சனிக்கிழமை சந்தை!

இந்திய நேரப்படிக் கணக்கிட்டால் எழுந்ததே மிகத் தாமதமாகத்தான். இந்நேரம் அங்குச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நேரம், நண்பகலுக்கும் காலைக்குமான இடைப்பட்ட பொழுது. பதினொரு மணி. ஆனால் பெல்ஜியத்தில் அது வெறும் அதிகாலை தான். காலை ஆறரை மணி. பெல்ஜியத்தில் இருந்தாலும் இந்திய நேரத்திற்கே பழகி இருந்த மனது எழச் சொல்லிக் கட்டளை இட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் தான், இன்னும் சற்று நேரம் தூங்கலாம் ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் அக்காவுக்கு இந்நேரம் மதியம் ஒன்றரை ஆகி இருக்கும். பெல்ஜியத்திற்கும் அதற்கும் ஏழு மணி நேர இடைவேளை. மதிய உணவு முடித்து உறங்கச் சென்றுவிட்டால் மீண்டும் மாலை தான் பேசலாம் என அரக்கப் பறக்க எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பால் காய்ச்ச ஆயத்தம் ஆகிக் கொண்டே, அம்மாவுக்கு அழைப்பு விடுத்தேன், அம்மாவும் அக்காவோடு சிங்கப்பூரில் சில நாட்கள் வசிக்கச் சென்றிருப்பதால். பாத்திரம் கழுவும் நேரம், பால் காய்ச்சும் நேரம் தான் என் அழைப்புகளுக்கான நேரம். தேநீர் தயாராகி விடும் அல்லது அழுக்குப் பாத்திரங்கள் கழியும், அதோடு வீட்டிற்குப் பேச வேண்டிய வேலையும் முடிந்துவிடும், ஒரே வேளை இரண்டு வேலை. இந்தியாவைப் போல் பால்கார அம்மா அதிகாலையே வந்து மதில் மேல் வைத்துவிட்டுச் செல்லும் பசும்பாலை எல்லாம் பெல்ஜியத்தில் எப்படி எதிர்பார்ப்பது? கேன் ஒன்றைப் பிரித்து தேநீருக்காக பாலைக் கொதிக்க வைத்தேன். தமிழர்கள் தேநீருக்குத் தான் காலைக் கடன் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும். அதவன்றித் தொடங்கும் நாள் ஏனோ அவ்வளவு இனிதாய் இருப்பதே இல்லை. தேநீர் தனிமையைப் போக்க வல்லது என சாம்ராஜ் சொன்னதில் துளியும் மிகை இல்லை. பாப்பாக்கள் இருவரும் பேருக்குப் பேசிவிட்டு விளையாடுவதில் தான் மும்மரமாய் இருந்தனர். அம்மாவிடம் சிறிது உரையாடும் பொழுது இந்தியாவில் தனியாய் இருக்கும் அப்பாவும் அழைக்க, தேநீர் தயார் ஆவதற்குள் இருவருடனும் ஒரே நேரத்தில் பேசி முடித்து விடலாம். சீட்டுப் பணம் அனுப்பச் சொன்ன அப்பாவிடம்,

“ஒன்னாந்தேதி தான. என்ன இப்பவே கேக்குற”, என்று பதில் கேள்வி கேட்க

“ஒன்னாந்தேதி தான். அனுப்பு அனுப்பு”, என்று மழுப்பினார். அப்பா வைத்த அடுத்த கணம், ‘இப்பவே அனுப்பாத. தம்பிக்கு எதாச்சும் செய்யும்’ என்று எச்சரித்த அம்மாவிடம் சரி சரி என்று தலையாட்டிவிட்டு, தேநீருடன் நாஞ்சில் நாடனின் மிதவை வாசிப்புத் தொடங்க, ஓர் அத்தியாயம் தாண்டுவதற்குள் சந்தைக்குத் தாமதம் ஆனதெனக் குளித்துப் புறப்பட்டேன். பசி வயிற்றைக் கிள்ளியது. அவக்காடோ(Avocado) ஒன்றை எடுத்து ஜீஸ் அடித்தால் இரண்டு கோப்பை வந்தது. அறையில் தங்கி உறங்கிக் கொண்டிருக்கும் விக்னேஷுக்கு வைக்காமல் இரண்டு கோப்பையையும் குடித்த பின்பே பசி கொஞ்சம் தணிந்தது போல் இருந்தது. ஏனோ ஒருவாறு தனிமைக்குள் செல்வது போல் தோன்ற மீண்டும் அக்காவுக்கு அழைத்துப் பேசிக் கொண்டே சந்தைக்குக் கிளம்பினேன். செல்லும் வழியெல்லாம் இன்ஸ்டாகிராம் துணை வந்தது. வழித் துணை இல்லாத சமயம், விழித் துணை தானே உடன் வருவது.

குளிரும் என நினைத்து உடல் முழுவதையும் மறைக்க ஜெர்க்கினுடன் கிளம்ப, வெளியே வந்த சில நிமிடங்களில் புழுக்கம் உள்ளுக்குள் இறுக்கியது. கட்டிடங்களையும் தாண்டி அங்கங்கே வெயிலின் நிழல். ஜெர்க்கினைக் கழற்றி வெறும் சட்டையோடு நடப்பதே கொஞ்சம் இதமாய் இருந்தது. வழமைபோல் சந்தை மக்களால் நிரம்பி வழிந்தது. நான் வசிக்கும் மெக்கல்லன் நகரத்தின் மையத்தில் நடக்கும் இந்த வாராந்திரச் சந்தையில், சமைத்த சமைக்காமல் சமைக்க ஆயத்தமாய் இருக்கும் பொருட்கள், காய், பழம், கறி, மீன், முட்டை, உடைகள், உபகரணங்கள் என எல்லாப் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். அனைத்தும் வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கும் தள்ளு வண்டிக் கடைகள். பன்னிரண்டு மணிக்கு ஒவ்வொரு வண்டியாய் நடையைக் கட்டும். மொத்த நகரும் நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் நகரின் மையத்தில் குழுமியிருக்கும். தெரிந்த தெரியாத இந்திய முகங்களைக் காணும் இடம், இந்தியர்களை மட்டுமல்ல எல்லா நாட்டினரையும். படிப்பதற்கு ஐபாட் ஒன்றை வாங்கலாம் எனப் பழைய பொருட்கள் விற்கும் ஆப்கானியன் கடைக்குள் நுழைந்தேன். அவன் காட்டியது அனைத்தும் முந்நூறு நானூறு யூரோவிலேயே இருக்க, நூறு இருநூறு ரூபாய்க்கு எதாவது தேருமா என்று தேடினால் ஒன்றும் அகப்படவில்லை. வெளியே மழைத் தன் தூறலைத் தொடங்கி இருந்தது. சில நொடிகளில், சற்று முன் அடித்த வெயிலின் தடையமே இல்லாமல் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. இது தான் பெல்ஜியம். எப்போது என்ன வரும் என்று எவராலும் சொல்ல முடியாத ஓர் அதிசய நாடு. மழையின் தாக்கம் உள்ளே கடைக்குள் புகுந்து உடலை நெருக்க, குளிர் தன் வேலையைக் காட்டியது. இந்தியன் என்று அறிந்து கொண்ட கணம் என்னைக் கவர்வதாய் நினைத்து அவன் இடை இடையே பேசிய இந்தி வேறு இன்னும் எரிச்சலூட்டியது. என்ன செய்ய, ‘இந்தி தெரியாது போடா’ அவனுக்குத் தெரியாதே. நூறு, இருநூறு ரூபாய்க்கானது அடுத்த வாரம் வருமென்று சொன்னவனை நம்பி, வெளியே வருவதற்குள் மழை நின்று மீண்டும் வெயில். சமைத்த கோழிக்கறி சிலவற்றை எனக்கும் விக்கிக்கும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். போகும் வழியில் இருக்கும் பொறித்த மீன் கடை, வாசனையை அனுப்பி வாவென்று அழைக்க, ‘ஒரு நாள் மட்டும்’ என்று அங்குச் சென்று, தானாய் வில்லை(டோக்கன்) கொடுக்கும் இயந்திரத்தின் முன் நிற்கும் வரிசையில் சென்று காத்திருந்தேன். ஒரு பொத்தானைத் தட்டினால் வில்லை வரும். வாங்கிக் கொண்டு, கடைக்காரர்கள் நம்மை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். தெரியாமல் இரண்டு முறைத் தட்ட, இயந்திரம் வெளியே துப்பிய இரண்டு வில்லைகளில் ஒன்றைப் பின்னால் இருக்கும் வெள்ளைக்கார அம்மாவிடம் கொடுத்தேன். நன்றியையும் புன்னகையையும் மாற்றி மாற்றிக் கொடுத்த அவரிடம், வில்லை பெற்றுக் கொடுத்ததற்குக் கைம்மாறாக,

“அவர்கள் என் எண்ணை அழைக்கும் போது எனக்குத் தெரிவிக்க முடியுமா. அவர்கள் எண்ணை டச்சு மொழியில் சொல்வார்கள். எனக்கு டச்சு மொழித் தெரியாது”, என்றேன்.

“ஓஹ் கண்டிப்பாக”, என்று மீண்டும் புன்னகைத்தார். அவர் கையோடு பிடித்திருந்த அவருடைய பெண் குழந்தை அங்கும் இங்கும் அவரை இழுக்க, அவர் என் கோரிக்கையை மறந்து விடாதிருக்க, அவரை விட்டு நீங்கி நிற்காமல் கண் பார்வை படும்படி அருகிலேயே நின்றேன். “இப்போது நாற்பத்து நான்கு”, என்றார். என் எண்ணைத் தானே மொழிபெயர்க்கச் சொன்னேன், எல்லா எண்ணையுமா சொல்லச் சொன்னேன் என மனதிற்குள் நினைத்தபடி, நன்றி என்றேன். நாற்பத்து ஐந்து, நாற்பத்து ஆறு, நாற்பத்து ஏழு, இறுதியாக நாற்பத்து எட்டு என எல்லாவற்றுக்கும் நன்றி நன்றி எனச் சொல்லிமாளவில்லை. எனக்கு முன் எண் கொண்ட பெண்மணியின் ‘நாற்பத்து ஏழு’ என்று அழைத்ததும் ‘பிங்கோ’ என்று உரக்கச் சொல்ல, மொத்தக் கடையும் சிரிப்பில் ஆழ்ந்தது. இங்கிருக்கும் இளையவர் முதல் முதியவர் வரை பெரும்பாலானோர் இப்படி அவ்வப்போது ஏதாவது சிரிப்பூட்டும் செயல்களை மிக இயல்பாகச் செய்துவிடுகின்றனர். அவர் வயதை ஒத்திருக்கும் நம் ஊர் பெருசுகளிடம் இது போன்ற நகைச்சுவைகளை எதிர்பார்க்க முடியுமா என்ன? பொறித்த மீன்களை வாங்கிக் கொண்டு இறுதியாக ஒரு நன்றி நவிலலோடு, கையில் இருந்த குழந்தைக்குக் கையசைத்துப் புறப்பட்டேன். வரும் வழியெல்லாம் பாடலின் துணை. வீட்டிற்கு வந்ததும் வெளியே சென்றதை நினைவூட்டும் வண்ணம் வாசலில் நின்றபடி நான்கைந்துப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க, என்னைக் காத்திருப்பவனாய் நினைத்து, உள்ளே சென்று கொண்டிருந்த ஒருவர் வேகமாக வந்து எனக்கு வெளிக்கதவைத் தாண்டி இருக்கும் உள் கதவைத் திறந்து விட்ட வண்ணம் காத்திருந்தார். நமக்குப் பின்னால் வருபவர்களுக்குக் கதவினைத் திறந்து அவர்கள் வரும்வரை காத்திருப்பது ஒரு மாண்பாக இங்கே கருதப்படுகிறது. இதே பழக்கத்தில் இந்தியா சென்றிருந்த போது, உணவகம் ஒன்றில் எனக்குப் பின்னால் வந்தவருக்குக் கதவினைத் திறந்துவிட, அவர் என்னை உணவகத்தில் வேலை செய்பவர் போல் ஒரு பார்வைப் பார்த்துக் கடந்தார்.

கதவு திறந்து விட்டவருக்கு நன்றி கூறி உள்ளே நுழைந்து இருவரும் மின்தூக்கிக்காகக் காத்திருந்தோம்.

“சாவியை மறந்து வைத்துவிட்டு வந்தாயா?”, என்றார் அவர். ஐம்பது அறுபது வயதிருக்கும். ஆனால் உடல், இருபது வயது பையனை ஒத்திருந்தது.

“இல்லை, வெளியே இருக்கும் கண்ணாடி புகைப்படம் எடுக்க அழகாக இருக்கும். அதனால் தான், அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்”, என்று எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினேன்.

“எவ்வளவு அழகான புகைப்படங்கள். உன்னையும் உன்னோடு புகைப்படத்தில் இருக்கும் பூவையும் கொண்ட புகைப்படம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது”, என்றார். நான் நன்றியைப் புன்னகை வழியாய்ச் சொல்ல, “தினமும் எடுப்பாயா?”, என்றார். மின்தூக்கி நகராமலேயே இருப்பதைக் கவனிக்காமலேயே இருவரும் பேசிக்கொண்டிருக்க, சில நிமிடங்களுக்குப் பின்னே அதைக் கவனித்தவர், சரியாக மூடப்படாத கதவினை ஒருமுறைத் திறந்து மீண்டும் மூடினார்.

“தினமும் இல்லை. அவ்வப்போது. நான் இந்த நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்”, என்றதும் சத்தமாகச் சிரித்தார்.

“இங்கே எத்தனை ஆண்டுகளாய் இருக்கிறாய்” பதிலுரைக்காமல் மூன்று என்று விரல்களால் நான் சமிக்ஞை செய்ய, “என்னென்ன நகரங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறாய்?”, என்றார்.

“ஆண்ட்வார்ப்(Antwerp), பிரஸல்ஸ்(Brussels), கெண்ட்(Ghent), லூவன்(Leuven)”, என்று பட்டியலிடும் போதே, என்னுடைய ஏழாவது மாடி வந்தடைந்தது. அவர் பன்னிரண்டாம் மாடி எண்ணை அழுத்தி இருந்தார். சற்று நேரம் கதவைப் பிடித்தபடி உரையாடியவன், பேசுவதைத் தொடர்வதற்காய் கதவை மூடி பன்னிரண்டாம் மாடி வரை அவரோடே சென்றேன்.

“நீ அர்டீன்(Ardennes) நகரத்திற்குச் செல்ல வேண்டும்”, என்றார். புரிந்தது போல் நான் தலையசைக்க, எனக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், லிஃப்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில், “நாம் இங்கிருக்கிறோம், நமக்குக் கீழே பிரஸல்ஸ் இங்கே இருக்கிறது. அதற்கும் கீழே அர்டீன் இருக்கிறது”, என்று விரலால் வரைந்து காட்டினார். “அது ஒரு மலைப்பகுதி. இயற்கைக் காட்சிகள் காண்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும். பெல்ஜியத்தில் கடல், சம நிலம், மலை என அனைத்தும் இருக்கிறது” என்றவர் முடிப்பதற்குள் பன்னிரண்டாம் வர, “இன்னும் நினைவுகளையும் ஆதாரங்களையும் சேகரி”, என்று வெளியேறியவரிடம்,

“நீங்களும் உறுதியாக இந்தியா வரவேண்டும்”, என்று நட்பின் குறியீடாய் கை முட்டிகளை நீட்டினேன்.

“இந்தியா பெரிய நாடு. பார்க்க வேண்டிய நாடு. ஆனால் எனக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தான் தெரியவில்லை. உறுதியாக வருகிறேன்” என்று தன் கை முட்டிகளால் என் கை முட்டிகளைத் தட்டி விட்டுக் கதவடைத்தார்.

வீட்டிற்கு வந்ததும் அவர் சொன்ன நகரத்தைக் கூகுளில் தேடினேன். அர்டீன் மலைகளாலும் காடுகளாலும் ஆன நகரம். பெல்ஜியம் பிரான்ஸ் என இரு தேசங்களாலும் பகிரப்பட்ட நகரம். அந்நகரில் உள்ள மலைத் தொடர்ச்சி, லக்சம்பர்க், ஜெர்மனியிலும் நீண்டிருப்பதெனச் சில தகவல்களைத் துப்பியது கூகுள். அப்படியே தேடலிலேயே சில கணம் ஆழ்ந்திருக்க, நேரம் போனதே தெரியவில்லை.

எத்தனை விதமான மனிதர்கள். நிகழ்ந்ததனைத்தையும் நினைத்த பொழுது மனமெங்கும் ஒருவிதமான அன்பின் கதகதப்பு. அதே உணர்வோடு சாப்பிட உட்கார, கதகதப்பாவது கருமமாவது, கோழிக் கறியும் மீனும் ஆறி ஊறிப் போயிருந்தது.

28, மார்ச், 2026

Shopping Cart
Scroll to Top