குருதிக்குள் தோய்ந்தபடி
குண்டுமழைப் பெய்யும் – கணம்
இறுதிக்குள் செல்லுமினம்
எண்ணமென்ன செய்யும்?
வரம்புகளை உடைத்தபடி
வந்ததடா போர்கள்! பல
நரம்புகளை வடமாக்கி
நகர்ந்தடா தேர்கள்!
முடங்கியது போதுமென்று
முழங்கியது சங்கு! வெடிக்
கிடங்கில்வந்து விழுந்ததொரு
கிளர்ச்சிகளின் கங்கு!
பரங்கியனை எதிர்கொண்டு
பார்த்தோமே ஒரு கை! உலக
அரங்கில்மெல்ல நிகழ்ந்ததுநம்
அனைவரது வருகை!
ஒருகையும் ஆணென்றால்
மறுகையும் பெண்தான்! அந்த
இருகைக்கும் வணக்கத்தை
இயம்பவேண்டும் மண்தான்!
ஆட்சிசெய்ய வந்தவனும்
அரண்டுமிரண்டு போனான்! மிருகக்
காட்சியிலே என்னசெய்யும்
காலொடிந்த ஓணான்?
வந்தேறி சென்றானென
வாளுறைக்குள் துஞ்சா! தமிழ்
வந்தேறி ஆடிவிட்டால்
வதங்களுக்கும் அஞ்சா!
எருவுக்குள் தீப்பிடித்தால்
என்னயிங்கு மிஞ்சும்? நாளைக்
கருவுக்குள் தோன்றுவதும்
கத்தியுடன் துஞ்சும்!
இடிகளுக்குக் கேட்டிடுமோ
கடுகுடைக்கும் சத்தம்! தமிழ்க்
குடிகளுக்கு இன்னல்வரின்
கொதிக்குதடா ரத்தம்!
வெல்வதற்கு வேட்கைகொண்டு
வித்தைகளைக் காட்டு! அட
நல்லதற்கேக் காலமில்லை
நாணெடுத்துப் பூட்டு!
படைகளுக்குப் பஞ்சமில்லை; இது
ராஜராஜன் சேனை! இனித்
தடைகளுக்கு அச்சமில்லை,
தமிழ்மீது ஆணை!
சரித்திரங்கள் எரிகையிலே
சாவதற்கா அச்சம்? அட
நரித்திறத்தை முறியடிப்போம்!
நெருப்பிலென்ன மிச்சம்?
ஆம்!
அடையாளம் அழியுமெனில்
ஆழியையும் பொருது!
அட!யார்க்குத் தேவை நீள்
ஆயுளுக்கு விருது?
– பா. மருது பாண்டியன் – 10/08/2022 – 08.45AM