“அவன் ப்ரொப்போஸ்(propose) பண்ணா என்ன சொல்ல”, தன் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று இறுகப் பற்றிக் கொண்டபடி, நடுக்கத்துடன் கேட்டாள் ஷ்ராவனி.
“புடிக்கலன்னு சொல்லிடு”, ஜெரோம்.
“டேய்…”
“அப்றம் என்ன… உனக்கும் அவனப் புடிச்சிருக்கு, அவனுக்கும் உன்னப் புடிச்சிருக்குனா. சரின்னு சொல்லிட்டு சந்தோசமா இருப்பியா”, பேசிக்கொண்டிருக்கும் போதே எதிரே சுனிலும், முகக்கவசம் அணிந்தபடி ஜோதாவும் வர, ‘ஹலோ’ என்று ஒருவருக்கொரு கைகுலுக்கிக் கொண்டனர், ஜோதா ஜெரோமைத் தவிர. இருவரும் வெறுப்புப் பார்வைகளே வீசினர்.
“இதென்னக் கோலம்?”, என்றாள் ஷ்ராவனி ஜோதாவைப் பார்த்து.
“ஆண்ட்வர்ப் மெக்கலன விடக் கொஞ்சம் பெரிய ஊரு. யாராச்சும் பாத்தா, கூட்டம் கூடும். அப்பாக்குத் தெரிய வரும். அதான்”, என்று ஜோதா ஷ்ராவனியிடம் விளக்கம் கொடுப்பதை, சற்றும் பொருட்படுத்தாமல், ஜெரோம், இரயில் வரும் பாதையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, குறையா வெறுப்போடு, இமைகொட்டாமல் ஜோதா ஜெரோமையே பார்த்துக் கொண்டிருந்தாள். சொன்ன நேரத்தில் நிமிடம் மாறாமல் வந்து நின்றது இரயில். கண்ணாடிக் கதவுகள் தானாய்த் திறக்க, இரண்டு தளங்களில் இருக்கைகள். ஷ்ராவனியும் ஜெரோமும் ஒரு பக்கம் அமர, சுனிலும் ஜோதாவும் எதிர்புறம் அமர்ந்தனர். ஒரு கண்ணாடித் திரை, அடுத்து வரும் நிலையத்தை அறிவித்துக் கொண்டே இருந்தது. சத்தமில்லாமல், ஷ்ராவனிக்கு மட்டும் கேட்கும் வண்ணம்,
“அங்க போனதும் சுனில் கூட பேசிட்டே, என்ன டீல்ல விட்டுடாத. எங்க போனாலும் என் கூடவே உக்காரு. என்னாலலாம் இந்த ஜோதா கூட சுத்தமுடியாது. ஹெட்வெயிட்”, என்றான் ஜெரோம். ஷ்ராவனி சிரிக்க, சுனிலும் ஜோதாவும் ஷ்ராவனியை என்ன என்பது போல் பார்த்தனர். அவள், ஒன்றுமில்லை என தலையசைத்தாள். ஜெரோம் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.
“ஸ்டேஷன் பக்கத்துலயே ‘பேர்ல்’ அப்டின்னு ஒரு ஸ்ரீலங்கன் ஹோட்டல் இருக்கு. சாப்பாடு அங்க ரொம்ப நல்லா இருக்கும். அங்க போலாமா?”, சுனில் கேள்விக்கு, எல்லோரும் ஆமோத்தித்தனர். ஜெரோம் ஷ்ராவனியை விட்டு நகரவில்லை. சுனிலிடம் கூட அதிகம் பேசாமல் இருந்தான். பேச்சு கொடுத்தால் அது ஜோதாவிடம் சென்று முடியுமோ என உரையாடுவதையே அதிகம் தவிர்த்தான். ஜோதாவும் அவ்வண்ணமே இருந்தாள். உணவு முடித்து திரும்ப எத்தனிக்கையில்,
“நீங்க வெளில வெயிட் பண்ணுங்க, நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்”, என்று ஷ்ராவனி உள்ளே செல்ல,
“ஜெரோம்”, என்று விளித்த சுனில், “ஸ்டேஷன் பக்கத்துல இல்யூஷன் ஹவுஸ் ஒன்னு இருக்கு. அங்க போகலாமா?”, என்றான்.
“தாராளமா”, ஜெரோம்.
“இல்ல, இஃப் யூ டோண்ட் மைண்ட், நானும் ஷ்ராவனியும் மட்டும் தனியா…”, என்று இழுத்தவனின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட ஜெரோம்,
“இதுல என்ன இருக்கு? போயிட்டு வாங்க”
“ஷ்ராவனிக்கிட்ட நான் சொன்னன்னு சொல்லாத. தப்பா நெனச்சிப்பா”
“ச்சே ச்சே. அதெல்லாம் சொல்லமாட்டேன்… கவலப் படாத. நான் பாத்துக்குறேன்”
“அவ கேட்டா என்ன சொல்லுவ?, சுனில்.
“நான் ஏற்கனவே அதப் பாத்துட்டேன். பக்கத்துல எங்கயாச்சும் பார்க் இருக்கும், நான் பாட்டுக்கு அங்க உக்காந்து புக் படிச்சுட்டு இருப்பேன்னு சொல்லிக்கிறேன்”, ஜெரோம். இந்த உரையாடல் எதிலும் கலந்துகொள்ளாமல் ஓரமாய் நின்று போன் பேசிக் கொண்டிருந்த, ஜோதாவைக் காட்டி, “உன் ஃப்ரெண்டு யார்ட்டையும் பேச மாட்டாளா?”, என்றான் ஜெரோம்.
“ஜோதாவா… ஆமா! அவ அப்டி தான். பெருசா எல்லார்க்கிட்டையும் பழகமாட்டா”
“ஏன்?”
“தெரியலயே. அதிகம் இங்க இருக்கவே மாட்டா. ஆண்ட்வர்ப் போற மாதிரி, இங்க்லாண்ட் போவா. அதனால எங்கக் கூடவே அதிகப் பழக்கம் இருக்காது”
“அடிக்கடி போவாளா?”, ஜெரோம்.
“மாசம் ஒருவாட்டி போயிடுவா. அவங்க அப்பா ஆர்டர்”, என்று சுனில் சொல்லிக் கொண்டே இருக்க,
“போலாமா?”, ஷ்ராவனியின் குரல் எல்லோரையும் கிளப்பியது.
எல்லோரும் இல்யூஷன்ஹவுஸ் நோக்கி நடக்க, ஜெரோம் ஷ்ராவனியிடம், “நான் சொல்றத ரியாக்ட் பண்ணாமக் கேளு, சுனில் உன்கிட்ட ஏதோ தனியாப் பேசணும்னு சொன்னான்”
“என்ன சொன்னான்?”, என்று ஆர்வமாய்க் கேட்டாள் ஷ்ராவனி.
“ஒன்னும் சொல்லல. ஏதோ பேசணும்னு மட்டும் தான் சொன்னான். இல்யூஷன் ஹவுஸுக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்க”, ஜெரோம்.
“நீ என்ன பண்ணுவ?”
“நான் பக்கத்துல எதாச்சும் பார்க்ல உக்காந்து புக் படிச்சிட்டு இருப்பேன்”
“வர்றப்ப தான் தனியா விட்டுட்டுப் போகாதன்னு சொன்ன? ஒழுங்கா எங்கக் கூடவே வா”
“லூசு. லன்ச்சுக்கே நான் கூட வந்திருக்கக் கூடாது. நீ தனியா வர யோசிப்பியேனு தான் வந்தேன். அவன் கூப்பிட்டது உன்ன தான். என்ன இல்ல. மொமண்ட்ட மிஸ் பண்ணாத. போயிட்டு வந்து என்ன சொன்னான்னு சொல்லு”, என்று பேசிக் கொண்டே வந்தனர்.
அங்கங்கே சாலைகளில் ஆளுயர சிலைகள். இடைவெளிவிட்டு விடாமல் நடப்பட்ட மரங்கள். கல்லறைப் பூக்கள் தேடும் வண்ணத்துப் பூச்சிகளாய் சில்லறைக் காசுகள் அங்கங்கே சிதறிக் கிடக்க, உலகத்தை மறந்து ஊதுகுழலில் வாய்வைத்த வாத்தியக் கலைஞர். வீதியென்ற விதிகளுக்குட்படாமல், காதல் என்ற ஒற்றை, சாதியின் கீழ் சங்கமித்து முத்தமிட்டலையும் காதல் பறவைகள். பரிட்சைக் கவலை மறக்க, பாட்டிலோடு திரியும் பத்தாம் வகுப்பு சிறார்கள். முதுமையோடு முரண்படாமல், வெள்ளைக் கொடி உயர்த்தி, எல்லைக் கோடுத் தேடும் வயோதிகர்கள். பலமுகங்களோடு பளபளத்தது ஐரோப்பா நகரம். சாலையோர ஓவியர் ஒருவரைச் சுற்றி கூட்டம் குவிந்திருந்தது. நாள்வரும் நமக்கென்ற நம்பிக்கையோடு வரைந்து கொண்டிருந்தவனை, நால்வரும் கண்டு நின்றனர். அது, வண்ணங்களால் பேச முயற்சி செய்யும் ஒரு நவீன ஓவியம்.
“சில்லறைக் காசு வச்சிருக்கியா?”, என்றாள் ஷ்ராவனி. தன் பணப்பையத் துழாவிய சுனில் இல்லை என்று தலையசைக்க, ஜெரோம் ஒரு யூரோவை எடுத்து நீட்டினான். அதை அந்த ஓவியனின் துண்டில் போட்ட ஷ்ராவனி, “எனக்கு ஆர்ட்-னா ரொம்பப் புடிக்கும்”, என்று சுனிலைப் பார்த்து புன்னகைத்தபடி கூறினாள். சுனில் எதுவும் பேசாமல் பதில் புன்னகைப் புரிந்தான், அவன் புன்னகை, ஓவியம் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்பதைத் தெளிவாய் கடத்தியது. இருந்தும்,
“ஆனா, இது என்னன்னேப் புரியலயே”, என்றான் சுனில்.
“புடிக்கிறதுக்கு புரியணும்னு அவசியம் இல்லையே”, என்ற ஷ்ராவனியை ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பார்த்தாள் ஜோதா.
“யூ நோ, வாழ்க்கைக்கும் அதான்”, என்றான் ஜெரோம்.
“புரியல?”, ஷ்ராவனி.
“வாழ்க்கைக்கும்… அதான் ஃபார்முலா(formula)”, ஜெரோம்.
“எது?”, முதன்முறை வாய்திறந்த ஜோதா இப்போது, ஜெரோமை நேரடியாய்ப் பார்த்தாள்.
“ஷ்ராவனி சொன்னது தான். நமக்கு ஒரு விஷயம் புடிச்சிருக்குன்னா, அது புரியணும்னு அவசியம் இல்ல. பிடித்தல் வேற. புரிதல் வேற. பிடித்தல் மனம் சார்ந்தது. புரிதல் அறிவு சார்ந்தது. இரண்டுக்குமான இடைவெளி இந்தியாவுக்கும் யூரோப்புக்குமானது”, என்று நிதானமாய் விளக்கினான் ஜெரோம். ஜோதா, அவன் சொன்னதை அசைபோட்ட படியே நடந்தாள். ஜோதாவுக்கு அவன் விளக்கம் பிடித்திருந்தது. அவனையும். ❤️