“ஓடுவது, துரத்துவது
வீசி எறிவது,
குறி பார்த்து அடிப்பது,
பிடிப்பது, தப்பிப்பது,
மறைந்து கொள்வது,
சுற்றுவது, சறுக்குவது,
மூச்சு வாங்குவது என
விளையாடி வாழ்க்கைக்குத்
தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்
சிறுவர், சிறுமியர்”
– முகுந்த் நாகராஜன்
வளர்தலும் வளர்தல் நிமித்தமும் வன்முறையை நோக்கி மட்டும் தான் என்று நினைக்கும் போதே இந்த உலகம் குழந்தைகள் உலகமாக மட்டுமே இருந்திருந்தால் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜெர்மானியக் கவிஞர் கதே படைத்த சாத்தான் கதாபாத்திரம், கடவுளை விடவும் நான் நல்லவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும். அதில்,
“நீங்களே யோசித்துப் பாருங்கள். கடவுளை நீங்கள் தேடிப் போயாக வேண்டும். நானோ உங்களைத் தேடி வருவேன். ஆனால், நான் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான். உங்களுடைய இதயம். அது தான் உங்களுக்குத் தேவையற்றது. இதயம் மிகப்பெரிய பாரம். அது உங்களைப் போட்டு அழுத்திக் கொண்டே இருக்கும். அன்பு, கருணை, நன்மை, உண்மை என்று ஏதேதோ பேசி உங்களைக் குழப்பிக் கொண்டே இருக்கும். உங்களை ஆசைப் பட விடாது. பணம் சம்பாதிக்க அனுமதிக்காது. எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
என்னிடம் ஓர் அரசியல்வாதியின் இதயம் இருக்கிறது. அதைக் கழற்றிக் கொடுத்த மறுநாளே அவர் ஊரின் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். என்னிடம் ஒரு வணிகரின் இதயம் இருக்கிறது. ஒரு சிறிய ஓட்டு வீட்டில் இருந்தவர் தன் இதயத்தை இழந்த பிறகு கடகடவென்று மாடி மேல் மாடி கட்டி இன்பமாக இருக்கிறார். என்னிடம் ஒரு மருத்துவரின் இதயம் இருக்கிறது. ஒரு கவிஞரின் இதயம் இருக்கிறது. விளையாட்டு வீரர், விஞ்ஞானி, ஆய்வாளர், பெண்ணின் இதயம் என எல்லாம் இருக்கிறது ஆனால் எனக்குத் தேவை எல்லாம் ஒரு குழந்தையின் இதயம் தான். மிகச் சிறியதாக, பூ போல இருக்கும். என்ன கொடுத்தாலும் அவர்கள் தங்கள் இதயத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் உலகம் இனிமையாக இருக்கிறதோ என்னவோ?”, என்று எழுதியிருப்பார். எவ்வளவு ஆழமான கதை? குழந்தைகளின் உலகம் அப்பழுக்கற்றது. வன்மமும் வன்முறையும் அங்கே வாழத் தகுதியற்றவை. போர் தொடர்புடைய சொற்கள் எல்லாம் அங்கே புரியாத மொழி தான்.
2016 சிரியா போரில், வலி தாங்க முடியாமல் இறப்பின் தறுவாயில் இருக்கும் குழந்தை ஒன்று, ‘நிகழ்வதனைத்தையும் கண்டிப்பாக நான் கடவுளிடம் சொல்லப் போகிறேன்’ என்று அழுது கொண்டே பேசும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளம் எங்கும் வலம் வந்தது. அதைப் பார்க்கும் பொழுதே மனம் பதைபதைத்தது. 2020-ல் கொரோனா காலங்களில், அழிவின் பிடி நம் அனைவரையும் ஆட்டிப்படைக்க, உண்மையிலேயே அந்தச் சிறுவன் அல்லாவிடம் அனைத்தையும் சொல்லி இருப்பானோ என்று நாத்திகரையும் ஒரு நொடி நம்ப வைத்தது உலகம் பட்ட பாடு.
புரட்சியைப் பெரிதாக நம்பும் மனங்கள் கூட ஏன் போர்களை அதுபோல் விரும்புவதில்லை? புரட்சி தானாய் நிகழ்வது. போர், தலைமை ஒருவரின் ஏவலால் எழுவது. எந்தச் சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தன்னுடைய எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சிக்கு மத்தியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும் மொழிந்த தமிழ்ப் புலவர்கள் குருதியின் ஒரு துளி என் உடம்பிலும் ஓடும் காரணத்தாலோ என்னவோ, ரத்தம் குடிக்கும் யுத்தம் எனக்கு விருப்பமானதாய் இருந்ததே இல்லை. ஆதிக்கத் திமிரில், அத்தனை நாடுகளை வதைத்த, அமெரிக்கக் கொட்டத்தை, ஒசாமா ஒடுக்க நினைத்ததைக் கூட, முட்டாள்தனம் என்றே என் மூளை சொல்லியது. தினப்பசியை மறந்து இனப்பசியில் கிடந்த எத்தனையோ நாட்களில் கூட, பிரபாகரன் வாழ்வை நினைத்தும் அந்த மக்கள் பட்ட வேதனைகளை நினைத்தும், வருத்தம் என்னை வதைத்ததுண்டு. தின்றால் போச்சு என்று என்னை நானே தேற்றிக் கொண்டாலும், கறிக்கடையில் நிகழும் கழுத்தறுப்பு வேளைகளில், ஒருநாள் கூட உணர்ச்சிவசப்படாமல் இருந்ததில்லை. இப்படி இருக்க, போர்களை எப்படிப் போற்றும் மனம்?
இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் ‘தி பியானிஸ்ட்’ ஒரு முக்கியமான படம். போர் வேண்டாம் என்று நம் புத்திக்குச் சொல்ல எத்தனையோ நல்ல காட்சிகளை இத்திரைப்படங்களில் காணமுடியும். ஜெர்மனியின் பிடியில் சிக்காமல் ஒரு பாழடைந்த வீட்டில் தஞ்சம் புகுந்து, தப்பிக்கும் ஒரு யூதனின் கதை. தஞ்சமடைந்த வீட்டில் கிடைத்ததை உண்டு உயிர் வாழ்பவன், இறுதிக் காட்சியில் ஒரு ஜெர்மானிய அதிகாரியிடம் சிக்கிக் கொள்ள, அந்த அதிகாரி அவன் ஓர் இசை மேதை என்று அறிந்த பின், பியானோ ஒன்றை வாசிக்கச் சொல்லிப் பணிக்கிறான். அவன் வாசிப்பில் லயித்துப் போன அதிகாரி, அடுத்த நாளும் வந்து அவனைக் காண்கிறான்.
“உன் பேர் என்ன?”
“ஸ்பில்மேன்”
“ஸ்பில்மேன், உருசியா நெருங்கி வந்துவிட்டது. போர் முடியப் போகிறது கொஞ்சம் பொறுத்துக் கொள்” என்று ஆறுதல் கூறி உணவும் அளிக்கிறான். இறுதிக் காட்சியில், உருசியா படையிடம் சிக்கி சிறைக் கைதியாக அமர்ந்திருக்கும் அதே ஜெர்மானிய அதிகாரி, அவ்வழியாக மீண்டு நாடு செல்லும் யூத வயலின் வித்துவான் ஒருவரைக் கண்டு, ‘உனக்கு ஸ்பில்மேனைத் தெரியுமா’ எனக் கேட்க, அவன் நன்கு தெரியும் என்பான்.
“அப்படியானால் அவனிடம் நான் இங்கு சிறைப்பட்டிருப்பதைச் சொல். நான் அவனைக் காப்பாற்றியிருக்கிறேன். என்னை வந்து காப்பாற்றச் சொல்”, என மன்றாடுவான்.
“உன் பெயர் என்ன?”, வயலின் வித்துவான். ‘ஹோசன்ஃபெல்ட்’ என அவன் சொல்வது நமக்குக் கேட்கும், ஆனால் பேசிக் கொண்டே நடக்கும் அந்த வயலின் வித்துவான் ஒன்றும் புரியாமல் மீண்டும் கேட்க, அவனைச் சொல்ல விடாமல் ஓர் உருசிய அதிகாரி அடித்து இழுத்து அமர்த்தி விடுவார். தன் உயிரைக் காப்பாற்றிய அதிகாரி, கடைசி பொழுதுகளைக் கழித்த இடத்தினை வந்து பார்க்கும் ஸ்பில்மேன், ‘அவர் பெயரையாவது கேட்டிருக்கலாமே’ என்று வருத்தமுறுவான். ஹோசன்ஃபெல்ட் தன் இறுதி நாட்களை உருசியச் சிறையிலேயே கழித்து மாண்டும் போவார். உண்மை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், போர் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இன்றி எந்தப் பக்கமும் இரக்கம் காட்டாத இயல்புடையது என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டியிருக்கும்.
எழுத்தாளர் இராபர்ட் கிரேவ்ஸ், பேனா காகிதங்களைப் பிடித்துப் பெருங்கனவோடு நின்ற காலத்தில், இங்கிலாந்து இருக்கும் நிலைமைக்கு இலக்கியம் தேவையா என்று நாடு அவர் கைகளில் துப்பாக்கியைத் திணித்து போர்க்களத்தில் நிறுத்திய அனுபவத்தை மிக அழகாக எழுதியிருப்பார்.
“ஒரு துப்பாக்கி எப்படி வெடிக்கும் என்பதை அன்று நான் கண்டேன். ஒரு மனிதன் என் கண் முன்னால் சரிந்து விழுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். அவன் கையிலிருந்த துப்பாக்கி தள்ளிப்போய் விழுந்தது. அவன் துடித்துக் கொண்டிருந்தான். அவனால் பேச முடியவில்லை. அவன் மொழி எனக்குத் தெரியாது. அநேகமாக அவன் தன் அப்பாவையோ, அம்மாவையோ அழைத்திருக்கலாம். அவன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கிரேவ்ஸ் அவன் நம் பகைவன். நீ சுடுவதை நிறுத்தாதே என்று யாரோ என்னிடம் கத்தினார்கள். விழுந்து கிடந்த ‘பகைவன்’ என்னைப் போலவே இருந்தான். என்னைப் போலவே பெருங்கனவோடு கவிஞனாகவோ ஓவியனாகவோ நினைத்தவனைப் போர் விட்டிருக்காது. விழுந்து கிடக்கும் இந்தத் துப்பாக்கியை அது தான் அவனிடம் திணித்திருக்கும்.
என்னைப்போலவே அவனையும் இங்கே வந்து இறக்கிவிட்டிருப்பார்கள். அதோ பகைவன் சுடு என்று அவன் அதிகாரிகள் என்னைக் காட்டியிருப்பார்கள். நான் யார் என்றே தெரியாமல் என்னைப் பார்த்து அவனும், அவன் யார் என்றே தெரியாமல் நானும் சுட இப்போது அவன் காயமடைந்து கீழே விழுந்திருக்கிறான். எனக்குக் காயமில்லை என்றாலும் நானும் விழுந்துதானே கிடக்கிறேன்? நானும் அவனைப் போல் தவித்துக்கொண்டுதானே இருக்கிறேன்?
இவன் சீருடையின் நிறம் வேறு என்பதால் இவன் எனக்குப் பகைவன் ஆகிவிட்டானா? இவன் பெயர் என்ன? போர், முதலில் ஒருவனது கனவைக் கொல்கிறது. அதன்பின் அவனது உள்ளத்தை. இறுதியாக அவன் உடலை. துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குனிந்தேன். அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் என் கண்களைப் போலவே இருந்தன. நிறம் மட்டுமே வேறு. என் கைகளை அவன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். கவலைப்படாதே நீ என் நண்பன் என்று அவன் காதில் சொன்னேன். என் மொழி அவனுக்குப் புரிந்திருக்காது. புரிந்தாலும் இந்த இரைச்சலில் அவனுக்கு எதுவும் கேட்டிருக்காது”
இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளரான இராபர்ட் கிரேவ்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்து எழுதிக் கொண்டே தான் இருந்தார்.
பல ஆண்டுகளாக நடக்கும் உருசியா – உக்ரைன் போரில், பிடிபட்ட உக்ரைன் நாட்டு வீரர் ஒருவரை அண்மையில் தான் உருசியா அரசு விடுதலை செய்திருக்கிறது. அவர் புகைப்படத்தைப் பகிர்ந்த உக்ரைன் அரசு, கடும் கண்டனத்தைத் தெரிவித்த போதிலும், படத்தைப் பார்க்கும்பொழுது நமக்கே ஓர் இடைவெளி விட்டு இருதயம் துடிக்கிறது. அவர் பிடிபட்ட நாளில், உருசியா நாட்டில் அடிபட்ட நாளில், எப்படித் தவித்திருக்கும் அவர் குடும்பம்? உடலை வதைத்து உயிரை மட்டும் மிச்சம் விட்டிருக்கும் உருசியா, பொதுவுடைமை சித்தாந்தத்தின் பிறப்பிடம் என்று, சொல்லவே நாக் கூசுகிறது.
1939 போர் ஒன்று இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த வேளை. இறந்த சிப்பாய் ஒருவரின் பையில், அவர் காதலிக்காக எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,
“போர் முடியப் போகிறது, உன்னைப் போன்ற பூக்கள், உலகம் எங்கும் பூக்கும். உன் கருவறை, ஒரு தேவதையைக் கருக்கொள்ளப் போகிறது” என்று எழுதியிருந்தது. ஈரம் காயாத எழுத்துகளிலிருந்த துடிப்பு, அவன் இதயத்தில் இல்லை. அவன் காதலியை, அந்தக் கடிதம் சென்றடைந்ததா தெரியவில்லை. அவள் காத்திருப்பின் வலிக்குக் காலம் என்ன பதில் சொல்லும்? அண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதையில், அடிமையாக விற்கப்பட்ட சிறுவன், கொடுமை தாங்க முடியாமல், அவன் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுவதைப் போல, ஒரு காட்சி அமைத்திருப்பார். அதில், ‘இங்கே கொடுமை தாங்க முடியவில்லை. நாளை கிறிஸ்துமஸ். மறக்காமல் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். உங்கள் வரவுக்காகக் காத்திருப்பேன்’ என்று கண்ணீரில் சொற்களை நனைத்து எழுதியிருப்பான். ஆனால் கடிதத்தின் அனுப்புநர் முகவரியில், ‘தாத்தாவிற்கு’ என்று மட்டும் எழுதி அஞ்சல் அனுப்புவான். வராத தாத்தாவின் வருகைக்குக் காத்திருக்கும் அந்தச் சிறுவனின் மனநிலையிலிருந்து சற்றும் மாறுபடாதா மனநிலை தான் இறந்து போன சிப்பாயின் காதலிக்கும் இருந்திருக்கும். இரண்டிற்கும் என்ன முடிவென்று நமக்குத் தெரியும், ஆனால் காத்திருப்போருக்கு? இப்படி, போர்களால், காத்திருக்கும் இதயங்கள் எத்தனை? தனித்து விடப்பட்ட குடும்பங்கள் எத்தனை எத்தனை? போரில் மட்டும் தான், வென்றவர்கள் கூட தோற்றவர்கள் ஆகிறார்கள். இனியாவது, இரவின் உயிர் குடித்து விடியும் வானம், இன்பமாய் விடியட்டும். உலகில் இனிமேல் பூக்கும் பூக்கள், கோபங்களைக் குறைக்கட்டும். போர்களில் இறந்த குடும்பத்தில், புன்னகைக் குறையாதிருக்கட்டும். பிரபஞ்சம், பிணங்களால் அல்ல, பிரியங்களால் நிறையட்டும்.
இஸ்ரேல் யூ.எஸ் சரியா, ஈரான் சரியா என்ற கேள்விக்கு, எப்போதோ படித்து என் இதய அறைகளிலெல்லாம் எழுதி வைத்திருக்கும் ஆங்கிலச் சொற்றொடர் ஒன்றைத் தான் பதிலாகச் சொல்ல வேண்டும் என்று விழைகிறது மனது.
War is not about who is right!
War is all about who is left!