க, விழாத் தொடங்கியது. சத்தமில்லாமல் ஜெரோமின் காதருகே வந்த ஷ்ராவனி,

“அவங்கக்கூட மெக்கல்லன்ல தான் தங்கி இருக்காங்களாம்”, என்றாள் புன்னகையுடன்.

நிகழ்ச்சி முடிந்ததும் பெரும்பாலானோர் ஆளுக்கொரு காரில் ஏறி விருட்டென்று சென்று விட, ஷ்ராவனியும் தன்னோடு வந்த தோழியுடன் புறப்பட்டாள். முதல் நாள் கல்லூரி அனுபவம் அவனுக்கு நிறையத் தனிமையைக் கற்றுக் கொடுத்தது. புரியாத மொழியில், தெரியாத ஊரின் பாதைகளை அறிந்து, பல மைல் பயணித்ததில் ஏதோ ஒரு சாதனை உணர்வு. வெயில் காலத்திலும் பனிப் போர்வை படர்ந்திருந்தது. வந்திறங்கிய ஒரு சில நாட்களில், ஊருக்கேத் திரும்பச் செல்லலாமா எனப் பலமுறை தோன்றியது அவனுக்கு. போய் என்ன செய்வது? இது தான் வாழ்வென்று தீர்மானித்தபின், துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கில்லையா? ஜெரோம் தனியாக நடந்தான். கல்லூரி வாசலை விட்டு வெளியே வந்ததும், லியூவன் ஸ்டேஷன் நடக்கும் தொலைவிலேயே இருந்தது. சாலையைக் கடக்க, ஒரு சப்வேயில் இறங்கி பூமிக்கடியில் சென்றான். குகை போல வழி. சுவர்கள் முழுவதும் விளம்பரங்கள், வண்ண வண்ண ஓவியங்கள். புரியாதக் கிறுக்கல்கள். தரையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் தாளம் போட்டுக்கொண்டு பெயர் தெரியாத இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்க, அவன் முன் விரித்த துணியில் தரையில் சில நாணயங்கள். அவன் வாசிக்கும் மெட்டு சப்வே எங்கும் எதிரொலித்தது. நிலப்பரப்பின் கீழ் பக்கம், காற்று சில்லென்று வீசியது.

Shopping Cart
Scroll to Top