முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட…

பயணத்தில்
ஜன்னல் ஓரம்
கண் மூடிக்
காற்று வாங்குபவன்
போல்
கிடக்கிறான்
பனிப் பெட்டிக்குள்

பின்னகரும் மரங்கள்
போல வந்து
சாத்துயர் கேட்டுப்
போகிறார்கள்

- கலாப்ரியா

“இந்த ஊர்ல இருக்க எல்லாத் தெருவையும் போட்டோ எடுத்து வச்சிக்கணும் டா”, என்று பெல்ஜியம் சாலைகளைக் காட்டியதற்கு

“ஏன்?”, என்றான் ஜெரால்ட் கொஞ்சம் வியப்பாக.

“நாளப்பின்ன இங்க வந்தா எது எது மாறிருக்குனு நமக்கு அடையாளம் தெரியணும்ல”

“அதெல்லாம் ஒன்னும் மாறி இருக்காது. இது யூரோப். நூறு வருசத்துக்கு முன்னடி எடுத்த எந்தப் போட்டாவ பாத்தீன்னாலும் இந்த ஊரு அப்படியே தான் இருக்கும். எதுவும் பெருசா மாறிருக்காது”, என்றான்.

‘எதுவும் பெருசா மாறிருக்காது’ என்று அவன் சொன்னது மட்டும் என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மாற்றம் இல்லாமல் எப்படி? அவன் சொன்னது உண்மை தானா எனத் தேடிப்பார்த்த போது சற்று வியப்பாகத்தான் இருந்தது. நூறு ஆண்டுகளில் சாலையிலோ கட்டிடங்களிலோ பெரிய மாற்றங்கள் என எதுவும் இல்லை.

யூரோப்பை மட்டும் மாற்றங்கள் எதுவும் செய்வதில்லையா?

பிரிய முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு நடைபோடும் வெறுப்பையோ, காதல் நாடகம் முடிந்தவுடன் அரங்கம் விட்டிறங்கி அரிதாரங்களை அழித்து இயல்பு மனிதராய் நடைபோடும் முகத்தையோ, முளைக்கும் நாள் வரை உறங்கிக் கொண்டிருக்கும் விதையாய்க் கண்ணீருக்குள் மறைந்திருக்கும் மகிழ்ச்சியையோ, நினைவுகள் ஆகப் போகும் எனத் தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்களையோ, மாற்றம் அருகில் நின்றபடி எப்போது மாற்றலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கும் தானே?

கிரிக்கெட் உலகமே பெரிதாய்ப் பேசப்பட்ட உன்முக்த் சந்த் அதன்பின் அவர் வாழ்வில் நிகழப்போகும் மாற்றத்தையும் வீழ்ச்சியையும் நினைத்துப் பார்த்திருப்பாரா? தனக்குப் பின்னால் வந்து லாட்டரி வாங்கியவர் பரிசு வெல்ல, ஒரு நிமிடத் தாமதம், முன்னால் சென்றவரின் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றியிருக்கும்? ‘வாழ்க்க எப்படியெல்லாம் மாறிடுச்சில’, எனப் பொறுப்போடு பேசிய பிரபு நாதனுக்கு, கல்லூரியில் ஆட்டம் போட்டலைந்த காலத்தை மறக்க வைத்து, மாற்றம் பற்றிய பாடத்தை எந்த மொழியில் வாழ்க்கை சொல்லிக் கொடுத்திருக்கும்? இன்பமாகக் காதலியோடு சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் எல்லோருக்கும் காதல் பற்றி பாடம் எடுக்கும் மதன், இப்போதும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டு காதல் நியமித்த மதபோதகர் வேலையைச் செய்து கொண்டு தான் இருப்பானா? காதலுக்குத் தொல்லைத் தரும் ஆண் தோழர் ஒருவரை, ஆட்கள் வைத்து கை கால் உடைக்கச் சொன்ன பெயர் குறிப்பிட முடியாத நண்பர் ஒருவர் இப்போது அன்பின் கட்டளைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் எனில், மாற்றம் பற்றி அவரிடம் பேட்டி எடுக்கலாம் தானே?

பூமர், கிரிஞ்ச், ஜென் சீ போன்ற எத்தனையோச் சொற்களுக்கு மாற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் கால அகராதி இடம் கொடுத்திருக்கிறதல்லவா?

நட்பின் அளவீட்டை மாற்றாமல் ஆண்டுக்கு ஒரு செல்போன் மாற்றும் தீபினிடம் மாற்றத்தின் பொருளையும், அதன் தலையீட்டை எதுவரை அனுமதிக்க வேண்டுமென்ற அளவீட்டையும் எல்லோரும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் தானே?

இன்றும் டி.எம்.எஸ் கண்ணதாசனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா, ஏன் எஸ்.பி.பி வைரமுத்துவை நல்ல கலைஞர்கள் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று இப்போது புரிகிறது. ‘ரகுமான் எல்லாம் ராஜா மாதிரி வருவாரா’ என எப்போதும் வாதிடும் ரவி அண்ணா அரவிந்த் அண்ணா மனநிலையைப் புரிந்து கொள்ள எனக்கு அனிருத் இசை தான் உதவியது. ‘சார்ஜால சூறாவளிக்கு மத்தியில சச்சின் அடிச்ச இன்னிங்க்ஸ்க்கு தோனியோட எல்லா இன்னிங்க்ஸையும் வச்சாக் கூட ஈடாகாது’ என்ற கிரி அண்ணன் இப்போது விராட் கோலியை முகமாய் கருதும் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டு தான் இருப்பாரா?

இந்த உலகம் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை நோக்கித் தான் போய்க் கொண்டே இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம் அந்த காலத்தில் அந்த இடத்திலேயே தங்கி விடுகிறது. ‘மணிரத்தினம்னு புதுசா ஒரு டைரக்டர் வந்துருக்காரு. அசாருதின்னு ஒரு புது கிரிக்கெட்டர் வந்துருக்காரு. எம்.ஜி.ஆர் செத்துட்டாராம். இந்திரா காந்திய கொன்னுட்டாங்களாம்’, என நாம் எல்லோருமே, எண்பதிலேயே தங்கிவிடும் மொழி பட எம்.எஸ்.பாஸ்கரைப் போலத்தானே வாழ்கிறோம்? ஏன் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் நமக்கு இவ்வளவு அச்சம்? தண்ணீருக்குள் கை நனைத்து கை நனைத்து இட்லிக்குள் ஆட்காட்டி விரலால் ஓட்டையிடும் அம்மாக்களைப் போல நம்மைத் துளையிட்டுச் சோதித்து மாற்றத்திற்கு உட்படுத்துகிறது காலம்.

சிறு வயதில் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் மஞ்சு, இப்போது அழைத்து அன்பாகப் பேசி, வீட்டிற்கு அழைத்த குரலில் தான் எத்தனை மாற்றங்கள்? குடும்பத்துடன் சென்னைக்கு இடம்பெயர்ந்த போது வீட்டைப் பார்த்துப் பார்த்து அழுத லில்லி பாட்டியின் கண்ணீருக்குக் காரணம் என்ன, மாற்றத்தைக் குறித்த அச்சம் தானே? ‘எவ்வளவு பணக் கஷ்டம் இப்ப எல்லாம் மாறிடுச்சு டா தம்பி’ எனக் கழுத்துச் சங்கிலியைக் காட்டிய கார்த்தி அக்காவுக்கு மாற்றம் பிடித்திருக்கும் தானே? தந்தைக்குப் பணி மாற்றம் வர, ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் மாற்றம் அவ்வளவு மாற்றத்தைக் கொடுப்பதில்லை தானே? புது வீடு, பணிக்காக புது நகரம், வேறு வகுப்பறை, ஒரே வகுப்பறை ஆயினும் வேறு இருக்கை என எல்லாக் காலங்களிலும் மாற்றம் கையில் வைத்து விளையாடும் ஒரு களிமண் பொம்மைகள் தான் நாம்.

வீடுமாறிச் சென்ற சில வாரங்கள், பழைய தெருவைச் சுற்றி வந்த கதையை நான் அக்காக்களிடம் கூடச் சொன்னதில்லை. குடியிருந்த பழைய வீட்டில் வேறொரு குடும்பம் வசிப்பதைப் பார்க்கப் பார்க்க மனமெல்லாம் ஒரு நெருடல். எங்களுடைய வீடென்று எல்லோருக்கும் காட்டிய இடத்தில் இப்போது இன்னொருவர் வசிப்பதைக் கூட ஏற்க மறுக்கும் நெஞ்சத்திடம் மாற்றங்களைப் பற்றி பாடம் எடுக்கும் துணிவு எனக்கு இல்லை.

“இப்ப அப்படி தான் இருப்பான், கல்யாணத்துக்கு அப்பறம், பொண்டாட்டி வந்ததும் மாறிடுவான்”, என்று ஆண்களைப் பார்த்துச் சொல்லும் எல்லா இந்தியப் பெண்களுக்கும் மாற்றத்தில் உடன்பாடு இல்லையா?

விருந்தினராய் வந்த முதல் நாளே சண்டையிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட லக்ஷ்மணிடம் வழியச் சென்று நான் மன்னிப்புக் கேட்க, திரும்பிச் செல்லும் முந்தைய நாள் பிரிவை எண்ணி வருத்தத்தோடே விடைபெற்றான். மன்னிப்பு என்ற ஒரு சொல் எத்தனை மாற்றத்தைக் கொடுக்க வல்லது?

மாற்றங்கள் மீது கட்டி எழுப்பப்பட்ட கட்டடம் தான் இந்த உலகம். பிறகேன் அதோடு இயைந்து வாழ இப்படி அஞ்சுகிறோம்? இருக்கும் இடத்தின் கதகதப்பு இன்னொரு இடத்தில் கிடைக்காமல் போகுமென்ற பதைப்பா? மாற்றங்கள் நம் பயணத்தைத் தீர்மானிக்கும் பாதைகள்.

பொதுவாகப் பன்னாட்டு நிறுவனங்களில் மாற்றங்கள் வெகு இயல்பாகவே நடக்கும். உடன் வேலைப்பார்த்த ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பணி மாற்றிச் செல்லும் சாத்தியம் அங்கே மிகுதியாய் இருப்பதால், அங்கே பற்றுக்கோ உறவுக்கோ வாய்ப்புகள் மிகக் குறைவே. நாமாக மாறவில்லை என்றாலும், நாம் வேலை செய்யும் நிறுவனம் நாளைக்கே வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மாற்றிக் கொண்டால், பழைய நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோரின் நிலையும் அதோ கதி தான்.

திசம்பர் நான்காம் நாள், ஒரு மதியவேளை, மும்மரமாக எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க, கூட்டத்திற்கான ஒரு அழைப்பு வந்தது. ஒன்றும் புரியாமல் நாங்கள் கலந்துகொள்ள, அதிர்ச்சி தான் எங்களுக்குக் காத்திருந்தது. ஒப்பந்தம் கை மாறியதாகவும், வேறொரு நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு மாற்றாக வந்ததாகவும் சொல்லி, மூன்று மாதங்களில் இந்தியா திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டோம். அன்று அலுவலகத்தில் எங்குப் பார்த்தாலும் கண்ணீரின் பிசுபிசுப்பு. புதிதாய்த் திருமணம் ஆகி (இந்தியாவில் பணி நிறுத்திய)மனைவியோடு பெல்ஜியம் வந்தவர்கள், இந்தியாவில் பொருட்களை விற்று வீட்டை காலி செய்து வந்தவர்கள், கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், வருமானத்தை நம்பி அகலக் கால் வைத்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு நிமிடம் கனவு கலைந்தது போல் இருந்திருக்கும். அற்றை நாள் கொடுத்த ஆழ்ந்த சோகத்துடன் ஆர்.கே அண்ணாவிடம் நான் அழுகாத குறையாய்ப் புலம்ப, ‘பன்னாட்டு நிறுவனத்துல இது இயல்பு தான? நாம தான் அதுக்கு ஏத்த மாதிரி தயாரா இருந்திருக்கணும்’ என்று வெகு இயல்பாகக் கூறினார். எப்படி இவரால் இதை இவ்வளவு இயல்பாகச் சொல்ல முடிகிறது? இது தான் உன் நிலை என்ற நிறுவனத்தின் பதில்கள் ஒரு புறம் துரத்த, நான் மட்டும் தான் மாற்றத்திற்கு அஞ்சிக் கிடக்கிறேனா என்ற கேள்விகள் மறுபுறம் துரத்த, தூக்கமின்றி கலைந்தது அன்றைய இரவு.

மறுநாள் அலுவலகக் குழுவில் உடன் வேலை செய்யும் எஜ்டர், ‘உங்கள் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னால் இறந்த காலத்திற்குச் சென்று ஒரு விஷயத்தை மாற்ற முடியும் என்றால், உங்களை எல்லாம் அதிகம் வேலை செய்ய வேண்டாம் என எச்சரித்திருந்திருப்பேன். வீடு, குழந்தைகள், தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக அக்கறை செலுத்தும் படி ஆலோசனை கூறியிருப்பேன். வாழ்க்கை ஒன்றைக் கொடுக்கும். ஒன்றை எடுக்கும். இறுதியில் உங்களோடு இருக்கப் போவதென்னவோ நீங்கள் மட்டும் தான்”, என்று ஒரு செய்தி அனுப்பி இருந்தார்.

அவரைத் தொடர்ந்து மேலாளரான நிக்கியும், ‘நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, உங்களுக்குத் தேவையான இடைவேளையை எடுத்துக் கொள்ளுங்கள். என் தலையாயக் கவலை வேலை அல்ல, நீங்கள் தான்’, என்று செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். மேலாளர் ஒருவரிடம் இருந்து அப்படியொரு செய்தியை யாருமே எதிர்பார்க்கவில்லை. வேலையில் மட்டுமே அக்கறையோடு இருப்பார் என நினைத்த மேலாளரை, நிறுவனத்தின் ஒற்றை முடிவு எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறது? அதுவரை வெறும் அலுவல் குழுவாக மட்டும் இருந்த எங்கள் டீம் அதற்குப் பின் இன்னும் நெருக்கமானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்வை அறிந்து கொள்வது, புரிந்து செல்வது என எங்களுக்குள் எத்தனை மாற்றங்கள் இந்த ஆறு மாதங்களில். முடிந்தவரை தன்னுடன் வேலை செய்யும் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கதவைத் திறந்து விடச் செய்யும் முயற்சி, விடுமுறை அனுமதி, அடிக்கடி வெளியே செல்வது என அந்த ஒற்றை முடிவு எங்களுக்குள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒருவகையில் அந்த முடிவும் நல்லபடியாகத் தான் அமைந்தது. எங்களை எங்களுக்கே அறிமுகம் செய்ய உதவியது. மாறாதிருப்பது மாற்றம் மட்டும் தான், கண்ணீர் தரும் மாற்றங்கள் கூட கண்டிப்பாய் வடிவம் மாறும் என்ற போதனையை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அன்று அழுத கண்கள் எல்லாம் அடுத்து வாழ்வில் என்ன செய்யப்போகிறோம் என்று ஆர்வத்தோடு ஆயத்தமாய் நிற்கின்றன இன்று.

அதுசரி, இந்த வாழ்வே மாற்றங்களால் ஆனது தானே?

Shopping Cart
Scroll to Top