உன் ஒற்றைக் கடைவிழி
வெல்லமாய் என்னை
இனிக்க வைக்கிறது!
உன் இன்னொரு கண்ணோ
விடமாய்ப் பாய்ந்து
விரைக்க வைக்கிறது!
ஒரு கையில்
மது கோப்பையையும்
இன்னொரு கையில்
மருந்து குப்பியையும்
வைத்திருக்கும்
மந்திரக் காரியா நீ?
இரண்டு கண்களில்
வெவ்வேறு பார்வையென
விளையாட்டாய்ச் சொன்னாலும்
‘நாங்க இருக்கோம்’ என்று
வாசலில் வந்து நிற்கிறது
வாசன் ஐ கேர்!
அவர்களின்
கண்ணாடிப் பார்வைக்குள்
தென்படாமல் எப்படி
தெருக்களில் நடமாடுகிறாய்?
கொரோனா,
உலக நாடுகளை
உலையில் ஏற்றச்
சீனம் கொடுத்த
சீதனம்!
முதலில் அது
ஒவ்வொரு பகுதியாய்
ஆட்கொண்டது!
பிறகு மெல்ல
ஒவ்வொரு நாட்டிலும்
ஆட்கொன்றது!
தனக்குள்ளே ஒரு
எதிர்மத்தை உண்டாக்கி,
தன்னைத் தானே
தகவமைத்துக் கொண்ட
கொரோனா உந்தன்
கொள்கை பரப்புச் செயலாளரா?
பச்சோந்திகளுக்கு நீ தான்
பார்வை வகுப்பெடுத்தாயா?
விடியலில்
சூரியனை வாசலில்
காத்திருக்க வைத்துவிட்டு,
வெண்ணிலவையும்
வீட்டுக்கு அனுப்பாமல்
பிடித்து வைத்திருக்கும்
வைகறை பூமி
உன்னை ஒத்திருப்பதாய்த் தான்
உள்ளம் உவமை செய்கிறது!
ஆனால்,
‘உயர்ந்ததன் மேற்றே’ என
உவமையை விளக்கும்
தொல்காப்பியம் இங்கே
தோற்றுப் போனதாய் கருதுகிறேன்!
எந்த உவமையும் உன்னினும்
ஏற்றமாய் இருக்கப்போவதில்லை!
இறக்கத்திற்கும் பொருந்தும் என
இனியேனும் –
விதிவிலக்கொன்றை
விளம்புதல் நலம்!
அழும் பிள்ளைக்குக்
கசப்பான மருந்துக்குப் பின்
அம்மாக் கொடுக்கப்போகும்
தேக்கரண்டி சர்க்கரையைப்
போலத் தான்
நீ தரும் வேதனைகளும்!
விண்ணப்பம் தராமல் நீ தரும்
வேதனைக்குப் பின்னால்
விருந்து கொடுத்து
வியப்பில் ஆழ்த்தாவிட்டாலும்
மருந்து கொடுத்து என்னை
மரணிக்காமல் கா!
தானங்களில் சிறந்ததென்று
சிலர் அன்னதானத்தைச்
சொல்வதுண்டு!
இல்லை,
சமாதானம் தான்
தானங்களில் சிறந்தது!
அன்னதானத்தில்
நீளும் கைகளுக்கு
நிச்சயம் புரியாது
ஏந்தும் கைகளின் நிறைவு!
ஆனால்,
சமாதானத்தில்?
எய்தும் நிறைவு
இரண்டு பக்கமும்
சரிபாதியாகிறதல்லவா?
முரணுக்குப் பின் கிடைக்கும்
முத்தங்களில் தானே
மோகம் மிகுந்திருக்கும்?
கூடல் விதைக்குத் தான்
ஊடல் குழிபறிக்கின்றாய் எனில்
முன் கூட்டியே சொல்லிவிடு
மூங்கில் யாத்திரைக்கு
முழுச் சம்மதத்துடனே
ஆயத்தம் ஆகின்றேன்!
குறள் – 1091:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
இவளுடைய மையுண்ட கண்ணில் இரண்டு விதமான பார்வை உள்ளது. ஒரு பார்வை நோய் செய்கிறது; இன்னொரு பார்வை அந்த நோய்க்கு மருந்து தருகிறது.