காவலர்கள்!

கோடையில் காய்வதனால்
குலைந்திடுவானோ?
வாடையில் தேய்வதனால்
வாடிடு வானோ?
மேடையில் பிறர் ஏற
மெனக்கடல் கொள்வான்!
ஓடையில் ஓரிலையாய்
வரும்வழி செல்வான்!

முயலாக ஓடினாலும்
முப்பொழுதும் ஓயவில்லை; வாழ்க்கை
புயலாக மாறியதால்
பூப்பறிக்க நேரமில்லை; முரட்டுச்
செயலாக வாழ்வதனால்
சிரிப்பதற்கும் காலமில்லை! சிரிப்பு
அயலாகிப் போனதனால்
அழுவதற்கும் தேவையில்லை!

புத்தியே ஆயுதமாம்;
பூச்சாண்டி காட்டுகிற
கத்தியே வந்தாலும்
கையோடு விளையாடும்
லத்தியே குலதெய்வம்;
லாக்அப்பைக் கண்டதனால்
சுத்தியே அலைகிறது
சுதாரித்தே வாழ்ந்தவிழி!

(வேறு)

காவலன் இன்றிக்
கட்டுகள் இலையே! அது
கோவலன் இல்லாக்
கண்ணகி நிலையே!

சிவனிடம் இருந்ததொரு
சிறந்த பண்பு – அது
இவனிடம் உள்ளதெனில்
எவரறி வாரோ?

கலவரமோ? பெயர்தெரியா
கட்சிகளின் ஊர்வலமோ? பகை
நிலவரமோ? இல்லையில்லை
நிற்காமல் போர்வருமோ?

ஊருக்கு வருகின்ற
ஒவ்வொரு துயரையும் – தன்
பேருக்குப் பின்வாங்கும்
பெரியமனம் கொண்டோன்!

பின்வாங்கும் போதுமிவன்
பின் வாங்க மாட்டான்! இந்த
மண் தூங்கத் தான்தினமும்
கண்தூங்க மாட்டான்!

உறவுகள் எல்லாம்
ஒருபடி கீழே! நள்
இரவுகள் தானிவன்
உறங்கிடும் தோளே!

பொங்கலிலும் விடாமலே
பொறுப்பு வரும்; வீடு
தங்கலிலும் பணிச்சுமை
தவிப்பு தரும்;

ஆயிரம் இடர்கள்
வாங்கிய போதும் – நமை
தாயினும் இவர்கள்
தாங்கிய போதும்,

கையூட்டு என்னும்
காரணம் சொல்லி – உலகம்
பொய் ஊட்டி மெல்லப்
போகிறது எள்ளி!

காப்பு இல்லையெனில்
கண்டிப்பாய் மாண்டிருக்கும்
மூப்பு கண்டாலும்
முடியாத இவ்வுலகம்!

பயிருக்கு வேலி;
படைக்குக் கேடயம்;
வயிறுக்கு உமிழ்நீர்;
வாழ்வுக்கு அச்சம்;

நெல்லுக்கு உமி;
நீதிக்கு அறம்;
உள்ளுக்கு தவம்;
உழவுக்கு மழை;

இது
பேர்மாற்றாம் கண்டாலும்
பெரிதான ஆதிமரம்; இந்த
ஊர்மாற்றம் அடையாமல்
உதைக்கின்ற போதிமரம்;

Shopping Cart
Scroll to Top