கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே(1)
உலகம் முழுவதையும் தானே உருவாக்குவதாலும்,
அதை நிலை பெற வைப்பதாலும், அதை அழிப்பதாலும், அதிலிருந்து நீங்காமல்
அளவில்லா இவ்விளையாட்டினை உடையவர் அவரே
தலைவராவார்; அத்தகைய தலைவரிடமே நாங்கள் அடைக்கலம் ஆவோம்.
உலகம் யாவையும் – உலகம் மொத்தத்தையும்; தாம் உள ஆக்கலும் – தாம் உள்ளதாய் ஆக்குவதும்; நிலை பெறுத்தலும் – நிலை பெற வைப்பதும்; நீக்கலும் – நீக்குவதும்; நீங்கலா – என்றும் அதிலிருந்து நீங்காமல்; அலகு இலா – அளவு இல்லா; விளையாட்டு உடையார் – விளையாட்டினை உடையவர்; அவர் தலைவர் – அவரே தலைவர்; அன்னவர்க்கே – அத்தகையவர்க்கே; சரண் – சரணடைவோம்; நாங்களே – நாங்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் ஆண்டவனுக்கு எளிது என்பதை விளக்க ‘விளையாட்டு’ என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறார் கம்பர். இம்மூன்றை விளையாட்டாய்ச் செய்பவனே ஆண்டவன். அவனிடமே நாங்கள் சரணடைவோம் என்கிறார் கம்பர். இங்கே அலகு என்றொரு சொல்லை கவனித்திருக்கலாம். தமிழ் வழி கல்வி படித்திருக்கும் வாசகர்களுக்கு இந்த சொல் புதியது அன்று. Vector என்ற சொல்லை அலகு என்று கூறி கணித பாடத்தில் படித்திருப்பர். இது தமிழில் வெகு பரவலாக வழக்கில் இருந்த சொல்லாகும். ஆனால் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது.
தேகம் மாண்டாலும், வேகம் குறையாமல் சுற்றும் புவியின் தாகம் தீர்க்கத் தண்ணீர் வார்த்தும், சோகம் சூழக் கண்ணீர் வார்த்தும், உழைத்துக் களைத்த உன்னத இனத்தை, அழைத்துப் பாடல் அருளிய கைகளுக்கே, அமர இருக்கைக் கொடுக்கிறது காலம் என்னும் கலையரங்கம். ஆம்! கவிதைகள் கொடுப்பதாலே கவிஞர்கள், காலம் கடந்தும் ஞாலம் போற்றத் திகழ்பவர்கள். ஆனால் ஒரு கவிஞன், தன்னையேக் காலக் கணிதம் என்கிறான். அஃதோடு நிறுத்தாமல், கம்பனைப் போலவே தன்னையும், அனைத்தையும் படைத்த இறைவன் என்கிறான்.
“கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் நானுமே அறிந்தவை அறிக“
என நீள்கிறது அந்தக் கவிதை. இது, கண்ணதாசன் எழுதிய ‘காலக் கணிதம்‘ என்கிற கவிதையில் இடம்பெறும் வரிகள்.
இதேக் கருத்தை, இன்னொரு பாடலிலும் காணலாம். ‘ஆயிரத்தில் ஒருவன்‘ படத்தில் வரும் ‘ஓஹ் ஈசா ஓஹ் ஈசா‘ பாடலில்,
“நான் படைப்பேன் உடைப்பேன்
உன் போலே கோடி செய்வேன்
நான் எடுப்பேன் கொடுப்பேன்
இளைப்பாறத் தான்“,
என்ற வரிகளில் சர்வம் முன் நான் சளைத்தவனில்லை என எண்ணும் கலைஞனின், கர்வம் வலுப்பதைக் கண்கூடக் காணலாம்.
காலக் கணிதம்
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் நானுமே அறிந்தவை அறிக
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுங்கள் தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்
கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்.
– கவிஞர் கண்ணதாசன்