“வள்ளல் நபி கதையை
வரைகின்றேன் – காவியத்தின்
உள்ளே நீ நிறைந்து
ஒளியேற்ற மாட்டாயா?
தெரியாமல் நான் இந்த
தீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;
கருகாமல் சுடர் வீசக்
கருணையினைக் காட்டாயா?
எனக்காக இல்லையெனினும்
இறைதூதர் ஏந்தல் நபி
தனக்காக இங்கெனக்குத்
தமிழெடுத்து நீட்டாயா?”
– முகமது மேத்தா
“இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா”, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது. சிறு வயதில் தலையில் கட்டியோடு பிறந்த எனக்குக் கட்டி வற்ற வேண்டும் என்று நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்ட, எப்போதும் லுங்கி, தொப்பி அணிந்திருக்கும் எதிர்த்த வீட்டு முஸ்லிம் மாமாவின் முகம் மட்டும் கிணற்றில் விழுந்து நிழலாடும் நிலவாய் மனதை விட்டு நீங்காமல் இன்னும் இருக்கிறது.
இந்தியாவிலேயே அதிக கோவில்களைக் கொண்டிருந்தும் மதவாதக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காத மாநிலமாய் தமிழ்நாடு திகழ்வதன் காரணம் இன்று நேற்று தோன்றியதா என்ன?
அண்மையில் மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில், திருப்பூர் மங்கலத்தில் இந்து கோவில்களுக்குச் சீர் வைக்கும் இஸ்லாமியர்களும், தஞ்சையில் மூன்று குடும்பங்களுக்காக முகரம் கொண்டாடும் மொத்த சிற்றூரும், எல்லோரையும் சித்தப்பா பெரியப்பா என்று உறவு முறை சொல்லி அழைக்கும் மற்ற சிலரும் பார்க்கும் நம்மை நெகிழ்ச்சியுற வைத்தனர்.
‘இதெல்லாம் ஏன் செய்றீங்க?’ என்று கோபி கேட்டதற்கு, ‘எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியல, இன்னும் செஞ்சிட்டு இருக்கோம்’ என்று சொல்லும் பதில் அழகிலும் அழகு.
பிரிவினை என்னும் சொல்லின் பொருளையே உணராத சமூகமாய்த் தானே நம் மண் இத்தனை ஆண்டுகளாய் இருந்து வந்திருக்கிறது. இல்லையென்றால் எதிர்த்த வீட்டு மாமா எனக்காக நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டிருப்பாரா?
அதே நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிடும், ‘அல்லாக் கோயில்’ எனும் சொல்லைக் கேட்டதும், கடைசிப் படி தாண்டி இன்னொரு படியை எதிர்பார்த்து தரையில் இடறி நிற்கும் பாதங்களைப் போல, மனம் ஒரு கணம் தடுமாறி நிற்கிறது. எவ்வளவு அழகான சொல்? பள்ளி நாட்களில் “மாதா கோயில் எறங்கணுமா? மாதா கோயிலு?”, எனக் கத்தி கத்தி கூப்பிடும் சூரியன் மினி பஸ் நடத்துநரின் நினைவில் பதியாத முகம் ஒருமுறை மின்னல் கீற்றாய் எண்ண வானில் மின்னி மறைகிறது. நம் மண்ணில் திகழும் மத நல்லிணக்கத்திற்கு இந்த ஒற்றைச் சொல்லே உரைகல்லாய் நிற்கும் என்றால் மிகை என்று சொல்வீர்களா?
அரபிய மொழியில் இருக்கும் தன் பெயரை, தமிழில் ‘மொய்ம்பன்’ என்று மாற்றிக் கொண்ட அண்ணனை முதன்முதலில் சந்தித்த பொழுது வியப்பின் விளிம்பிற்கே சென்றேன். ‘ராமசாமி மரக்காயர்’, ‘குப்புசாமி மரக்காயர்’ என்றுத் தமிழ்ப் பெயர்கள் கொண்ட இசுலாமியர்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாமாகத் தான் இருப்போம் என்று நினைக்கிறேன்.
“எங்கப் புள்ளைங்களுக்கு எல்லாம் தமிழ் அவ்வளவு வராது. அதனாலயே பாதி புள்ளைங்கப் படிப்ப விட்டுடும்”, என்று ரேஷ்மா சாச்சி சொன்ன போது உமறுப்புலவர் தொடங்கி
‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழே எங்கள் மொழி’ என்று பாடிய காயிதே மில்லத்தாய் இருக்கட்டும்,
‘அகம் நீ! புறம் நீ! எம்
ஆருயிரும் நீ! எங்கள்
முகம் நீ! முகவரி நீ!
முடியாத புகழும் நீ!’ என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமானாய் இருக்கட்டும், நபிகளுக்கு ஒரு காவியமே பாடிய முகமது மேத்தாவாய் இருக்கட்டும், தமிழ் எத்தனை எத்தனை இசுலாமிய ஆளுமைகளை நமக்குக் கொடுத்திருக்கிறது என்று மனம் ஒரு கணம் பட்டியலிடத் தொடங்கியது.
கீழ் வீட்டில் குடி வந்த முதல் ஆண்டே ரம்ஜானுக்கு வகை வகையாய் காலை உணவு செய்து எடுத்து வந்த அசீமா அம்மாவிடம், ‘தீபாவளிக்குக் கூட நான் அத்தனை வகையாய் சாப்பிட்டதில்லை’ எனச் சொல்ல நினைத்ததை சொல்லியாவது இருக்கலாம்.
“இன்னைக்கும் ஜொரம் குறையலன்னா அல்லா கோயில்ல போயி மந்திரிச்சு தாயத்து ஒன்னக் கட்டு” என்று சொன்ன விக்கிப் பாட்டியும், மாலையில் மறக்காமல் சென்று வாங்கும் நோம்பு கஞ்சியை எங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வந்து கொடுக்கும் குலாம் கவுஸ் தாத்தாவும் இப்போது நடக்கும் வெறுப்பு அரசியலைப் பார்க்காமலேயே இறந்து போனார்கள் என்பதே சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.
பம்பாய்த் திரைப்படத்தில் நாராயணப் பிள்ளையாய் நடித்த நாசரும், பஷீராக நடித்த கிட்டியும் படம் முழுக்க என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா என வாதத்திலேயே ஈடுபட்ட வண்ணம் இருப்பார்கள். ஒரு காட்சியில் இஸ்லாமிய மதத்தவர்கள் கத்தியும் கையுமாக நாசரைச் சூழ்ந்து கொள்ள, அங்கே ஓடி வரும் கிட்டி ஏதோ சமாதானம் சொல்லி அவர்களை அனுப்பி வைப்பார்.
“நீ வரலனா கொன்னுருப்பாங்க”, என்று பதற்றத்துடன் பேசும் நாசர், “அவங்கக்கிட்ட என்ன சொன்ன பஷீர்”, என்று கேட்பார்.
“ஒன்னுமில்ல”, என்று தட்டிக்கழிப்பார் கிட்டி.
விடாமல், “சொல்லு பஷீர் என்ன சொன்ன”, என்று நாசர் கொஞ்சம் மன்றாடும் குரலில் கேட்க,
“உன்ன என் அண்ணன்னு சொன்னேன் யா”, என்பார் மிக இயல்பாக. பின்னால் ஓடும் ரகுமானின் இசை எவரையும் இரங்கச் செய்யும். இதில் ஒரு பெரும் வியப்பு, அந்தப் படத்தில் நாராயண பிள்ளையாய் நடித்த நாசர் ஒரு உண்மையில் ஒரு இசுலாமியன். பஷீராய் நடித்த கிருஷ்ணமூர்த்தி எனப்படும் கிட்டி உண்மையில் ஒரு இந்து. மணிரத்னம் இதைத் தெரிந்தே வைத்தாரா என்பது அறியா வினா தான்.
வடக்குக்கு இசுலாம் வன்முறை வழியாய்த் தான் அறிமுகம் ஆனது. அதனால் அவர்களைப் பொறுத்த வரை அது ஒரு அந்நிய மதம், இல்லை தங்கள் அடையாளங்களை அழித்த மதம். ஆனால் நமக்கு இசுலாம் வணிகம் வழியாய் தான் வந்தது. அதனால் தானோ என்னவோ அவர்களால் நம் மண்ணில் இசுலாமிய வெறுப்பை அவ்வளவு எளிதாய் நிகழ்த்த முடிவதில்லை.
நீயா நானாவில் கலந்து கொண்டவர்களைப் போல, பஷீர் சொன்னது போல எல்லோரும் எல்லோரையும் உறவு முறையோடு பார்க்கத் தொடங்கினால் போதும் பிரிவினை மறைந்து பிரியம் இந்தப் பிரபஞ்சத்தை ஆளத் தொடங்கிவிடும்.
அண்மையில் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை விட்டல் தாஸ் மஹராஜ் குழு பாடக் கேட்க நேர்ந்தது. அதில் ஓரிடத்தில் ‘அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்ற வரியை அவர்கள் ‘ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப் பாடியிருப்பது கூட கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அரபு மொழியில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லுக்கு ஆண்டவன் என்பதே பொருள். அவர்கள் அதை மாற்றிப் பாடியது அழகாய் இருந்தாலும் பொருள் என்னவோ ஒன்று தான். அந்தப் பாடலை ஒவ்வொரு முறைக் கேட்கும் பொழுதும், அதை எனக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்தது வைதீக வழியில் பிறந்து வளர்ந்த ராஜேஷ் மாஸ்டர் தான் என்பதும் நீக்கமறு உண்மையாய் நினைவில் நிற்கிறது. மதங்களைக் கடந்து மனிதர்களின் அன்புக்கு அப்பால் வேறொன்றும் இல்லை என அறியும் இடம் வெகு தொலைவில் இல்லை. அதுவரை ஆண்டவன் இருக்கிறார் என நம்புகிறவர்களிடம் நான் கேட்பது ஒன்று தான்.
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
‘அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்’