வாலியும் கதிரும்-2

1661145905092

முந்தைய அத்தியாயத்தில் சொன்னது போல, கதிருடன் வாலி கொடுத்தக் காதல் காவியங்கள் தான் எத்தனை எத்தனை? காதல் சாயத்தில் கசக்கிப் பிழிந்த துணிகளைப் போல, மொத்தப் படத்தையும் காதலால் முழுக்காட்டி இருப்பார்கள், கதிரும் வாலியும். இவர்கள் இப்படி இருக்க, ரகுமான், எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்திருப்பார்.

‘காதல் தேசம்’ முக்கோணக் காதலுக்கு முதல்முறை அல்ல, ஆயினும், ரகுமானும் வாலியும் அதை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது தமிழ் சமூகத்தின் தாரக மந்திரம். நண்பன் கேட்டால் எதையும் கொடுப்பேன் என்னும் நிலையில் இருக்கும் ஒருவனிடம், அவன் நேசித்தப் பெண்ணையே கொடு என்கிறான் அவன் நண்பன். ‘ஓ வெண்ணிலா இரு வானிலா’ என்று முதல் வரியிலே மொத்ததையும் சொன்ன வாலி, இறுதியில்,

“எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே

தருகின்ற பொருளா காதல்? இல்லை!
தந்தாலே காதல் காதல் இல்லை!” என்று எழுதியிருப்பார்.

காதல் என்பது இன்னொருவரை அடைதல் அல்ல, தன்னை இழப்பது. இழந்த தன்னை எங்கேனும் தேடலாம் என்றால், மனம் மீண்டும், இழப்பதற்குக் காரணமானவர்களின் அடிகளிலேயே சென்று அடைக்கலம் தேடுகிறது. நினைவுகளில் நீந்தத் துடிக்கும் அது, உண்பதைக் கூட ஒரு பெரும் வேலையாய் நினைக்கும், அதை வாலி,

“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்” என்று வெறும் காற்றாக கவிஞர் கொடுக்க, அதை இசையென்னும், வேய்க்குள் புகுத்தி வித்தகம் செய்திருப்பார் ரகுமான். எவ்வளவு நிசப்தமாக மனநிலை இருந்தாலும், காதலின் பிரிவு, அதைக் கலைத்து விடுகிறது. இணை இல்லாமல் இருக்கும் நாளெல்லாம் யுகம் யுகமாகத் தான் கழிகிறது என்று இப்போது எத்தனைக் கவிஞர்கள் சொன்னாலும், அதை அப்போதே சொன்ன வள்ளுவன் தான் இதிலும் முன்னோடி.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து(குறள் 1278)

நேற்று தான் பிரிந்தார் காதலர் ஆனால் ஏழு நாட்களாய் அவர் இல்லாததுபோல் தோன்றுகிறதே என்று பிரிவுத் துயரில் நிலையாய் நில்லாமல் சரிவுப் பாதைக்குள் சரிகிறாள் காதலி என்று வள்ளுவன் எழுதிய வார்த்தைகளுக்கு ஆடை மாற்றி திரைப்படம் என்னும் மேடை ஏற்றி இருப்பார் கவிஞர் வாலி. அதற்கு, மிகப்பெரும் பாடகரான ஓ.எஸ். அருணைத் திரைக்கு அழைத்து வந்து புதுமை செய்திருக்கும் ரகுமான், அவரோடு பாடும் இன்னொரு குரலாய், எஸ்.பி.பி என்னும் வேழத்தை அழைத்து வந்து விளையாட விட்டிருப்பார். இரு நாயகனுக்கும் இரண்டு குரல்களும் மாறி மாறி வந்தபோதும், ஓரிடத்தில் ரகுமான் செய்த முயற்சி, எத்தனைப் பேருக்கு விளங்கியதென்று தெரியவில்லை.

“நிமிஷங்கள் ஒவ்வொன்றும்” என்று அருண் தொடங்க,

“வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே” என்று எஸ்.பி.பி முடிப்பார். மீண்டும் அருண்,

“வருஷங்கள் ஒவ்வொன்றும்” என்று தொடங்க,

“நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே” என்று எஸ்.பி.பி முடிப்பார். இறுதியில்,

“மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்” என்ற வரிகள் தான், ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ பாடலின் விதை என்று தோன்றுகிறது. முட்டாள்த் தனங்களுக்குள் மூழ்கிக் கிடந்தாலும், அதை சுகம் சுகம் என்று சுகிக்கிறது காதல். மெய்யாக விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை, பொய்யாகவாவது விரும்பு அதை நினைத்தே என் வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்துகொள்கிறேன் என்னும் காதலன் காதலில் தான் எத்தனை மூடத்தனம்? இருந்தும் அது ஒரு இன்பநிலையே.

மூவர்க் கூட்டணியில் எல்லாப் படங்களுமே சிறந்ததென்றாலும், அதில் முத்திரைப் பதித்தது ‘காதலர் தினம்’ தான். அதில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களையும், இன்னும் பல தலைமுறைகளின் காதலுக்கு உதவும் கடிதங்கள் எனலாம். ஆயிரம் மலர்கள் இருந்தும், ரோஜாக்கள் தான் காதலுக்கு தூது செல்கின்றன. தன் காதலிக்கு எல்லோராலும் தாஜ்மகால் கட்ட இயலாது, ஆதலால் ஒரு எளியவன் கொண்டு வந்த சின்னமே ரோஜா. அப்படி ரோஜாவால் அறிமுகமான ஒரு காதல் ஜோடிக்கு, ‘ரோஜா ரோஜா’ என்று தொடங்கிய பாடலில்,

“உடையென எடுத்து
எனை உடுத்து
நூலாடை கொடி மலர்
இடையினை உறுத்தும் ரோஜா” என்று எழுதியிருப்பார். ‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு’ என்று இதையும் வள்ளுவனிடம் கடன் வாங்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

எதையும் கேட்காமல் வருவது தான் காதல். அது, விரும்பப்படுபவரின் விருப்பத்தைக் கூட கோருவதில்லை. அதைத் தான் கவிக்கோ, ‘நீ என்னை விரும்பாவிட்டால் என்ன, ஒரு பக்கம் பற்றினாலும் நெருப்பு தானே?’ என்று எழுதியிருப்பார். விருப்பம் இல்லாவிட்டாலும் விரும்புவது தான் காதல். அதற்குத் தடைகள் போட, எவர்க்கும் உரிமையில்லை. அதைத் தான் வாலி,

“என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக் கடல்
என்னை ஏந்த கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங் குழல்” என்ற வரிகளின் தொடர்ச்சியாக, ஒரு கோரிக்கை வைக்கிறான் காதலன். முன்பே சொன்னது போல, இதுவொரு காதல் கடிதம். இங்கே அவன் விருப்பங்களை எல்லாம் தெரிவித்தாக வேண்டும். காதலி ஏற்பதும் ஏற்காததும் அவள் விருப்பம். அவள் உரிமை. ஆனால், சொல்வது காதலனின் கடமை.

“விழிகளில் வழிந்திடும்
அழகு நீர் வீழ்ச்சியே,
எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே?” என்ற விண்ணப்பத்தோடு நிறைவு செய்திருப்பார் கவிஞர். ஒரு பாடலை விண்ணப்பத்தில் முடித்துவிட்டு, இன்னொரு பாடலை விண்ணப்பத்தில் தான் தொடங்கியே இருப்பார். உனக்கு ‘என்ன விலை’ ஆயினும் சொல்லு, அந்த விலை என் உயிரானாலும் உடனே தருகிறேன் என்ற காதலனின் வரிகள் இன்னொரு ஒருதலையாய் அமைந்திருக்கும்.

“இமையில் இருக்கும்
இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க
நினைவு கொதிக்க
ஆறாத நெஞ்சாச்சு
ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்” என்று காதலின் கொடுமைகளைச் சொல்லும் ஒவ்வொரு வரிகளும் ரோஜாவின் தொடர்ச்சியே.

தன்னை மறந்து மண்ணைச் சுற்றும் பிள்ளைகள் தனது கோடைக் கால விடுமுறையில் ஆரம்பத்தில் மகிழ்ந்த அளவுக்கு, ஏனோ இறுதியில் இன்பமாய் இருப்பதில்லை. நாட்கள் அருகுவதலோ, இல்லை தேர்வின் முடிவு என்று வருமோ என்ற அச்சத்தாலோ, இருக்கும் நாட்களையும் இழப்பது வழக்கம். காதலும் அப்படித் தான், முடிவு தெரியாதவரை, நிம்மத்திக்குள் மனம் நித்திரையே கொள்ளாது. காதலைத் தேர்வோடு ஒப்பிட்ட வாலி,

“காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை” என்று எழுதியிருப்பார். எஸ்.பி.பியின் பேராண்மைக்குள் கொஞ்சும் சுவர்ணலதா, புன்னகை ததும்பும் சோனாக்ஷிக்குப் பொருத்தமான தேர்வே.

இளையராஜா தொடங்கி எத்தனையோ இசையமைப்பாளர்கள், ஒரே பண்ணில் இருவேறு பாடல்களை உண்டாக்கியிருக்கிறார்கள். ஒரு பாடல், உவந்து களித்தப் பொழுதுகளை உரைப்பதைப் போன்றும், மறுபாடல், சோகச் சுமைகளை சுமப்பது போன்றும் அமைத்திருக்க, இதில் ரகுமானும் அதையே கையாண்டிருப்பார்.

“இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது” என்று இருவேறு உடல்களில் இருந்த போதிலும், ஒன்றாகக் கலந்து நன்றாக வாழக் கனவு காணும் இரு உயிர்கள், காலத்தின் கண்டிப்பில் பிரிய, பூமாலை போடும் இடத்தில் காதலியும், அவளுக்குப் பூப்பந்தல் போடும் இடத்தில் காதலனும் இருக்க, வாலியின் வரிகள் வலியின் வரிகளாய் வெளிப்பட்டிருக்கும். பேசா நொடியும் பெண்ணே உன்னை, ஏசாதவனாய் என்றும் இருப்பேன் என்று வாழ்த்தும் வாஞ்சைகொண்ட மனம், காதலனின் மனம். ‘நீ செல்லும் எந்த வனமும் நந்தவனம் ஆகும், அந்த வனம் ஆகாதா?’ என்று தொடங்கும் பாடலின் ஒவ்வொரு வரியிலும், தன் இயலாமையைத் தாழ்த்துவதாகவும், காதலியின் குணங்களை உயர்த்துவதாகவும் தான் மொத்தப் பாடலும் அமைத்திருக்கும்.

பட்டறை உலைக்குள் படிப்பைக் கருக விட்ட ஒரு ஏழை மாணவன், வீட்டை எதிர்த்து நகரம் வந்து வீதியில் கிடக்க, அவன், கல்விக்கு ஒரு கதவு திறக்கிறது. ஆனால், அது கட்டணமாக அவன் காதலைக் கேட்கிறது.

“வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக” என்று நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தைப் பின்பற்றும் கதநாயகன், தன் மனக் கோலம் கலைத்தவள் மணக்கோலம் பூண்டிருப்பதைக் கண்டு தன்னை மறந்து அவளை வருணிக்கிறான்.

“அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி

கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை – இந்த
ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்” என்று அவன் அடைந்த துயரத்தை உடைந்த குரலில் உரைக்கும் வேளை, இரும்பாய் இருந்தாலும் இதயம் ஏனோ இறகாய்ப் பறக்கிறது. இறுதியில், அழுகாத குறையாக அவன் சொல்லும் ‘நீ வாழ்க… நலமாக…’ அம்மட்டும் காத்த அத்தனை உணர்வுகளையும் ஒரு சம்மட்டிக் கொண்டு சல்லி சல்லியாக நொறுக்கும். எல்லாப் பாடல்களையும் இயம்பக் கூடாதென்று உணர்ச்சிகளை, இழுத்துப் பிடித்துக் கட்டிய போதும், வலுத்துப் பெருகும் வங்கக் காற்றாய், கட்டுப்பாடு கரைகளை உடைக்கத்தான் செய்கின்றன.

பாடல் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணங்களை உடைக்கும் விதம், அமைத்தப் பாடலாகத் தான் நான் ‘காதல் வைரஸ்’ படத்தில் வரும் ‘வான் நிலா’ பாடலைக் கருதுகிறேன். முறையற்ற ஓசையாகத் தோன்றினாலும், அதன் சந்தத்திற்கு சொற்களை நிரப்பிய கவிஞர் வாலியை என்ன சொல்லி பாராட்டுவது?

“சிலு சிலுவென விழும்
புது பனி துளியோ
மழை எழுதும் முதல் கவியோ

ஒரு சரம் சிரிக்கையில்
தெரிக்கையில்
புது புது கவிதைகள்
புறப்படும் புலப்படும்

இடி மின்னல் மழையிலும்
அடிகின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது

பெண்ணை அழகாய் படைத்தால்
அந்த இயற்கையும் வேலை
அறிந்தும் என்னையே கேட்டாய்
அட இது என்ன லீலை” என்று ஒவ்வொரு வரியிலும் சந்தம் எனக்கே சொந்தம் என்று கொஞ்சம் விட்டால் போதும் பட்டா கேட்பார் கவிஞர் வாலி. இப்படி எத்தனையோ இன்றியமையாத காதல் பாடல்களை இந்த கூட்டணி கொடுத்திருந்தாலும், கால வெள்ளத்தில் காலூன்றி நிற்கும் நட்புப் பாடல் ஒன்றையும் கொடுத்திருக்கின்றனர். ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே’ என்ற வரிகள் தான் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! காலங்கள் ஓடினாலும் கானங்கள் மாறாமல் இருக்க, பழமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த இந்த கூட்டணி,

“நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே” என்று நண்பர்கள் ஆட்சிக்கு நாட்டுப் பண் ஒன்றைக் கொடுத்தது. இத்தனை ஆண்டுகள் கடந்த போதும் இன்னும் அந்த பாடல் தான் இதயச் சுவரில் எவரோ எழுதிய கிறுக்கல்களாய், மறையாமல் நிலைத்து நிற்கின்றது. கதிர் வாலிமீத வைத்திருந்த அதே அளவு அன்பை, ரகுமான் மீதும் வைத்திருந்தார். ஆம்! ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திருப்பதியில் அடித்த மொட்டை அதற்கு முக்கிய சாட்சி. காலநதியில், எத்தனை வெள்ளம் எழுந்த போதிலும் இந்தக் கூட்டணியின் வெற்றி கொடிகட்டி பறந்துகொண்டே தான் இருக்கும். ஏனெனில்,

“மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்” தான் அல்லவா?.

Shopping Cart
Scroll to Top