"சமயங்களில் கைவிடுதலும்
கருணைக் கொலையில் தான்
சேர்த்தி நண்பா"
- நேசமித்ரன்
சென்ற வாரம் சோகப்பாடல்களைப் பேசும் நீயா நானாவில் அதிக துயர் தரும் பாடல் பற்றி கோபிநாத் கேட்க, ‘குயில் பாட்டு’ பாடலைக் குறிப்பிட்ட பெண் ஒருவர், “பாதில நிக்கிறப் பாட்டு இருக்குல சார் அது கொடுக்குற வலியே ஒரு மாதிரி பயமா இருக்கும்”, என்றார். பால்வெளியில் பயணப்படும் வால் நட்சத்திரமாய் மனது ஒருநிமிடம் அந்தரத்திலேயே அலைந்து திரும்பியது. குயில் பாட்டைப் பற்றி மனது ஏதேனும் குறிப்பு வைத்திருக்கிறதா என நினைவு பெருவெளியில் நீந்தத் தொடங்கினேன். பின்னால் வரப்போகும் பெருந்துயர் பற்றி அறியாமல் புன்னகை குன்றாத மீனாவின் முகம், அடுத்து வரப்போகும் அதிர்வுக்குத் தூது சொல்லும் ஒளிக் கீற்றாய் மன வானில் ஒருநொடி மின்னி மறைந்தது.
“வானம் இங்குக் கூண்டாக
வந்த இன்பம் வேம்பாக
இன்று வரை எண்ணி இருந்தேன்
பிள்ளை தந்த ராசாவின்
வெள்ளை மனம் பாராமல்
தள்ளி வைத்துத் தள்ளியிருந்தேன்”
எனத் தொடங்கும் சரணம், கணவனின் மனதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண்ணின் மனநிலையைச் சொன்னவாறு, ஒவ்வொரு வரியிலும் சுமையைக் கொஞ்சம் ஏற்றிக் கொண்டே போகும். இதற்கு மேல் இடமில்லை என வெடிக்கும் பலூனைப் போல, மீனா விழும் காட்சியோடு பாடலைப் பாதியிலேயே முடித்திருப்பார் இயக்குநர் கஸ்தூரி இராஜா. பாதியில் முடிந்து போகும் பாடலைக் கேட்க மனமின்றி, முந்தைய சரணத்தின் கடைசி வரிகளை இந்த சரணத்தில் வெட்டி ஒட்டிக் கேட்ட கல்லூரி நாட்களெல்லாம் கண் முன் வந்து போகிறது. ஏன் பாதியின் மீது நமக்கு இப்படி ஒரு பயம்? இந்த உலகில் எல்லாமும் முழுமை அடைகிறதா என்ன? இல்லை முழுமை அடைவதைத் தான் மனது விரும்புகிறதா? பள்ளி, கல்லூரி, பணி, திருமணம், உறவு என எல்லாமும் ஏதோ ஒரு வகையில் பாதியில் முடித்து வைக்கும் இடம்பெயர்தலின் தூதுவன் தானே?
ஜெரால்ட் ஊரில் இல்லாத நாட்களில் அவன் வளர்த்த பூனையை எங்காவது கொண்டு விடச் சொல்லி அம்மா கேட்க, நானும் சுரேனும் அதை ஒரு கோணியில் போட்டு நெடுஞ்சாலை நோக்கிப் புறப்பட்டோம். சில நிமிடங்களில் இயல்பற்ற சூழலை உணர்ந்த பூனை, கத்தி கூச்சலிடத் தொடங்கியது. அமைதியாக்க முயன்றவனைக் கோபத்தில் கீறி அது வெளிவர முயல, வண்டியை நிறுத்திய அடுத்த கணம், குதித்து அருகில் உள்ள புதருக்குள் ஓடியது. காட்சியிலிருந்து மறையும் முன் மிரட்சியின் கண்களோடு அது கொடுத்த கடைசிப் பார்வை, இன்னும் என் கனவுக்குள் கலவரம் செய்யாமல் இல்லை. பாதியில் விடப்படும் வாழ்வைப் பற்றி நான் பாடம் எடுப்பது அந்த பூனைக்குத் தெரியாமல் இருத்தல் நலம்.
காரணமின்றிப் பேசாமல் போன காதலனைப் பற்றிச் சொன்ன அக்காவிடம் பாதியில் விடுதல் பற்றிப் பேச அஞ்சுகிறது மனம். ‘பேசிட்டு போயிருக்கலாம்ல, பேசப் புடிக்கலன்னா அது ஏன்னாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல’, எனப் புலம்பிக் கொண்டே இருக்கும் அவளுக்குத் தெரியவில்லை, அவர்கள் தொலைய விரும்பவில்லை; நம்மைத் தொலைக்க விரும்புகிறார்கள் என்று. என்ன செய்ய, உணவிடுவோம் என்ற நம்பிக்கையில் வாலாட்டிக் கொண்டே வரும் நாய்க்குட்டியை, விளையாட்டு காட்டி திசைதிருப்பி விட்டு ஓடிச்செல்லும் மழலையாய்த் தானே இங்கே பலர் இருக்கிறார்கள்?
கல்லூரி நாட்களில், எதுவும் பேசாமல் அழுது கொண்டே ஆவடி பேருந்து ஒன்றில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்ணிடம் என்ன ஏதென்று அருகிலிருந்தவர்கள் எல்லோரும் கேட்க, உறவினர் வீட்டிற்குச் செல்வதாய் அழைத்து வந்து, சென்னை மாநகரப் பேருந்தில் பாதியிலேயே விட்டுச் சென்ற மகனைப் பற்றி அந்த அம்மா சொன்ன நிகழ்ச்சி இன்னும் எனக்குள் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கையறு நிலையின் காட்சி வடிவம் அது. கிருஷ்ணகிரியிலிருந்து மகனோடு சென்னை வந்திறங்கிய அந்த அம்மாவுக்கு மாநகரம் பற்றி என்னென்ன எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்? அத்தனைக் கனவுகளும் அவர் மகனைக் காணாத நொடியில் எத்தகு நிலையில் அவரை இருத்தி வருத்தியிருக்கும்? பாதியில் கைவிடப்படும் மனது விடையிறுக்கவே முடியாத வினாக்களைத் தன்னுள் சுமந்து கொண்டு, காடு களைத்த நகரத்தில் கூடு தொலைத்த பறவையாய்த் தான் சுற்றும் என எப்போதாவது நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
விபத்தில் முதுகெலும்பு உடைய நடை பாதிக்கப்பட்ட குடும்ப நண்பன், அப்பா இறந்ததால் பாதியிலேயே படிப்பை நிறுத்திய பள்ளித் தோழன், அலுவலக இயந்திரத்தில் கை துண்டான நண்பனின் தம்பி, முடிவுபெறாத பாரீஸின் லீவர் அருங்காட்சியக ஓவியம், மாலைக்குப் பின் வீடு திரும்பாத கீதா அக்கா, கட்டி முடிக்கப்படாத தெருமுனை வீடு, பாதியிலேயே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக ஊரை காலி செய்து பின் வீடு திரும்பாத சுரேஷ் அண்ணனின் தாய்மாமா இப்படி எத்தனை எத்தனை நிறைவுறாப் பயணங்கள் நம்மைச் சுற்றி வலம் வந்த வண்ணம் இருக்கின்றன?
அடக்கம் செய்யாமல் கூடத்தில் கிடத்தப்பட்ட அப்பாவின் உடலை வணங்கி, கல்லூரி தேர்வெழுதச் சென்று பாதியிலேயே கண்ணீரோடு வெளியே வந்த தோழியின் கதையைச் சொன்னால், கேட்க உங்களுக்குத் துணிவிருக்கிறதா?
வாழ்வின் புழுக்கத்தில் அன்பின் கதகதப்புக்குள் அடியெடுத்து வைக்கும் எந்த மனதிற்கும் பாதியில் விடப்படுவோம் என்ற பரிதவிப்பைக் கொடுக்காது இருத்தல் தான் நாம் இந்த உலகுக்குச் செய்யும் ஆகப் பெரும் கைம்மாறாக நான் கருதுவது. தொலைந்து போன எல்லா ஆட்டுக்குட்டிக்கும் மேய்ப்பன் கிடைப்பதில்லை தானே?
அலைத்து வந்து பாதியிலேயே தொலைத்துச் சென்ற பிள்ளையாய் சிலரைக் காண்கையில் யாரோ தொலைத்த கைகளுக்கு ஊன்று கோலாகத் துணியும் மனத்திற்குப் புரிவதே இல்லை, எல்லா உள்ளங் கைகளின் கதகதப்பும் ஒன்றல்ல என்று. அமைதியாக மறுக்கும் அதனிடம் நான் சொல்வதெல்லாம் கலாப்ரியாவின் கவிதை ஒன்றை மட்டும் தான்.
“அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது;
எனக்கதன் கூடும் தெரியும்;
குஞ்சும் தெரியும்;
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை”