சலீம் – அனார்கலி

எந்தத் துளைக்குள்
இசை இருக்குமென்று
காற்றே அரியும்!

எந்தத் துளிக்குள்
வானவில் இருக்கும்,
வெயிலே அறியும்!

அதைப் போல் தான்
காதலும்!
எந்த மனத்திற்குள்
காதல் இருக்கும்,
உலகம் அறியாது,
காலமே அறியும்!

உலக வரலாற்றில்
உயிர்கள் குடித்த யுத்தங்களில்
முதன்மையானது எது?

ஆதாயம் கிடைக்க
ஆ! தாயம்! கேட்டு,
மனைவி மனை
மாடு இழந்து,
கைப்பொருள் விட்டுக்
காடு நுழைந்து,
உட்பகை நெஞ்சுக்குள்
உலையாய் கொதிக்க – அது
கொதித்த வேகத்தில்
கொலையாய் சுகிக்க
குடும்பத்திற்குள் நிகழ்ந்த
குருட்சேத்திர போரா?

எல்லைகளைப் பரப்ப – பலர்
அல்லைகளை உருவிய
முகலாய யுத்தங்களா?

வீழ்ச்சியால் தவித்த
வெள்ளை இனம்
சூழ்ச்சியால் வென்று
சுருட்டிக் கொண்ட
அமெரிக்க யுத்தங்களா?

பானிபட்டா?
கலிங்கமா?

வணிகம் என்ற
வாசல் வழி வந்து
போகும் வரையில்
பூசல் பல தந்து,
அடல்களில் கூட
அரசியல் குழப்பி
உடல்களைக் கொண்டு
உட்சுவர் எழுப்பி,
இந்தியத்தை ஆண்ட
இங்கிலாந்து யுத்தங்களா?

பேராசையாலோ
வரலாற்றில் தத்தம்
பேர் ஆசையாலோ
நிகழ்ந்த
நிலப்பரப்பை அரக்கத்தால்
அகழ்ந்த
முதலாம் உலகப் போரா?

நிசியில்
வன்மத்தின்
பசியில்
உறங்கிக் கொண்டிருந்த
இரு நகரங்களை,
உருக்கிக் கொன்று சென்ற
இரண்டாம் உலகப் போரா?

இல்லை!
இல்லவே இல்லை!
கொடுமையான
யுத்தங்களுள்
முதன்மையானது,
காதல் தான்!

ஆம்!
உலகின் முதல் யுத்தம்
காதலுக்காகவே
உந்தப் பட்டிருக்கும்!
உலகின் முதல் ரத்தம்
காதலுக்காகவே
சிந்தப் பட்டிருக்கும்!

இந்திய எல்லைகளை,
மோதி உடைத்து
முட்டித் துளைத்த
முகலாயர்கள் மிக
முரடானவர்கள்!
களங்களிலே மிகக்
கரடானவர்கள்!

முரடான இடம் துளைத்து
முளைக்கும் செடியாய்
ஒவ்வொரு மனத்திலும்
உதிராப் பூக்களாய்க்
காதல் பூத்தன! பல
தலைமுறை அதிலே
தடைகளை உடைத்துக்
கைகள் கோர்த்தன!

அதில் புகழ்பெற்றவர்
ஷாஜகான்!

யமுனை நதிக்கரையில்
பெண்ணின் எழில் சொன்ன
பெருங்கவிதைக்காக
மண்ணின் மைந்தன் ஒருவன் – ஒரு
மணி மண்டபம் கட்டுகிறான்!

அது
காலங்கள் கடந்தும் இந்த
மண்ணுக்கு மட்டுமல்ல அந்தப்
பெண்ணுக்கும்
பெருமை சேர்க்கிறது! ஆம்!
செதுக்கி வைத்த
சித்திர அழகுக்குள்
பதுக்கி வைத்த
பைங்கிளிகளின்
இதயம் இரண்டு இன்றும்
ஒன்றாய் சேர்கிறது! அந்தச்
சொத்துக்குச்
சொந்தக் காரர்
வித்துக்குச்
சொந்தக் காரர்
ஜாஹான் கீர்!

விந்தை புரிந்த
ஷாஜகானின்
விந்தை சுமந்த
தந்தை!

மன்னரின் மணிமுடிக்கு
மதங்களே அன்று
மந்திரக் கோலாய்க்
சாசனம் விதித்தன! அவை
இன்னது செய்யென்று
எத்தகு நிலையிலும்
இறுமாப்போடொரு
ஆசனம் தரித்தன!

அக்பருக்கும் அப்படி
நடக்க,
அக்பர் வெகுண்டு எழுந்தார்!

மீனுக்குத் தானே
வலை? அட
தண்ணீருக்கென்ன
தளை?

நரம்புகள் புடைத்து
வரம்புகள் உடைத்து
மூர்க்கம் துறந்து
மார்க்கம் மறந்து
ஜோதா என்னும்
பிறமதப் பெண்மீது
பிரியம் வைத்தார் அக்பர்!

இருவேறு மதங்களின்
சவத்தில்,
இருவரும் புரிந்திடத்
தவத்தில்
பேறானவன்
ஏனைய மகன்கள்
எல்லோரை விடவும்
வேறானவன்!

ஜாஹான் கீர்!

அவனது இன்னொரு பெயர்,
சலீம்!

பிள்ளைகளில் அவனே
இளங்கன்று!
ஆயினும்
அக்பர் அவனையே
பெரிதாய் நினைத்தார்
தினம் அன்று!

கன்றது
காளையானது!
போர்களை
வென்றிடும்
வேளையானது!

கலைகள் கற்று
கம்பீரம் பெற்று
போர்களை வென்று
பேர்களைப் பெற்றான்!
தந்தையின் சொல்,
அதனினும் வேறோரு
ஆசைகள் அற்றான்!

வென்றவனைப் பெருமையாய்
வரவேற்க
வெல்வதற்கே
வெளியூர்
சென்றவனை அரண்மனை
உறவேற்க,
ஊர்ப் பாடும் புகழோடு
ஏற்பாடும் ஆனது! விதி
ஏற்பாட்டை எண்ணாமல்
எங்கெங்கோ போனது!

பதுக்கி வைத்த
அழகை எல்லாம்
செதுக்கி வைக்க
வேண்டும் என்றொரு
சிற்பிக்குக் கட்டளை
செலுத்தினார் அக்பர்!

போதாத காலத்தால்
தோதான உருவம் செய்யத்
தோற்றுப் போகும் சிற்பி,
மெய்யான பெண்ணை
ஆபரணம் சூட்டி
பொய்யாகச் சிலைபோல்
அலங்கரித்து
அழைத்து வருகிறான்!

முத்துகள் அணிந்த
மோகச் சிலையைக்
கடக்கும் சலீமோ
கால் இடறினான்! அது
கல்லா என்றதன்
தோள் தடவினான்!

ஆச்சரியம் அவனுக்குள்
பூச்சொரிந்தது!
அவன் நா
அன்னத்தைத் தழுவாமல்
பேச்சிழந்தது!

போர்களைத் தவிர
இதர சுகங்களை
என்னவென்று அறியாதவன் – அவள்
அதர வரிகளை
விரல்களால் தடவினான்!

இருப்பது கல்லல்ல
கன்னி,
என்றவன் இதயத்தில்
எண்ணி,
உள் நாக்குக்
காய்ந்தது!
உடல் வேர்த்துப்
போனது!
சொல் மரங்கள்
சாய்ந்தது!
சுயம் மறந்தான்;
ஏன் அது?

இரண்டு விழிகளும்
எதிர் எதிரே
கண்டு கொண்டது!
அவன் நெஞ்சைத்
திரண்டு வந்த
பெண் புயலோ
கொண்டு சென்றது!

பட்டாம்பூச்சிக் கண்கள்
படபடத்தது! மின்னல்
வெட்டாமலே நெஞ்சம்
வெட வெடத்தது!

வந்து இறங்கிய
வானத்துத் தேவதையை – கண்டு
நொந்து நொறுங்கிய
இதயத் துகள்களைப்
பொறுக்கி எடுத்துப்
புறப்பட்டான்!
நாட்டின் இளவரசன்
நர்த்தனம் ஆடும்
சிறுக்கி விழிக்குள்
சிறைப்பட்டான்!

அந்தப்புரம்
அழகி அவன் வாழ்வில்
வந்தப்புறம்,
வாழ்க்கை இன்பமாய்
வழக்கத்தை விட்டு
மாறியது! அவனிடம்
வாஞ்சை கொஞ்சம்
வாழலாம் வாவென்று
கூறியது!

ஆம்!
வாஞ்சை அவனது
வாசல் கதவைத் தட்டியது!
உள்ளன்பு கொண்ட
ஒருத்தியின் உருவத்தை
எண்ணம் அவனது
இதயச் சுவரில் ஒட்டியது!

கண்ட பொழுதிலே இருவரும்
காதலில் விழுந்தனர்!
நொடிப் பொழுதும் உறங்காமல்
நோதலில் விழுந்தனர்!

விடாது பேசினர்!
விரகக் கங்குக்கு
வெண்சாமரம் வீசினர்!

உள்ளங்கைத் தேனே – உனை
எண்ணாத போதெல்லாம்
உள்ளங் கைத்தேனே – என்றவன்
உருகி உருகி
உயிர்க் கசிந்தான்! அவளை
அருகி அருகி
தனை மறந்தான்!

மோகம் அவனது
மூளைக்குச் சென்றதும்
தேகம் மெல்ல
தொய்ந்து போனது! அவன்
கொண்ட புகழெலாம்-
கொஞ்சம் கொஞ்சமாய்-
நாறினைப் போல
நைந்து போனது!

சலீமுக்குப் பெண்கொடுத்து
சம்பந்தம் செய்ய,
அந்தப்புறம் ஊர்வாழும்
அரசரெல்லாம் காத்திருக்க,
அந்தப்புரம் அழகியா
அரசியென்று வீற்றிருக்க? என்று
வியப்பில் அக்பர்
வியர்ப்பில் நிற்கச்
செய்வினை எல்லாம்
செய்து பார்த்தார்! அவர்
கைவினையால் சலீம்
கைது பார்த்தார்!

கந்தை நடுவே ஒரு
காஞ்சிப் பட்டாய்; கள்
மொந்தை நடுவே – பசு
மோரின் சொட்டாய்,
அனார்கலி இருந்தாள்;
ஆனாலும் அந்த ஊர்க்குருவி
அல்லல்கள் பல கண்டது
அக்பர் எனும் பருந்தால்;

அனார்கலி அக்பரால்
கைது செய்யப்பட்டாள்!
அடங்குவானா சலீம்
ஆசைக் காதலியும்
கைது செய்யப்பட்டால்?

தோழர்கள் அவனுக்குத்
தோள் கொடுத்தனர்! ஆம் சில
வாலிபர்கள் அவனோடு
வாள் எடுத்தனர்!

எடை பெருத்த யானை முன்
இடை செல்லும் எறும்பாகத்
தோற்றுப் போனார்கள்!
படை வலுத்த சேனை முன்
நிற்காமல் தோல்வியை
ஏற்றுப் போனார்கள்!

திருப்பி அடித்தால் நீ
தாங்க மாட்டாய்!
இன்னொரு பிறப்பு
ஈன்றவள் கருவர
வையத்திடம் வரம்
வாங்க மாட்டாய்!
என்று-
எச்சரித்த அக்பர்-
விடுவித்து எதுவும்
செய்யாமல் அனுப்பினார்
இளவரசை! சில
கெடு விதித்த பின்பே
கொய்யாமல் விட்டார்
பிறர் சிரசை!

அக்பர் அனார்கலியை
ஆளில்லா நிலவறையில்
அடைத்துவிட்டார்!
நாட்டின்-
நலனுக்காய் இரு-
ஆசை நெஞ்சங்களை
ஆட்சேபனையின்றி
உடைத்துவிட்டார்!

அனார்கலியை சலீம்
தலைமுறைத் தாயாக
தனக்குள் நினைத்தான்!
ஆனால் அவள்-
இலைமறைக்காயாக
இதயத்துள் தவித்தான்!
எங்கெங்கோ தேடினான்!
இடைவிடாது ஓடினான்!
அங்கங்கள் தோய
அயர்ச்சியில் வாடினான்!

மதித்த மகன் என்று
மனக் கணக்குப் போட்டவர்
கொதித்த நெருப்பாய்
கொந்தளித்தார்!
மகனுக்கே
மரண தண்டனையென
மனத்தால்
வெந்தளித்தார்!

செய்தி அறிந்த கைதி
செய்வதறியாமல்
அக்பரை அணுகி
ஆசையைக் கூறினாள்!
சலீமுக்குப் பதில்
சாவைத் தனக்குத்
தாருங்கள் என்று
தயையைக் கோரினாள்!

“ஆம்!
அவருக்காய் நான்
அத்தி ஆகிறேன்! ஒரு
சுவருக்காய் சிறு
செங்கல் பெயர்கிறேன்!
விரும்பித் தான் வதை – முகம்
அரும்பித் தான் இதை
வஞ்சியென்றன்
வாழ்வில் வரமாய்
வந்தவருக்காய்
வாங்கிச் செல்கிறேன்!
தாரமென்னும்
தகுதியை எனக்குத்
தந்தவருக்காய்த்
தாங்கிக் கொள்கிறேன்!

ஆனால் ஒரு
ஆசை,
இறப்புக்கு முன் ஓர்
இரவில் அவரோடு
இருக்க வேண்டும்!
அரசே என்னிறுதி
ஆசையை நீங்கள்
பொறுக்க வேண்டும்! என்று
அந்தப்புர
அந்தப் புறா
விம்மியழுது
வேண்டுகோள் ஒன்றை
வைத்தது!
வேந்தனைச் சொற்களால்
தைத்தது! அவன்
இதயத் தசைகளை
எரிதழற் பொறிகள்
எரித்துவிட எண்ணி
மொய்த்தது!
கைக்கட்டப்பட்ட
மன்னனின் மனம்
கைத்தது!
ஆயினும் அவ்விடம்
பொய்த்தது!
காதலே அங்கு
மெய்த்தது!

ஒரு யுகத்தில் சேர்த்த
அத்தனைக் காதலையும்
ஓர் இரவில் இருவரும்
கண்டு களித்தனர்!
கள்ளெனக் காமத்தை
மொண்டு குடித்தனர்!

அனார்கலி என்னும்
கடலில் தெப்பமானான்!
அவளுக்குக்
தன்னையே கொடுத்துக்
காமத்தில் கப்பமானான்!

அடுத்த நாள்
அனார்கலி
கல்லறை ஆனாள்!

எழுந்து பார்த்தவனுக்கு
எதுவும் புரியவில்லை!
இரவிலே தன்னோடு
இருந்த நிலவு
விடிந்ததும்
மறைந்து விட்டதா?

அகவல் செய்த மயில்
அடைந்த துயரத்
தகவல் சலீமுக்குத்
தெரிவிக்கப் பட்டது!
‘சாவுக்கு வரை இல்லையா?
பூவுக்குக் கல்லறையா?’ என்று
புலம்பித் தீர்த்தான்! அவள்
கல்லறை சென்று
கண்ணீர் வார்த்தான்!

அனார்கலி கல் ஆனாள்!

பெண் என்பவளே கல் தானே?
ஆனால் ஒரு விந்தை!
அந்தக் கல் தான்
எத்தனையோ சிற்பிகளைச்
செதுக்கியுள்ளது!

அனார்கலி
இறந்து கல் ஆனாள்!
சலீம்
இருந்து கல் ஆனான்!

அவள்,
நினைவுச் சின்னத்தில்
தினமும் பூக்கள்
உதிர்ந்து போகும்
ஒவ்வொரு காதலையும்
நினைவூட்டுகிறது!

வென்ற காதல்கள்
வெற்றாய்ப் போகிறது!
தோற்றக் காதலே
வேதம் ஆகிறது! ❤️

Shopping Cart
Scroll to Top