கூட்டணி இல்லாமல் திரைப்படம் இல்லை. எத்தனைக் கூட்டணிப் பிரிவு இழப்பில் சென்று முடிந்திருக்கின்றன? எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த வைரமுத்து இளையராஜா கூட்டணி, இன்னும் ஒரு படம் இணையாதா என்று எத்தனை மனங்கள் ஏக்கத்தில் இருக்கின்றன. இப்பொழுதும் கூட, பொன்னியின் செல்வனில் வைரமுத்துவைத் தேடும் இதயங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? ஏனோ தெரியவில்லை, மணிரத்னம் படமென்று வந்துவிட்டால் ரகுமான் அரக்கனாகி விடுவதை கண்டவர்கள் கேட்டவர்கள் சாட்சி. இப்படி எத்தனையோக் கூட்டணிகளை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கூட்டணி சக்கரம் இல்லாமல், சினிமாத் தேர், சிறுதளவும் நகராது. கவிஞர் வாலி, எல்லோருக்கும் சிறந்த படைப்புகளையேக் கொடுத்திருந்தாலும், உச்சங்களை ஒரு சிலருக்கு வளங்கியிருக்கார் என்பதே உண்மை. தனது முதல் படம் முதல் எல்லாப் படங்களிலும் வாலியுடன் மட்டுமே பயணித்த இயக்குனர்களில் முக்கியமானவர் கதிர். ‘அவளும் நானும் அமுதும் தமிழும்’ என்பதைப் போல, கதிரும் காதலும். காதல் இல்லாமல் கதிர் படங்களா? காதல் வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்ச, கதிர் தோண்டிய ஊற்று தான் கவிஞர் வாலி. முதல் படத்தில் இளையராஜாவுடன் முத்திரைப் படைத்திருந்தாலும், அமர்ந்திருக்கும் பேருந்து எடுக்கத் தாமதம் ஆகும் போது, முன்னால் செல்லும் பேருந்தில் ஓடிச் சென்று ஏறுவதைப் போல, ஒரு கட்டத்திற்கு மேல், கால நதியில் கடல் சேராமல் ராஜா, கரை சேர்வதை உணர்ந்த கதிர், அடுத்த அடுத்த படங்களில் ரகுமானுடன் கூட்டணி வைக்கத் தொடங்கினார். காதல் நாடகத்திற்கு, இசை என்னும், கதாநாயகிகளை மாற்றினாலும், பாடலாசிரியரான கதாநாயகனை மட்டும் கதிர் மாற்றவே இல்லை. எல்லோரும் வாலியின் வாழ்க்கையில் பக்கம் என்றால், கதிரை நானொரு அத்தியாயமாகத் தான் பார்க்கிறேன். தன் இறுதி காலங்களில் வாலி கொடுத்த, ஆகச் சிறந்த பாடல்களில், கதிரின் எல்லாப் பாடல்களையும் பட்டியல் இடலாம். அகவை என்பது அங்கத்திற்குத் தான் அகத்திற்கு அல்ல என்று ஒவ்வொரு படங்களிலும் மெய்ப்பிக்கும் கவிஞர் வாலி, கதிரின் ‘இதயம்’ படத்தில் வரும் ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்’ பாடலிலேயே புகுந்து விளையாடியிருப்பார். காத்திருக்கும் பெண்களை, பல்லவன் பேருந்து கைவிட்டாலும் பசங்கள் கைவிடுவதில்லை என்பதை,
“காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்
கை விடுவான் கன்னியரைப் பல்லவன் தான்
கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்” என்று எழுதியிருப்பார்.
பாடல் ஆசிரியர் வாசன், எழுதத் தொடங்கிய ‘சலாம் குலாமு’ பாடல், அவர் காலமானதும் அறுந்துவிழுந்தாடும் சிலந்திக் கூடாய் அந்தரத்தில் நிற்க, அதை முடித்துக் கொடுத்த நா.முத்துக்குமார்,
“கோல்டன் பீச்சுல
கோலா வாங்கி பிப்டி பிப்டி அந்த
சாந்தோம் பீச்சுல
பேண்டா வாங்கி பிப்டி பிப்டி
டிரைவ் இன் இல் டுயூட்டியா
பீசா கார்னர் பியூட்டியா” என்று எழுதிய வரிகளுக்கெல்லாம் முன்னோடி வாலி தான் என்றே தோன்றுகிறது. இதயம் படத்தில் வரும் ‘ஏப்ரல் மேயிலே’ பாடலில்,
“குர்தா மேக்சியும்
சல்வார் கமீசும் சுமந்த பெண்களே
எங்கே என்று தான்
இங்கே இன்று தான் வருந்தும் கண்களே
டிரைவின் ஹோட்டலும்
சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே பாருங்கள்
ஸ்டெல்லா மேரிசும்
குயின் மேரிசும்
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள்
தோன்றும்போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்” என்றவர் இளமை ஊஞ்சலில் ஆடாத நாளே இல்லை. கல்லூரிக் காதலில் சுகம் கண்டக் கதிர், ‘காதல் தேசம்’ படத்தில், காதலின் வேதனையைச் சொல்ல, வாலியின் உதவியை நாட, முன்பே ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் இடம்பெற்ற ‘குழலூதம் கண்ணனுக்கு’ பாடலில்,
“கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா” என்று மிக அழகாக சொல்லியிருப்பார். ஆனால் வாலி, காலச் சக்கரத்தைக் கையிலேயே வைத்திருப்பவர் அல்லவா? அதே வரிகளைக் கொஞ்சம் அழகாக்கி,
“கேட்பரிஸ்(Cadburies) கசக்குதே!
காலேஜ்(College) போர் ஆச்சே!
குஷன் பெட்(Cushion bed) வலிக்குதே!
தூக்கம் போய் நாளாச்சே” என்று எழுதியிருப்பார். அதே படத்தில் வரும் “கல்லூரிச் சாலை” பாடலில்,
“செல்லுலார் போனை போல நீங்கள் இருந்தால்
பாகி பேன்ட் பாக்கெட்க்குள்ள நாங்கள் வைத்துக்கொள்வோம்
காண்டாக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக நாங்கள் வைத்துகொள்வோம்” என்று ஒவ்வொரு வரியிலும், காலத்தின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று நமக்கு முன்னால் எங்கோ ஓடிக் கொண்டே தான் இருந்தார் வாலி. அடுத்தடுத்த படங்களிலும் அதே முயற்சியில் இருவரும் இறங்க, ஒவ்வொரு பாடலும் உயர்ந்தன தரத்தில். ‘காதலர் தினம்’ படத்தில் வரும் ‘மரியா மரியா’ இன்றைக்கும் ஃபேஸ்புக், வாட்ஸப் தலைமுறைக்குப் பொருத்தமாகத் தானே இருக்கிறது?
“கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி,
கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது INTERNETடு
மனச விட்டு Mouseஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு” என்று காலத்திற்கு ஏற்றார்போல் சொற்களை அமைத்திருந்தாலும், இயைபுகளில் ஏனோ இன்புற்றிருந்தார் என்றே சொல்ல வேண்டும். சரி, கதிர் படங்களில் காலங்களுக்கு ஏற்றார்போல் மட்டுமா எழுதினார்? காலங்களோடு செல்லும் பாடல்களை ஒரு கையிலும், காதலில் கசிந்துருகும் பாடல்களை மறுகையிலும் பிடித்து அழைத்துச் சென்றார் என்றே தான் சொல்லவேண்டும். சொல்லப்போனால், துலாத் தட்டில் இரண்டையும் வைத்துத் தூக்கி நிறுத்தினால், காதலின் பாரம் கண்டிப்பாய் அதிகமாய் இருக்கும். ஆனால், இரண்டிலும் இங்கே இயைபு கொஞ்சும்.
காலமெல்லாம் கடலை வேடிக்கை மட்டும் பார்க்கும் வெண்ணிலவைப் போல, காதலன் ஒருத்தி காதலியைத் தொலைவில் இருந்தே காதலிக்கிறான். எங்கே அவள் எட்டாக் கனி ஆகிவிடுவாளோ என்று அஞ்சும் வேளை எல்லாம் கொஞ்சும் தமிழால் வாலி கொடுத்த பாடல் எல்லாம், இதயத்தில் இருந்து எடுக்கவே முடியாத நினைவுகள். மொத்தக் கதையையும் மொழிவது போல,
“பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா” என்று நான்கு வரிகளுக்குள் அடக்கியிருப்பார். எத்தனைக் காலம் தான் இப்படி மௌனம் காக்கிறது? சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் அல்ல, இங்கும் சேர்வதில்லை. அதே பாடலில் வரும் அடுத்தடுத்த வரிகளில்,
“ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன” என்ற வரிகளில், கீதாவிடம்(ஹீரா) தன் காதலைச் சொல்லத் துணிவில்லாத ராஜா(முரளி) மீது அவ்வளவு கோபப்பட்டிருப்பார். அதே வரிகளை இன்னொரு வடிவாய்,
“ஆறாத ஆசைகள் தோன்றும் எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னைக் கொல்லும் எந்நாளும்
வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ” என்று எழுதப்பட்ட பாடலின் முதல் வரிக்கே நம்மை முழுவதுமாய் ஒப்பு கொடுக்கலாம். எல்லா வரிகளுக்கும் ஒரே இயைபை எழுதுவது எளிதல்ல எனினும், அரிதும் அல்ல. ஆனால், பொருள் குன்றாது பொதிந்து வைக்கும் சூட்சமம் வாலிக்கு மட்டுமே வாய்க்கும்.
“பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – குளிர்
புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா – இது
எட்ட நின்றே எனை சுட்ட நிலா” என்று அடுக்கியிருப்பார். எட்டாத தொலைவில் இருக்கும் காதலியை, நிலாவோடு ஒப்பிட்ட வாலி, கதிருடைய அடுத்த படத்தில், அண்மையில் இருப்பதால், பூவோடு பெண்மையை ஒப்பிட்டிருப்பார். இத்தனைப் பூக்கள் இருப்பதை அறிந்தாலும், அதைப் பெண்ணோடு பொருத்தியதே மிகச்சிறப்பு எனலாம்.
“பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ – அவள்
கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ” என்று இத்தனைப் பூக்களை ஒரு பாடலில் கொண்டு வந்து இருத்திச் சொன்ன, வாலியைப் பாராட்ட வார்த்தைகள் தேடினால், வண்ணத்தில் விழாத பூ ஒன்று, என் எண்ணத்தில் நீங்காமல் இருக்கிறது. வியப்’பூ’.
தொடரும்…