சுனிலும் ஷ்ராவனியும் இல்யூஷன் ஹவுஸ் செல்ல, ஒரு புத்தகத்துடன் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரப்பலகையில் சென்று அமர்ந்தான் ஜெரோம். எதுவும் பேசாமல் அவன் அருகில் வந்தமர்ந்த ஜோதாவிடம், தானாய் எதுவும் பேசக் கூடதென்பதில் தீர்க்கமாய் இருந்தான் ஜெரோம். சுற்றத்தை நோட்டமிட்டான். சுடாத வெயில். குடை விரித்த மர நிழல்கள். மகரந்தம் ஏந்திய மலர்கள். விளையாடும் சிறார்கள். ஆட்கள் மொய்க்கும் வேஃபல்ஸ் வண்டி. சில நிமிடங்களுக்குப் பின்,
“என்ன படிக்கிற?”, ஜோதாவே உரையாடலைத் தொடக்கினாள். மிகினும் குறையினும் நோய் செய்வது, சோறு மட்டுமல்ல சொற்களும் என்றுணர்ந்த ஜெரோம்,
“ரூமி கவிதைகள்”, ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்.
“நானும் முன்ன நெறையப் படிப்பேன். இப்பல்லாம் நேரமே இல்ல. ஸ்மோக்?”, என்று ஒரு சிகரெட்டை நீட்டியபடி முகக்கவசத்தை சற்று விலக்கி புகைக்கத் தொடங்கினாள் ஜோதா.
ஜோதாவை சற்று வியப்போடு பார்த்த ஜெரோம், “ஸ்மோக்கும் புடிக்காது. ஸ்மோக் பண்றவங்களையும் புடிக்காது”, மீண்டும் தன் புத்தகத்திற்குள் ஆழ்ந்தான். ஜோதாவுக்கு வெறுப்பாய் இருந்தது. அவன் தன்னைப் பிடிக்காதென்று சொல்லியதை ஏற்றுக்கொள்ள முடியாமல்,
“காட்ட்ட்ட்ட்(Godddddd)!”, என்று புகையிலையை கீழேப் போட்டு காலால் தேய்த்தவளைப் பார்த்து கண்களால் சிரித்த ஜெரோம்,
“எங்க ஊருல எல்லாம் பொண்ணுங்க ஸ்மோக் பண்ண ரொம்ப யோசிப்பாங்க. சொல்லப்போனா பண்ணவே மாட்டாங்க”, என்றான்.
“ஆனா, இது உங்க ஊரு இல்லையே. அண்ட் ஆண்களுக்கு மட்டும் நுரையீரல் என்ன இரும்புல செய்யப்பட்டுருக்கா? அதென்ன பெண்கள் ஸ்மோக் பண்ணா மட்டும்…”, என்று ஜோதா முடிப்பதற்குள்,
“ஆண்கள் ஸ்மோக் பண்ணலாம்னு நான் எப்ப சொன்னேன்? ஸ்மோக் பண்ற யாரையுமேப் புடிக்காது. எங்க ஊருல பொண்ணுங்க ஸ்மோக் பண்ண மாட்டங்கன்னு தான சொன்னேன்?”, மீண்டும் புத்தகத்திற்குள் நுழைய முனைந்த ஜெரோமுடன் வாதிட விரும்பாத ஜோதா,
“வேஃபல்ஸ் வாங்கப் போறேன். உனக்கும் வேணுமா?”, என்று எழுந்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் உதடு பிதுக்கிய ஜெரோமிடம், “இல்ல, அதுவும் புடிக்காது அது சாப்புடுறவங்களையும் புடிக்காதுன்னு சொல்லுவியா?”
“யு ஆர் க்ரேஸி(You are crazy)”, ஜெரோம் புருவம் சுருக்கினான்.
“ஐ நோ ஐ அம்(I know I am)”, பதிலுக்குக் காத்திராமல், தன் முகக்கவசத்தை அணிந்து கொண்டு வரிசையில் சென்று நின்றாள். வரிசையில் நின்றவளை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெரோம், புத்தகத்திற்குள் புகுந்து ரூமியுடன் உரையாட முயன்றாலும், ஜோதா செய்யும் வினோதங்களைப் பார்க்காமல் தவிர்க்க தவித்தான். இடையிடையே பார்த்தபோதெல்லாம் ஜோதா ஜெரோமையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் வேஃபல்ஸ் வாங்கி வந்தாள் ஜோதா. “பெல்ஜியம் இஸ் ஃபேமஸ் ஃபார் வேஃபல்ஸ் அண்ட் சாக்கலேட்ஸ்(belgium is famous for waffles and chocolates)”
“அண்ட் சோ சைல்ட் அப்யூஸ்(and also child abuse)”, ஒரு கையில் வேஃபல்ஸைப் பிடித்தபடி, மறுகையின் கட்டை விரலாலும் சுண்டு விரலாலும் புத்தகத்தை ஏந்தியவனை வியப்பாய்ப் பார்த்த ஜோதா,
“எப்பவுமே படிச்சிட்டு தான் இருப்பியா? அக்கம் பக்கத்துல இருக்கவங்கக்கிட்ட எல்லாம் பேசவே மாட்டியா?”, என்றாள்.
புத்தகத்தை மூடி வைத்தபடி ஜோதாவை ஒரு நொடி ஏறெடுத்துப் பார்த்தான் ஜெரோம். “என்ன பேசணும். சொல்லு”
“ஏதாச்சும்? அவங்க ரெண்டுப் பேரும் அங்கப் போயிருக்காங்க. நாம மட்டும் தான் இங்க இருக்கோம். நீயும் படிச்சிட்டே இருந்தா”. ஜெரோம் அமைதியாய் இருக்க, ஜோதாவே தொடர்ந்தாள், “முதல் நாள் உன்னப் பாத்துட்டு, என்ன தான் பணம் இருந்தாலும் இவன் இவ்வளவு சிம்பிளா இருக்கானேன்னு நெனச்சேன்”
“என்கிட்டப் பணம் இருக்குன்னு யார் சொன்னா உன் கிட்ட”, என்று ஜோதாவின் கருத்தை மறுத்து பேசுவதை உணர்த்தக் கொஞ்சம் கறாராக பேசினான் ஜெரோம்.
“இல்ல, இந்த காலேஜ் ரொம்ப பெரிய காலேஜ். பெரிய இடத்துப் பசங்க தான் இங்கப் படிப்பாங்க அப்டின்னு எங்கப்பா சொன்னாங்க. ஆனா அடுத்த நாளே பசங்க சொன்னாங்க நீ ஸ்காலர்ஷிப்ல படிக்கிறன்னு”
“திறமைசாலிகளும் படிப்பாங்க. அதுக்காக நான் என்ன திறமைசாலின்னு சொல்ல வரல. நமக்கு டேலண்ட் இருக்குன்னு காலேஜ் ஒத்துக்கிட்டா, சீட் கெடைக்கப் போகுது”, ஜெரோமின் குரலில் உள்ள தீர்க்கத்தில் உரையாடல் முரணில் முடிவதை உணர்ந்த ஜோதா மௌனமானாள். ஏனோ ஜெரோமுடன் சண்டையிடுவதை அவள் விரும்பவில்லை. பேச்சை திசைத் திருப்ப அக்கம் பக்கம் பார்வையிட்டாள். அவர்களுக்கு சற்று தொலைவில் முத்தமிட்ட ஒரு ஜோடியைப் பார்த்தவள்,
“அதுசரி. லவ் பத்தி என்ன நெனைக்கிற?”, என்றாள்.
“அதான எல்லாமே? இந்த உலகமே அன்பால ஆனது தான சூப்பர்ஸ்டார்”
“ஸ்டாப் காலிங்க் மீ சூப்பர்ஸ்டார்(Stop calling me Superstar)”
“யூ ஆர் ய சூப்பர்ஸ்டார். ஆரிண்ட் யூ? லேடி சூப்பர்ஸ்டார். (You are a Superstar. Aren’t you? Lady Superstar) அப்டி தான உங்க அப்பா எல்லா எடத்துலையும் சொல்லிட்டு இருக்காங்க”. ஜோதா பதில் உரைக்காமலிருக்க, ஜெரோம் தொடர்ந்தான். “மனிதர்கள் பழகுன முதல் மொழி காதல். அதுக்காக நாய், பூனைக்கிட்டலாம் காதல் இல்லையான்னு நீ கேக்கலாம். இருக்கு ஆனா மனிதர்கள் மாதிரி அதுங்களுக்கு அத வெளிக்காட்டத் தெரியாது. நள்ளிரவுல பர்த் டே சர்ப்ரைஸ் பண்ணத் தெரியாது. அன்பானவங்கக்கிட்ட ரொமான்ஸ் பண்ணத் தெரியாது. கிரீட்டிங்க் கார்ட் கம்பேனிப் பேச்சக் கேட்டு வாலண்டைன்ஸ் டே கொண்டாடத் தெரியாது. ஊருக்குப் போனதும் சொல்லு, அப்பப்ப கடிதம் போடு, போன் பண்ணுனு சொல்லத் தெரியாது, உடைஞ்சி அழுவுறவங்கள கட்டி அணைச்சு ஆறுதல் சொல்லத் தெரியாது. காதல், காமம் எல்லாமே உணர்வுகள் சார்ந்தது. மூளையோட டிப்பார்ட்மெண்ட்”
“நாய்ப் பூனைக்கு எல்லாம் மூளை இல்லையா என்ன?”, ஜோதா.
“இருக்கு. ஆனா நம்மளுடைய மூளை செய்யிற வேலை, நெனச்சேப் பாக்க முடியாத அளவுக்கு ரொம்ப பெருசு. காதல் பத்திக் கேட்டீல. அது எதனால ஏற்படுதுன்னா, ‘ஆக்ஸிட்டாசின்(Oxytocin)’ ஹார்மோனால தான்”
“ஆக்சிட்டாசினா?”, அந்த சொல்லையே முதல்முறைக் கேட்டவள் போல் ஜோதா விழிக்க,
“நீ நெஜமாவே ஸ்கூல் எல்லாம் போனியா?”, என்று ஜெரோம் சிரித்தான். ஒரு புருவத்தை உயர்த்தி ஜெரோமை முறைத்தாள் ஜோதா. “ஹாப்பி ஹார்மோன்ஸ் மொத்தம் நாலு. டோப்பமைன். எண்டோர்ஃபின், ஆக்ஸிட்டாசின், செரோட்டனின்(Dopamine Serotonine, Endorfine, Oxytocine). உன்ன சந்தோசமா வச்சிக்க, இந்த நாலு ஹார்மோன்ஸ் தான் எல்லா வேலையையும் செய்யிது. எக்சர்சைஸ் பண்ணா, அதிகமா சிரிச்சா ஒரு வேலைய செஞ்சி முடிச்சா, நமக்கு ரொம்பப் பிடிச்சத செஞ்சா, செக்ஸ் வச்சிக்கிட்டா, ஷாப்பிங்க் போன அப்பலாம் உடனே நம்ம மூளைல எண்டார்ஃபின் சுரக்கும். இதெல்லாம் திரும்பத் திரும்ப செய்யணும் அப்படின்னு நெனைக்க வைக்கிற ஹார்மோன் டோப்பமைன். டோப்பமைன தான் முக்கியமா ஹாப்பி ஹார்மோன்னு சொல்லுவோம். அடிக்ட்டிவ் ஹார்மோன்னும் சொல்லலாம். செரோட்டனின ஃபீல் குட் ஹார்மோன்னு சொல்லுவோம். நல்ல தூக்கம், பிடிச்ச உணவு, படிச்ச புத்தகங்கள் இதெல்லாம் செரோட்டனின அதிகமாக்கும். ஒரு முறை செஞ்சா செரோட்டனின், பலமுறை செஞ்சா டோப்பமைன். கடைசியா, நீ கேட்ட ஆக்ஸிட்டாசின். இதுக்கு பேரு தான் லவ் ஹார்மோன். உனக்குப் பிடிச்சவங்கக் கூட பேசுறப்ப, பழகுறப்ப இது சுரக்கும்”
“இவ்ளோ இருக்கா?”, என்று வாய்ப்பிளந்தாள் ஜோதா.
“இன்னும் நெறையா இருக்கு. இப்பக் கூட உனக்கு இதெல்லாம் சொன்னேன்ல, இதுலையும் ஒரு சுயநலம் இருக்கு. எனக்கு செரோட்டனின் சுரந்திருக்கும். மூளைல இருக்க, லிம்பிக் சிஸ்டம் தான் நம்ம உணர்வுகளக் கட்டுப்படுத்துற மிஷின்னு சொல்லலாம். அது தான் நம்மளுடைய ‘நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்’ எல்லாத்தையும் கட்டுப்படுத்துது. நமக்குத் தேவையான ஹார்மோன் அளவ உணர்ந்து அதுக்கு ஏத்த ஹார்மோன அனுப்புறது தான் அதோட வேலை. உனக்குப் பிடிச்ச ஒருத்தர நீ தொடும்போது, உடனடியா உன் உடம்புக்குக் கொஞ்சம், ‘செரோட்டனின்’ அனுப்ப அது கட்டளையிடுது. வலி, கோபம், பாசம், வெறுப்பு எல்லாமே ஆளுக்கு ஆள் மாறுபடும் இல்லையா, அது எல்லாமே இந்த ‘லிம்பிக் சிஸ்டம்’ பொருத்து தான். இன்னொரு இண்டரஸ்டிங்க் ஃபேக்ட் சொல்லுறேன், ‘லை டிடெக்டர்’ எப்படி வேலை செய்யும் தெரியுமா?”
தெரியாது என்பது போல் ஜோதா தலையசைக்க,
“பொய் சொல்லும்போது உடல் வேர்த்து பதட்டம் ஆகுறோம். அதுவும் நாம கண்காணிக்கப் படுறோம் அப்படின்னு நெனைக்கும் போது நம்ம உடல்ல, நம்மளையே அறியாம சில மாற்றங்கள் ஏற்படுது. அதனால உண்டாகுற மின்தடை மாற்றத்த வச்சி தான் ஈசியாக் கண்டுபிடிக்கிறாங்க. சாரி எங்கயோ ஆரமிச்சு எங்கயோ வந்துட்டேன். லவ் பத்தி என்ன நெனைக்கிறன்னு தான கேட்ட? அது தான் இந்த உலகத்தையே இயக்குதுன்னு நம்புறேன்”
ஜெரோமை நினைத்து ஜோதாவுக்கு வியப்பாக இருந்தது. எப்படி இத்தனைத் தரவுகளை இவனால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது என்ற ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்ப,
“அங்க ரெண்டுப் பேரு கிஸ் பண்ணதப் பாத்துதானக் கேட்ட?”, என்றான் ஜெரோம்.
“ஆமா”, என்று தலையசைத்த ஜோதா, “குயர் லவ் கூட இப்படி தான் வேலை செய்யுமா என்ன?”, என்றாள்.
“ஸ்ட்ரெயிட் லவ், குயர் லவ், பெட் லவ்(straight love, queer love, pet love) எல்லா லவ்வும் இப்படி தான் வேலை செய்யும்”. மீண்டும் மௌனம். நிமிடங்கள் கடந்த இடைவெளிக்குப் பின், “ஏன் மனிதர்கள் எல்லாரும் பிரிவுக்கு பயப்புடுறாங்கன்னு என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா? இது நூற்றாண்டு காலமா நம்ம மரபுல கடத்தப்படுற செய்தி. ஆதி காலத்துல மனித இனம் கூட்டம் கூட்டமா தான் வாழ்ந்துச்சு. சாப்புட, தூங்க, வேட்டையாட அப்டின்னு எல்லாத்துக்கும் ஒண்ணா தான் போனாங்க. அப்ப அந்தக் கூட்டத்துல ஒருத்தன மட்டும் யாருக்கும் புடிக்கலன்னா, லைக், அவன் செய்யிற செயலோ, இல்ல நடந்துக்குற விதமோப் புடிக்கலன்னா, அவன அந்தக் கூட்டத்தவிட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க. இப்பவும் இந்தப் பழக்கம் ஆப்பிரிக்கா பழங்குடியினர் கிட்ட இருக்கு. அப்படித் தனித்து விடப்படுற மனிதன், விலங்குகள் கிட்ட மாட்டியோ, இன்னொரு கூட்டத்துக்கிட்ட மாட்டியோ இறந்து போயிடலாம், அவன் தனி மனிதனா உயிர் வாழுறது ரொம்ப கடினம். நம்ம மூளை எப்பவுமே நாம உயிர் வாழ்தலப் பத்தி தான் சிந்திக்கும். அதோட வேலை அது தான். எங்க நம்மளால தனிச்சு இயங்க முடியாதோ அப்படின்னு பயந்த மூளை, மனிதன தனியாப் போக விடாம பாத்துக்க, எல்லா வேலையும் செய்யும். அதனால தான் மனிதன் பிரிவுக்கு பயந்தான். பயப்படுறான்”
“ஆனா இப்ப ஒரு மனுசன் தனியா வாழலாமே. நோ ஃபிரெண்ட்ஸ், நோ ஃபேமிலி(No Friends, No family). உலகமே இப்ப கைக்குள்ள வந்துருச்சு, இப்ப யாருமே இல்லாம ஒரு மனிதனால, தனியா வாழ முடியுமே?”, ஜோதா.
“முடியும். ஆனா காலம் காலமா நம்ம மரபுல இருந்த பயம் இன்னைக்கும் நம்மளத் துரத்திக்கிட்டே இருக்கு. நைட்டு தூக்கத்துல விழுற மாதிரி கனவு வருமே, அது கூட அப்படி தான். எப்பவோ மரத்துல தூங்குன மனித இனம், பலமுறை கீழ விழுந்து இறந்திருக்கும். ஆனா இன்னைக்கும் நாம, கீழ விழுற மாதிரி கனவு காணுறோம் இல்லையா?”, அவன் பேச்சை இடைமறிப்பது போல், ஜெரோமின் செல்போன் சிணுங்கியது.
“இங்க பக்கத்துல தான் இருக்கோம் ஷ்ராவனி. இல்ல இல்ல நீங்க அங்கயே இருங்க. நாங்க வர்றோம்”
பேச்சை உணர்ந்துகொண்ட ஜோதா எழுந்து அவனுக்காகக் காத்திருந்தாள். ஜோதாவுக்கு ஜெரோமின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது. அவனோடு இன்னும் பேச வேண்டுமெனத் தோன்ற,
“உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு”, என்றாள். புன்னகைத்த ஜெரோம்,
“இல்ல. தெரிஞ்சத மட்டும் தான் நான் சொன்னேன்”, என்றான். இப்போது ஜோதாவின் ஃபோன் ஒலித்தது.
“ஹலோ… டாடி…”, ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே கேட்டுக்கொண்டு மட்டும் நின்றவள், “இல்ல டாடி, இங்க சும்மா சாப்புட வந்தோம்…” எனத் தொடங்கினாள். சில நொடிகளில், “நான் எங்கயுமே வெளிய வரக்கூடாதா? ஜெயில்ல இருக்கனா?”, அவள் குரல் மெல்ல உயர்ந்தது, “சரி நான் இனிமே எங்கயும் போகலல. போதுமா?”, என்று வெறுப்போடு ஃபோனை அணைத்து உள்ளே வைத்தாள். பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் ஜெரோமும் மௌனமாய் நடக்க, முனுமுனுப்போடு ஜோதா உடன் வந்தாள்.