நகலாய் இருந்தாலும்
நமைப்போல் குரங்கினம்
நாகரிகம் அடையாததேன்?
விலங்குகள் நம்மினும்
வேறென்று காட்ட,
மனிதனே மண்ணுக்கு
வேரென்று காட்ட,
தெளிவாய் மனித இனம்
திட்டம் போட்டது!
மொழியால் தனைச்சுற்றி
வட்டம் போட்டது!
மானுடம்,
விலங்கிடம் இருந்து
வேறுபட்டது மொழியால்!
மீண்டும்
விலங்கினமாக
மாறாதிருந்தது இசையால்!
ஆம்!
மொழி பயன்பட்டது
தொடர்புகொள்ள!
இசைப் பயன்பட்டது
தொடர்ந்து செல்ல!
இசை,
மானுடம் கண்டுபிடித்தது
அல்ல,
மானுடத்தைக் கண்டுபிடித்தது!
மனிதனை ஏற்றிய ஏணியில்,
மொழி முதல் படி எனில்,
இசை இரண்டாம் படி!
அதை உணர்ந்த தமிழ்,
இயலை முதலில் வைத்தது!
இசையை இரண்டில் வைத்தது!
அண்டத்தின் முதல்மொழி
தமிழென்பதில்
ஆச்சரியம் அல்லவே?
*
எம். எஸ். வி,
தமிழ் கூறும் நல்லுலகைத்
தாளம் போட வைத்தவர்!
கதைபாடும் கூட்டத்தைக்
கானம் பாட வைத்தவர்!
ஆயிரம் விண்மீனை
ஆகாயம் சுமந்தாலும்
மதி தானே முதலில்
மதிக்கப்படுவது? அவர்
எத்தனையோ பேர்களில்
இன்றி அமையாதவர்! விண்ணில்
ஏற்றி வைத்த தீபம் போல்
இன்றும் அணையாதவர்!
காடே உணவாயினும்
காட்டைச் சுற்றும்
ஆனைகளைப் போல்,
பாடல்கள் நிறைத்தன
பட்டி தொட்டியை!
ஆயினும் நம்மினம்-
பராக்குப் பார்த்தது
பம்பாய் சிட்டியை!
அக்காலம் இங்கே-
இறுமாப்புடனே
இந்தி சிரித்தது!
ஆம்! நம் தமிழைப்
பட்டினிப் போட்டுப்
பந்தி விரித்தது!
ராஜா வந்தார்! பல
ராகம் தந்தார்!
அவர் கொடுத்த
ராகம் வெறும்
ராகம் அல்ல – நாம்
ராப்பகல் தேடிய தாகம்!
ஒரு கையில்
மேற்கிசை,
மறு கையில்
மக்களிசை,
இரண்டையும் குழைத்து
இசையாக்கினார்!
பிரிக்கவே முடியாமல் –
இசையோடு பாமரனை
இனமாக்கினார்!
வறண்ட நிலத்திற்கு
வானத்தைப் போல,
கனத்த மனத்திற்கு
கானத்தைக் கொடுத்தார்!
பசித்துத் தவித்தப்
பாமரக் கூட்டத்தைப்
பந்திக்கு அழைத்து
பானத்தைக் கொடுத்தார்!
எம்.எஸ்.வி,
பாமரக் கூட்டத்தைப்
பாடல் கேட்க வைத்தவர்!
ராஜா,
இந்தியைப் பெரிதாய்
ஏற்றிய ஆட்களை,
தமிழ்ப் பாடல்கள் மீது
தாபம் கொள்ள வைத்தவர்!
ஆயினும் வடக்கு – நம்மை
அற்பமாய்க் கண்டது! அச்
சீண்டலுக்குத் தெற்குத்
சிற்பமாய் நின்றது!
இங்கிருந்து இசையை
ஏற்றுமதி செய்ய,
எங்கெங்கிலும் அதை
இடிமழையாய்ப் பெய்ய,
காலம் ஒரு கலைஞனைக்
காத்தது கருவில்! அவனை
ஆளாக விட்டது
அபிபுல்லா தெருவில்!
ரகுமான்,
அண்மையில் அதைப்போய்க்
கண்டு வந்தார்! மனத்தில்
உண்மையில் வலியைக்
கொண்டு வந்தார்!
ஆம்!
நெடுநாள்பின் கண்டார்-தான்
வாழ்ந்து வந்த இல்லை!
அங்கே இவர்-
நிம்மதியாய் ஒரு நாளும்
வாழ்ந்ததே இல்லை!
அப்பா,
கொஞ்சம் கொஞ்சமாய்
பணம் சேர்த்து,
குருவிகளைப் போல்
தினம் சேர்த்து,
மிச்சம் பிடித்துக்
கட்டிய வீடு! மழை,
உச்சம் பெற்றால்
கொட்டிய வீடு!
அங்கே
வாழ்ந்த வீடு
கொஞ்சம்
தாழ்ந்த வீடு!
அரைமணி நேரம்
அடைமழை பெய்தால்,
ஆற்றைப் போல்-வெள்ளம்
சூழ்ந்த வீடு!
பாத்திரம் வைத்து
மழையை ஏந்துவார்களாம்!
அவ்வாறு ஏந்தினால்-
ராத்திரி எல்லாம்
எப்படித் தூங்குவார்களாம்?
கவலைக்கு வீடே
காரணம் ஆனது!
இன்னொரு வீட்டிற்கு –
மாறிய பின்பு –
கவலைகள் எல்லாம்
காணாமல் போனது!
காய்ந்த மரம் கொஞ்சம்
காய்க்கத் தொடங்கியது!
அவர்களுக்கு –
அதற்கு முன் –
வாரா இன்பமெல்லாம்
வாய்க்கத் தொடங்கியது!
ஜனவரி 06, 1966!
மனிதர்கள்,
வாழ்க்கைச் சுழற்சியில்
வட்டமடித்துக்
கொண்டிருந்தார்கள்!
வால் நட்சத்திரத்தை
வானம் பார்த்து
வருடங்கள் ஆகி இருந்தது!
புவியீர்ப்பு மயக்கத்தில்
சூரியனை வழக்கம்போல்
சுழன்று கொண்டிருந்தது
பூமி!
மன்னர்கள் யாரும்
மருளவில்லை!
தேவகுமாரன் மண்ணில்
அருளவில்லை!
மனித உடலில் ஒரு
ராகம் பிறந்தது!
பிறந்த உடன் அந்த
தேகம் அழுதது!
அழுகை அல்ல – அது
ஆலாபனம்!
அதற்குப் பின் நிகழ்ந்தது –
அவரோகணம் அல்ல
ஆரோகணம்!
Second Half:
ஆரோகணத்தின்
அடிப்படை இவனுக்கு
அப்பா தான் தந்தது! ஆம்!
அப்பாவிடம்
இருந்த இசை இவனிடம்
தப்பாமல் வந்தது!
இவன் அப்பாவும்
இசையோடே ஊர்ந்தவர்!
இவனைப் போல்-புகழ்
எய்தாவிடினும்-
ஒவ்வொரு வாத்தியத்திலும்
ஓரளவு தேர்ந்தவர்!
ராஜகோபால குலசேகர்!
(ஆர்.கே.சேகர்)
அவர்தான் இவனது
தந்தை!
இசைச் சந்தை,
அழியாமல் காக்கிறது
அவர் தந்த விந்தை!
அதிலென்ன விந்தை?
குலசேகரனின் மகன் – தமிழ்
குல சேகரன்!
மின் துறையில் இருந்தபோதும்
தன் துறையை விடாதவர்!
பண் துறையைத் தொடர்ந்து – அதைப்
பரப்பினார் அடாது அவர்!
வாசிப்பில் ஓர் உலா – அவர்
வந்த இடம் கேரளா!
தமிழன் ஆயினும்-
மலையாளம் தான் அவரின்
கலை ஆழம் கண்டு
அங்கீகரித்தது! அந்தக்
கலைஞனுக்கும் ஒரு
மகுடம் தரித்தது!
உதவிக்குப் பேர்போனவர்!
உழைத்தே உயர்ந்த-
பதவிக்குத் தேர்வானவர்!
இசையமைப்பாளராய் ஆக
அயராது,
இரவு பகலாய் உழைத்தார்! தனது
எண்ணத்தை உண்மையாய் ஆக்க
உதவிக்கு,
இரவு பகலை அழைத்தார்!
இறுதியில் அவர்க்கு-அவ்
வரம் கிடைத்தது! அத்துடன்
வாழ்க்கையை வாழ ஓர்
வரன் கிடைத்தது!
கஸ்தூரி அவரது
கரம் பிடித்தார்!
ரகு’மானை’ ஈன்றது
கஸ்தூரி!
பெண்ணுக்குப் பின்னொரு
பொன் பிறக்க,
பொன்னுக்கு பின்னிரண்டு
பெண் பிறக்க,
வீட்டின் எண்ணிக்கை
ஆறானது!
காஞ்சனா(ஏ.ஆர்.ரெய்ஹானா)
திலீப்(ஏ.ஆர்.ரகுமான்)
பாலா(ஃபாத்திமா)
ரேகா(இஸ்ரத்) இவை
நாலும் தான் அவர் பெற்ற
நான்மணிக் கடிகை!
அப்போது என்னென்ன-
கையில் வைத்திருந்ததோ
காலத்தின் கடிகை!
வாழ்க்கை என்ற
வன்மைப் போரில்,
அவர்கள் –
வாழ்ந்தது முதலில்
மைலாப் பூரில்!
முண்டக்கன்னியம்மன்
தெருவில் – கண்
விழித்தது இசையென்ற
ஒரு வில்!
வளர்ந்தபின் அது,
எல்லோர் மீதும்
எய்தது இசைக் கணை!
ஆர்தான் போடுவது
அலையெனத் ததும்பும்
இசைக்கணை?
*
சேகர்,
வேறுபாடே இசையின்
வெற்றியெனக் கருதி! புதுப்புது,
கருவிகளைச் சேர்ப்பதில்
கொண்டிருந்தார் உறுதி!
வருமானம் எல்லாம்
கருவிகள் ஆக,
பின்னாளில் அவர்
வையம் விட்டு
வலசைப் போக,
கருவிகள் இட்டது
அன்னம்!
அவ்வாறு நிகழுமென்று-
அவரும் –
கனவிலும் கொண்டதில்லை
எண்ணம்!
அப்பாவே இசையைச்
சொல்லித் தந்தார்! மகனுக்கு,
ஆசையாய் சுரங்களை
அள்ளித் தந்தார்!
அன்னம் உண்ணும்
முன்னம்,
ஆரோகணம் உண்டான்!
ஆம்!
ஆகாரம் முன்னே
‘அ’காரம் எடுத்தான்!
இசையை வாசிக்க,
அகவை நான்கிலே
அவதாரம் எடுத்தான்!
இதழைத் திறந்தால் தான்
மொட்டு மணக்குமா?
சிறகைத் திறந்தால் தான்
சிட்டுப் பறவையா?
எல்லோரையும் ஈர்த்தான்
நிறுத்தாமல் பாடும் சுரத்தால்!
நிற்காமல் ஓடும் கரத்தால்!
விண்ணை அசைக்க
விரலிலிருந்தது
துடிப்பும்! இவன்
பண்ணைக் கேட்டுத்
தன்னை மறந்தது
படிப்பும்!
தந்தைக்காக அவன்
வாசிப்பதைக் கண்டு
எல்லோரும் அறிந்தனர்
விளைகின்ற பயிர்
முளையில் தெரிந்துவிடும்
என்பதை!
அப்போது அவனது
அகவைத் தாண்டவில்லை
ஒன்பதை!
மகனின் திறமையால்
மார்தட்டிக் கொண்டார்!
விரலில் அவன்கொண்டத்
திறமையைக் கண்டார்!
யார் வாய் –
சொல்லி மெய்த்ததோ?
ஊர்வாய்க்
கொள்ளி வைத்ததோ?
வளர்ச்சியில் பலபேர்
கண்பட்டது! அப்பாவின்
வயிறும் புற்றாலே
புண்பட்டது!
அவர் இல்லையென்றால்-
அக்குடும்பம்-
வாழ்விழந்து சுவரிலே
முட்டிக் கொள்ளும்!
வறுமையை ஆடையாய்க்
கட்டிக் கொள்ளும்!
சுற்றம் எதுவும்
சேர்க்காத அவரைச்
சொற்களாலேயேச்
சுட்டிக் கொல்லும்!
என்பதை ஒற்றை கணமும்,
எண்ணாது வாழ்ந்தார் தினமும்!
வேலை வேலையென்று
வேளை வேளைக்கு
உண்ணாமல் உறங்காமல்
உழைத்தார்!
உடலளவில் துரும்பாய்
இளைத்தார்!
அவர்
விழித்திருக்கும் நேரத்தை
வேலைத் தின்றது!
நரகத்தை கைக்கொண்டு
நாளை நின்றது!
முன்னாளில் அவரும்,
வெல்வதற்கு அனுதினமும்
துடியாய்த் துடித்தார்!
பின்னாளில் வலியால்,
சொல்வதற்கு முடியாமல்
துடியாய்த் துடித்தார்!
பாவம் என்றக்
கருத்தை ஏற்று,
பலநாள் அமைதி
காக்குமா கூற்று?
குடும்பத்தோடு இறுதிவரை
இருக்காமல்,
கொடுமையான வயிற்றுவலி
பொறுக்காமல்,
பிள்ளைகளை மறந்து போனார்!
பெருவலியால் இறந்து போனார்!
இல்லமும் ஆனது
அப்பா இல்லாத
இல்லாக!
இருக்கிறதே என்றும்
ஆண்டவன் மனதும்
கல்லாக!
அதன்பின்-
ஆனது-
அவர்களது வாழ்க்கை
அல்லாக!
இல்லறம் என்ற
இசையும் அன்று
போனது சுதியற்று! அவர்
இல்லை என்றதும்
ஏனைய உயிர்கள்
ஆனது கதியற்று!
காலத்தின் கண்களுக்குக்
காருண்யம் கிடையாதே! அட
அடைமழைக் காணாமல்
ஆரண்யம் கிடையாதே!
எப்படியாயினும்
இழப்பு நேரும்
எல்லோர் வாழ்க்கையிலும்!
இழப்பை நினைத்து
ஏங்கிக் கிடந்தால்,
எப்படி வாழ்க்கை எழும்?
அம்மா
அல்லாடினார்,
இல்லை தனியாகப்
பார்க்க முடியாமல்! அவர்
இல்லை என்பதை
ஏற்க முடியாமல்!