நான்கடி இமயம்!

சண்டிக்கார சமயங் களாலே 
மண்டிக் கிடந்த மக்களின் மனதில் 

விளக்காய் இருளை விலக்கிய மாட்சி!
கிழக்காய் வந்த கிளர்ச்சித் தீத்துகள்!

பெரியார் என்னும் பெருஞ்சூரியனே
உரியார் என்று உளத்தில் வைக்கும் 

வல்லமை பெற்ற வாக்கியமே! எம்
நல்லதை எண்ணிய நான்கடி மலையே!

கோபுரம் நிறைந்த காஞ்சியின் நடுவே
மாபெரும் புகழில் மலர்ந்தவனே! நீ

நாத்திகம் பற்றி நவில்வதைக் கேட்க 
சாத்தியம் என்றால் சாகவும் சம்மதம்!

காரியம் முடித்த கண்ணியனே! நீ
வீரியம் கொண்டு விளித்ததைக் கண்டு
ஆரியக் கூட்டம் அஞ்சிய துன்முன்
சூரியனுக்கும் சூடு குறைந்தது!

இந்தித் திணிப்பை எதிர்த்து அஃதை
சந்தியில் நிறுத்திய சரித்திரமே! நீ 

நாலடி ஆயினும் நாவடி கொண்டு 
ஆளடிப்பாயே அஃதினைக் கண்டு
காலடி தொட்டுக் கண்களில் ஒற்றிக்
காலம் முழுவதும் கடவுளாய்த் தொழலாம்!

தோற்றுப் போனதும் துவண்டா போனாய்?
ஏற்றி விட்டே ஏணி ஆனாய்!

சுருட்டைத் தலையை சுருங்கிய உடையை 
இருட்டை எதிர்த்த இயந்திர நடையை

எண்ணிய போது எனக்குள் வியப்பு
மின்னியதே; நான் மீளவும் இல்லை; 

ஆங்கிலம் படித்தாய்; ஆயினும் தமிழைத் 
தாங்கிட எண்ணிய தலைவனே உன்றன் 
மொழியைக் கண்டால் மோகத் தமிழை 
இழிவாய்க் கூட இழிவாய்ப் பேசா!

தம்பிகள் உள்ளோம் தமிழைக் காத்திட 
நம்பி உறங்கு; நாளும் வங்கக் 
கரையைத் தொழுவக் காரணம் நீயே!
இறையை எதிர்த்து எழுதிய அண்ணா 
துரையே எங்கள் தூயவனே நீ 
மறையாய்க் கொடுத்ததை மறந்திட மாட்டோம்;

வளைவாய்க் கிடந்த வாழ்க்கையை மாற்றிய
தலைவா உனையா தமிழகம் மறக்கும்?

கடற்கரை மணலில் கண்மூடி துயில்கொள்!
மடமை முளைத்தால் மறுபடி உயிர்கொள்!

Shopping Cart
Scroll to Top