அவள்,
மத்தியச் சோற்றுக்கே
பத்தியச் சோற்றைப்
பழகி வாழ்ந்தவள்!
அவன்,
நண்டு நத்தையெனக்
கண்டு களிப்பதை
உண்டு கொளுத்தவன்!
பன்னீரே அவளுக்கு
பட்டர் சிக்கன்!
சோயா உருண்டையே
சுக்கா மட்டன்!
அவனோ,
கட்சிமாறி சைவம் சேர்ந்ததால்
முட்டையோடே பந்தத்தை
முறித்துக் கொண்டவன்!
அவள்,
கடுகே காரமென்று
கண் கசக்கும் அய்யமாரு!
அவன்,
கறிக்குத் தாகமென்று
கள் அடிக்கும் அய்யனாரு!
வெளியே சென்றாலே
வெஜ்ஜா? நான் வெஜ்ஜா?
பட்டிமன்றம் தான்!
‘ஜீவகாருண்யம்’
அவள் வாதம்!
ஒரு உயிருக்கு
இன்னொரு உயிரை
உணவாய் படைத்ததே
இயற்கை தான்
அவன் வாதம்!
வாழைக்காய் மீன்
பருப்புக் ‘கோலா’ என
அசைவப் பெயர்களைச்
சைவத்திற்குச் சூட்டி
அழகு பார்ப்பாள்,
வளைந்து கொடுத்ததாய்
வாதிடுவாள்!
பாலுண்ணும் போது
இறைச்சியுண்ணலில்
பாதகம் இல்லையென
அவன் நியாயம் பேசுவான்!
உடன்பட்டு இருவரும்
உண்ணத்தகுந்தது எனச்
சைவத்திற்காக அவள்
சண்டை போடுவாள்!
கட்டிலிலும்
கடி ஜோக்கிலும்
அசைவமே உயர்ந்ததென்பான்
அவன்!
இறுதியில்,
அவரவர் உணவு
அவரவர்க்கு!
எந்த சிக்கலுமில்லை
கட்டாயப்படுத்தாத வரை!
யாருக்குப் பிடிக்காது
கட்டாயப் படுத்தாதவரை?
அதனால் தான்,
திருமணப் புகைப்படத்தில் கூட
ஊட்டிவிடும் படலத்தை
உழற்றிவிட்டு தவிர்த்தனர்!
இத்தனை வேறுபாட்டில்
எப்படி,
காதல் நாடகம் அங்கே
களைகட்டியது?
ரெட்டை மாட்டுவண்டியில்
நெட்டைக் குட்டையென
வாழ்ந்த இருவருக்கு
வைபவம் என்றால்
காதல் சம்மதிக்குமா?
மாறுபாட்டிலும்
மலர்வதால் தானே – இன்னும்
காதலின் பெருமை
காப்பாற்றப்படுகிறது?
அதிலும்,
எத்தனை வேறுபாட்டிலும்
தான் விரும்புபவர்
தன்னை விரும்புகிறார் என்ற
செருக்கு கொஞ்சம்
இருக்குமாயின்,
காதல் நீதிமன்றத்தில்,
வாதங்கள் வாய்தா
வாங்கிக் கொள்ளும்!
இன்னும் சில ஆண்டுகளுக்கு
வழக்கு ஒத்தி வைக்கப்படும்!
குறள் 1193:
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
பொருள்:
தாம் விரும்புபவர், தம்மை விரும்பினால், அத்தகையோர்க்கு நன்றாக வாழ்கின்றோம் என்ற செருக்கு இருக்கும்.

Art: Sowmiya Iyal