நூலகத்தில், புரட்டுபவர்களுக்காக புத்தகங்கள் காத்திருக்க, அதன் நடுவில், எதிர் எதிர் இருக்கையில் ஜெரோமும் ஷ்ராவனியும் அமர்ந்திருந்தனர். ஷ்ராவனி செல்போனில் விரல்களால் பேசிக் கொண்டிருக்க, புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த ஜெரோம் தலை நிமிர்த்தாமல், “சுனில் என்ன சொன்னான்?”, என்றான்.
“புடிச்சிருக்குன்னு சொன்னான். எனக்கும் புடிச்சிருக்குன்னு சொன்னேன். அப்பறம் சும்மா சுத்திட்டு இருந்தோம். அவ்வளோதான். ஜோதா பேசுனாளா?”, ஷ்ராவனி.
“யா! கொஞ்சம். நான் தான் அதிகம் பேசிட்டு இருந்தேன்”
“நல்லா காண்டேக்ட்(contact) வச்சிக்கோ. உன்ன மாதிரி ஆளுக்கு எல்லாம் பின்னாடி உதவியா இருக்கும்?”
“அதென்ன என்ன மாதிரி ஆளு?”
“சாதிக்கணும்னு கனவோட இருக்கவங்க”, ஷ்ராவனி.
“ஓஹ் அப்படி சொன்னியா. அப்படியே இருந்தாலும் அவ உதவி எனக்கெதுக்கு? என்னால சாதிக்க முடியாதா என்ன? அவளே அவங்க அப்பா உதவில பெரியாள் ஆகிருக்கா”
“அடப்பாவி. அவ மேல ஏன் டா உனக்கு இவ்வளவு வெறுப்பு?”
“வெறுப்பெல்லாம் இல்ல ஷ்ராவனி. பெருசா விருப்பு இல்ல. அவ்வளோதான்”, ஷ்ராவனி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஜெரோமை முறைக்க, “நேத்து நீங்க உள்ளப் போனதும் கொஞ்சம் ஏத்தமா தான் பேசுனா. நான் கடுப்பாகி சில வித்தைகளக் காட்டுனேன். அப்படியே அமைதியாயிட்டா”, என்று புன்னகைத்தான்.
“உண்மையாவே அவ பெரிய ஆளு தான் டா”
“இருந்துட்டுப் போகட்டுமே. அவளுக்கு அவ பெரியாளுனா, நமக்கு நாம பெரியாளு தான்”
“சுனில் சொன்னான், அவன்கிட்ட தான் ஜோதா ஓரளவு க்ளோஸ். அவன்கிட்டயே அவங்களோட செக்யூரிட்டி நம்பர் தான் இருக்கு. அவங்க நம்பர் இல்ல. இவ்வளவு ஏன், காலேஜ் குரூப்ல கூட அவங்க நம்பர் குடுக்கல”
“ஏனாம்மா?”
“சேஃப்ட்டி(safety). யார்கிட்டையும் நம்பர் குடுக்க மாட்டாங்களாம். இன்ஸ்டால கூட பாரு, தன்னோட ஃபிரெண்ட்ஸயே ஃபாலோ(follow) பண்ணிருக்க மாட்டா. ‘நாமெல்லாம் அவ லைஃப்ல ஒரு பாசிங்க் க்ளௌட்ஸ். அவக் கூட படிக்கிறதே நமக்கெல்லாம் பெருமைன்னு நெனச்சிட்டுப் போகணும் அவ்ளோதான்’ அப்டின்னு சுனில் அன்னைக்கு சொல்லிட்டு இருந்தான்”, ஜெரோம் அவள் சொல்வதைப் ஏளனப் படுத்தும் விதமாய்ப் புன்னகைத்தான்.
*
உணவு உண்ணும் இடம் ஆட்கள் அதிகமின்றிக் காணப்பட்டது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருக்க, வாசலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த ஜோதா, தன்மேல் நிழல் விழுவதைக் கண்டு திடுதிப்பென்று செல்போனை அணைத்தாள். பின்னால் இருந்து, கீர்ட்ச்சே, மிச்சி, கெராவுடன் வந்த சுனில்,
“போன்ல என்னப் பாத்துட்டு இருந்த?”, என்றான்.
“எதுவும் இல்லையே”, ஜோதா இயல்பான உணர்ச்சிகளைக் காட்டத் தெரியாமல் தடுமாறினாள்.
“இல்ல. நான் பத்தேன். இன்ஸ்டாகிராம்ல யாரோட போட்டோவையோப் பாத்துட்டு இருந்த?”
“யாரையும் பாக்கலயே”, நேரடியாகப் பார்க்கத் துணிவில்லாமல் பார்வையை ஜன்னலுக்கு வெளியே செலுத்தினாள்.
“அப்பறம் ஏன் நாங்க வந்ததும் ஃபோன லாக் பண்ண? எங்க ஃபோனக் காட்டு?”, மிச்சி சேர்ந்துகொள்ள,
“கமான் கைஸ்”, என்று எழுந்தவளின் கைகளைப் பிடித்த கீர்ட்ச்சே,
“ஆஹான். அப்ப யாரோ இருக்காங்க. இல்லனா வேக வேகமா லாக் பண்ணுவியா?”, என்றாள்
“நீங்களா எதாச்சும் கற்பனைப் பண்ணாதீங்க. நான் எதார்த்தமா தான் ஃபோன லாக் பண்ணி வச்சேன்”
“நீ உடனே லாக் பண்ணத நானும் பாத்தேன். கம் ஆன் ஜோதா. ஏன் மறைக்கிற?”, சுனிலுக்கு பதிலேதுமின்றி சிரிப்பால் ஜோதா சமாளிக்க, “ஜோதா இன் லவ்(Jodha in Love)”, என்று கெரா தொடங்கினான்,
“ஜோதா இன் லவ். ஜோதா இன் லவ்”, என்று மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.
“அதெல்லாம் எதுவும் இல்ல”, என்று அவர்களைத் தள்ளிக் கொண்டு தனியாய் வந்த ஜோதாவுக்கு சிரிப்பு தான் வந்தது. காதல் இல்லை என்று அவளுக்கும் தெரிந்திருந்தாலும் அந்த உணர்வை என்னவென்று சொல்லத் தெரியாமல் தவித்தாள் ஜோதா. தனியே நகர்ந்து வந்து மீண்டும் தன் செல்போனை எடுத்துப் பார்த்தாள், இன்ஸ்டாகிராமில் எப்பொழுதோ பதிவேற்றப்பட்ட புகைப்படத்தில், ஜெரோம் சிரித்துக் கொண்டிருந்தான்.

செல்போனை மூடி வைத்துவிட்டு மீண்டும் கூட்டத்தில் ஐக்கியமானாள்.
“எங்க இருக்க?”, செல்போனில் சுனில் பேசிக்கொண்டிருக்க,
“லைப்ரரில”, என்றாள் ஷ்ராவனி எதிர்முனையில்.
“என்ன லைப்ரரி எல்லாம்? படிக்கிறியா என்ன?”
“இல்ல இல்ல, ஜெரோம் படிச்சிட்டு இருக்கான். நான் சும்மா துணைக்கு உக்காந்துருக்கேன். வர்றதுனா வா”, என்றாள். ஃபோனை அணைத்தவன்,
“நீங்க கிளாஸ் போங்க, நான் லைப்ரரி வரைக்கும் போயிட்டு வரேன்”, என்று எத்தனிக்க,
“லைப்ரரியா? எதுக்கு?”, என்றாள் ஜோதா.
“ஷ்ராவனி வர சொன்னா”, சுனில்.
“இரு நானும் வரேன்”, என்று எழுந்த ஜோதா, எப்படியும் அங்கே ஜெரோமின் இருப்பைக் கணித்திருந்தாள்.
நூலகத்தில் அங்கங்கே அமர்ந்திருந்த ஒரு சிலர் புத்தகங்களோடு மௌனமாய் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு புறம் சுவருக்குப் பதில் இருந்த கண்ணாடி, திரைச் சீலை உடுத்தியிருக்க, உள்ளுக்குள் கதகதப்பாக இருந்தது. புத்தகங்கள் அனைத்தும் முன்பு கைவிட்டப் படிப்பை ஜோதாவுக்கு நினைவூட்டின. எதையோக் குறித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்த ஜெரோம், எழுதி முடித்து மீண்டும் தன் பேனாவை இறுக மூடி வைப்பதை, விழிகொட்டாமல் பார்த்த ஜோதாவை, உதடுகளுக்கு வலிக்காமல் புன்னகையால் வரவேற்றாள் ஷ்ராவனி. வந்திருப்பவர்களைத் தலையுயர்த்திப் பார்த்த ஜெரோமிடம் ஜோதா ஒரு குறும்புன்னைகையை நீட்டினாள். ஆனால் அவன், எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மீண்டும் தன் புத்தகத்திற்குள் நுழைய, ஜோதாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ‘பாவி’ என்றாள் கண்களால். இத்தனை ஆண்டு காலத் திரைத்துறையில் கூட தன்னை, யாருமே இப்படி நடத்தியதில்லை என்ற எண்ணம் அவளுக்கு வெறுப்பைக் கொடுத்தது. ஜெரோமைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. நேற்று நன்றாக பேசியவன், இன்று ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என தனக்குத் தானே எண்ணினாள்.
ஆயினும் ஜெரோமையே இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அழகாய் இருப்பவர் செய்யும் குற்றங்கள் ஆண்டவனுக்கு அனுப்பப்படமாலே மன்னிக்கப்படுக்கின்றன. ஆமேன்!!!