விதைகளில் போதிமரம்!

மேன்மையென்றும் கீழ்மையென்றும்
மேதினியைப் பிரித்துநிற்கும்
சாதியென்ற ஆழ்கடலைக் கடைந்தாய்! பின்
போதிசென்ற புத்தனையும் அடைந்தாய்!

ஏறிநின்று மிதித்தவரை
ஏழையாக்கும் சதித் தவறை
சட்டமென்னும் சாட்டைகொண்டு வெளுத்தாய்! கீழ்
மட்டம்குறைத் தீட்டிவைத்தாய் எழுத்தாய்!

வேறுபாட்டு தொல்லையில்லை
வெல்வதற்கும் எல்லையில்லை
என்று அன்று நீ கொடுத்த காட்சி – நாங்கள்
இன்று வெல்வ தென்ன உந்தன் நீட்சி!

தாக்குதலை தடுத்து எதிர்த்
தாக்குதலை விரும்பாமல்
உன்னுலையில் கேடயமே செய்தாய்! எதிராய்
நின்றவர்க்கும் அன்புமழைப் பெய்தாய்!

சகமனிதரைக் காயமாக்கி
சனாதனத்தை நியாயமாக்கி
அந்தணர்கள் அடித்தனரே கூத்து! பணிந்து
வந்தனரே உன்புகழைப் பார்த்து!

சட்டங்கள் உனைச்சுற்றி
சாமரங்கள் வீசிவிட
ஆணவத்தைத் தோலுரித்துப் போட்டாய்! நீயே
ஆண் அவத்தை கொளுத்திவிட்டாய் வேட்டாய்!

மூடர்கள் நம்பிக்கை
முள்விரித்து முகம்கிழிக்கும்
சமர்க்களத்தை நீ கடந்ததாலே! நாங்கள்
அமர்க்களமாய் எழுந்துவந்தோம் மேலே!

ஆதிக்கப் புயல்காற்று
ஆட்டிவைக்கும் போதெல்லாம்
நீவேராய் எங்களுக்கு நின்றாய்! இங்கு
ஈவேரா உன்நகலே என்றாய்!

ஆரியத்தின் வீழ்ச்சியினால்
திராவிடத்தின் சாட்சியினால்
இரு குவளை தொல்லை இங்கு இல்லை! உனக்குத்
திருக்குவளை கொள்கைவழிப் பிள்ளை!

கோடழிக்க வழிவகுத்தாய்
கோடரிகள் கைகொடுத்தாய்;
விழுந்தனவே சாதிமரம் கொத்தாய்! எங்கள்
விதைகளுக்குள் போதிமரம் நட்டாய்!

திருமணமும் சாதியத்தில்
தீட்டாக; எரிந்ததுவே
எம தர்மபுரியில் ஓர் நெருப்பு! அட
சம தர்ம புரியே நம் பொறுப்பு!

வரைமுறைகள் உடைந்துவிழ
தலைமுறைகள் தெளிந்துவிட
அனைவர்க்கும் உம்புகழைச் சொல்லி – நெஞ்சில்
அணையாமல் எரியட்டும் கொள்ளி!

*

Shopping Cart
Scroll to Top