சநாதனம்!

 

“எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்”

– ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ்

‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும்.

அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன?

நம் ஊரில் அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் சக இந்துக்களிடம் கேட்டால், ‘தெரியாது’ என்பதே அவர்கள் சொல்லும் பதிலாய் இருக்கும். மூச்சுக்கு முந்நூறு முறை அதைப் பயன்படுத்தும் வடக்கிடம் கேட்டால் கூட, ‘அழிக்க முடியாத ஒன்று’, ‘நிலைத்திருப்பது’, ‘வாழ்வியல் முறை’ என்றெல்லாம் ஓரிரு சொற்களில் அருஞ்சொற்பொருள் சொல்வார்களேயன்றி, அதை விளக்க முற்படமாட்டார்கள். காரணம் அவர்களுக்கும் அது அவ்வாறே சொல்லப்பட்டிருக்கும். எப்படி வேதம் ஐயாயிரம் ஆண்டுகள் செவி வழி சொல்லப்பட்டது என்று ஆதாரமின்றிப் பரப்புகிறார்களோ அப்படித்தான் இதுவும்.

‘சனாதன தர்மம்’ என்னும் பதமே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் உருவானது என்று கூறுகிறார் இந்து மத ஆய்வாளர் பேராசிரியர் ஆட்ரே ட்ரஷ்கே(Audrey Truschke). வேதங்களிலோ அல்லது உபநிடதங்களிலோ சனாதனம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், வேத காலங்களில் அதற்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயல்பட்ட எந்தத் தத்துவப் பிரிவிலும் கூட அதைப்பற்றிக் கூறப்படவில்லை என்றும் விளக்குகிறார். ஆக, அந்தச் சொல் அண்மையிலேயே புழக்கத்தில் உள்ளது என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு மொழிகளால், இனங்களால், நம்பிக்கை முறைகளால் நிறைந்தது. ஒவ்வொரு இனக் குழுவுக்கும், ஒவ்வொரு மொழிகளுக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறை, வெவ்வேறு குறுந்தெய்வங்கள். வைணவம், சிவம், சக்தி மார்க்கம், சூரிய மார்க்கம் என்று எத்தனையோ பிரிவுகள் இங்கே தனித் தனியாய் இயங்க, எல்லோருக்கும் ஓரிரு பொதுப் பழக்கம் மட்டுமே இருந்தது. இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், ஆபிரஹாமிய மதங்கள், புத்த மதம், ஜைன மதம் அன்றி இதர எல்லாப் பிரிவுகளையும்(சிறு தெய்வ வழிபாட்டினர் உட்பட) ஒரு கட்டத்திற்குள் அடைத்து அதற்கு இந்து மதம் என்று பெயரிட்டனர். இந்நாளில் கிறுத்துவத்திற்கு மதம் மாறும் இந்துக்கள் சிலர் எப்படி இயேசுவுக்குக் காவடித் தூக்குகிறார்களோ, அப்படித் தான் இரு வேறு இனங்களிடம் பொதுப்பழக்கங்கள் பரவத் தொடங்கியது. நம் கொற்றவை காளி ஆனாள். நம் முருகன் ஸ்கந்தன், சுப்ரமணியன், ஸ்வாமிநாதன் ஆனான். மெல்ல மெல்ல எல்லாப் பிரிவுகளும் இந்து மதம் என்னும் ஒற்றைக் குடைக் கீழ் உட்காரத் தொடங்கியது. நாமும் வைணவத்தின் வர்ணங்களுக்குள் வாழப் பழகிக் கொண்டோம். அண்மையில் யூட்யூபில் பேசிய ரங்கராஜ் பாண்டே கூட இந்து மதம் தான் சனாதனம், சனாதனம் தான் இந்து மதம் என்று குறிப்பிட்டார். சனாதனம் என்னும் சொல் எல்லா இந்துக்களுக்கும் ஏற்புடையதானதா? சனாதனம் இந்து மதத்தில் ஒரு பங்கு. இந்து மதம் முழுவதும் சனாதனத்தால் ஆனதன்று. வைணவர்களால் மட்டுமே மிகுதியாய்ப் பயன்படுத்தப்பட்டு இன்று எல்லோருக்குமான சொல்லாகி நிற்கிறது.

சனாதனத்திற்கு ஆதரவாய்க் களமிறங்கி, உதயநிதிக்கு எதிராகப் போராடிய கூட்டம் எல்லாம், ‘வேரூன்றி இருக்கும் ஒரு பண்பாட்டைப் பற்றி எப்படி அவதூறு பேசலாம்’ என முழங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். வேரூன்றி இருக்கும் பண்பாடு என்று உலகில் எதுவுமே இல்லை. பண்பாடு என்பதே காலத்திற்கு ஏற்றாற்போல் மாறும் ஒன்று தான். ஆதியில் சரியென்று சொல்லி, பின் தவறென்று ஒப்புக் கொண்ட கதைகளின் வரலாறுகளைச் சொன்னால் வாய் வலிக்கும். பூமியே சூரியக் குடும்பத்தின் மையம் என்ற கிறுத்துவ மதக் கூற்றை எதிர்த்து, ‘சூரியனே மையம்’ என்று முழங்கி ரோம் நகர வீதியில் தீக்கு இரையானார் ஜியர்டீனோ புருனோ(Giordano Bruno). அறிவியலின் வளர்ச்சியால் அவர் சொன்னது சரியென்று மெய்ப்பிக்கப்பட, செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த கிறுத்துவ மதகுருமார்கள் அதே ரோம் நகர மையத்தில் புருனோவுக்கு சிலை ஒன்றை எழுப்பினார்கள்.

மதங்களைப் போல அறிவியலிலும் இப்படித் தவறான கருத்துகள் சொல்லப்பட்டுப் பின் சரியான கூற்றைக் கண்டுபிடிப்பதுண்டு. ஆனால் இரண்டுக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான். அறிவியல் சான்றுகளால் ஆனது(Science is based on facts). தான் கண்டுபிடித்த ஒன்றையே பின்னாளில் தவறென்று நிறுவும் அறிவியல், அந்தத் தவறின் மீது ஏறித் தான், சரி என்ற நிலையை அடைந்திருக்கும். இன்றைய சரி, நாளை தவறாகலாம். ஆனால் இரண்டிற்குமான இடைவெளி மிகவும் குறைவு. சரியை அடைய உதவியதே இந்தத் தவறு தான். புருனோ சொன்ன கருத்தின் மீது ஏறி நின்றதனால் தான் விசையூர்ப்பு நியூட்டனுக்கு விளங்கி இருக்கும். இப்படி ஒவ்வொரு படியாய் ஏற்றி விடும் அறிவியல் ஒரு படிநிலை முறை. ஆனால், மதங்கள் அப்படி அல்ல, நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட கட்டிடம்(Religion is based on faith).

இந்து மதத்தில் கூட, சதி, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, நரபலி, தீண்டாமை, கைம்பெண் மறுமணம் என எத்தனை எத்தனை முறைகள் காலத்திற்கு ஒவ்வாததெனக் கைவிடப்பட்டுள்ளன? வேரூன்றி இருக்கும் பண்பாடு இவையனைத்தையும் விடாமல் கடைப்பிடித்திருக்கல்லவா வேண்டும்? காலத்திற்கு ஏற்றார்போல் மாறாத மொழியோ மதமோ பண்பாடோ கரை காணாது.

சரி தலைப்புக்கு வருவோம். சனாதனம் என்றால் வேரூன்றி இருக்கும் பண்பாடு அல்ல, பிறகென்ன? சுற்றி வளைத்து அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்று தான். அடிமைத்தனத்தால் அடித்தளம் இடப்பட்ட ‘வர்ணாசிரமம்’. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை வகுத்துத் தொழில் முறைக்குள் தள்ளும் ஒரு முறையை எப்படி இக்காலத்திலும் ஏற்க முடியும்?

தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என ஒரு கட்டமைப்பை உருவாக்கி முன்பொரு காலத்தில் ஏய்த்துக் கொண்டிருந்த கூட்டம், இக்காலத்திலும் அதை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. முடியாது என்று முரண்படுவோர் மேல் அவதூறுச் சேற்றை அள்ளி இரைக்கிறது. பிறப்பின் அடிப்படையில் வரும் பிரிவினையை, பெருமை என்று வடக்கு நினைக்கலாம். ஆனால் அதை எதிர்ப்பதில் தெற்கு மிகவும் தெளிவாய் இருக்கிறது. சாதிய முறையை, ஸ்மிருதியை, ‘சனாதன தர்மம்’ ‘இந்து மதம்’ என்று வெவ்வேறு பெயர்களில் விதைக்க முற்பட்டாலும் மூலம் என்னவோ பிரிவினையும், தகுதி என்பது திறமையால் அல்ல பிறப்பால் தான் அளக்கப்படுகிறது என்பதும் தான். அவர்களுக்கெல்லாம் பதிலாய் ஐயனின் குறளைத் தான் சொல்ல வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (972)

பிறப்பு எல்லோர்க்கும் ஒன்று தான். செய்யும் தொழிலில் உள்ள வேறுபாடுகளாலும் சிறப்பு ஒவ்வாது. அவரவர் செய்யும் தொழிலில் காட்டுகிற ‘திறமையில்’ மட்டுமே வேறுபாடு காண முடியும் என்கிறது குறள். ஏனைய மதங்களில் சாதிகள் இல்லையா என்றால், அங்கும் பிரிவினைகள் இருக்கிறது. ஆனால் பிறமதங்களில் எந்த மதநூலும் இப்படி ஒருவர் மேலே ஒருவர் கீழே என்று உரைப்பதில்லை. ஆண்டவன் பார்வையில் அனைவரும் சமம். பிரிவினைகள் எல்லாம் மனிதன் ஏற்படுத்தியது. அதிலும் அவை வெவ்வேறு முறைகளைப் பின்பற்றும் பிரிவுகள்(இந்து மதத்தில் உள்ள சைவ வைணவ அமைப்புகளைப் போல). ஆனால் வேதம் சொல்லும் வர்ணாசிரமமோ ஒருவர் மேலே, ஒருவர் கீழே எனச் சொல்லும் படிநிலை. அது தான் இங்கே உடைக்கப்பட வேண்டும். இந்து என்று சொல்வதில் இங்கே எவருக்கும் எந்த வருத்தமோ வெறுப்போ இல்லை, சிக்கல் எல்லாம் மேல் கீழ் என மக்களைப் பிரிக்கும் சனாதனத்தில் தான். பெரும்பாலும் இப்பதத்தையே பயன்படுத்துவது வைணவ முறையைப் பின்பற்றும் சிலர் தான். சைவர்களிடம் இதைக் காண்பது அரிதிலும் அரிது.

விருப்பம் இருப்பவர்கள் இதைப் பின் பற்றற்றும் என விலக்களித்தால் எந்தக் குழப்பமும் இல்லை. நாம் அனைவரும் ஒரே மதம், நீயும் என் முறையைப் பின் பற்று எனக் கட்டளையிடும் போது தான் கலவரங்கள் வெடிக்கிறது. ‘ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்’ என உரைத்து, ஊடுருவி நம்மோடு கலந்த ஒரு பிரிவு, படையலுக்காக நாம் பலியிடும் முறையை முதலில் கேள்வி கேட்டது. நாட்களில் சைவத்தை வலியுறுத்தி அசைவத்தை மெல்ல அன்னியம் ஆக்கியது. முதலில் வழிபட வேண்டிய முதன்மைக் கடவுள் என்று தங்கள் கடவுளைக் கைகாட்டி நம் நாட்டார் தெய்வங்களைச் சிறு தெய்வம் என்றது. கடவுளர்கள் சமஸ்கிருத மந்திரங்களால் தான் வலிமை பெறுவார் என்று கட்டுக்கதைகளால் நம் கண்களைக் கட்டியது. நாகரிகப் படுத்துகிறோம் என்ற பெயரில் வழிபாட்டு முறைக்குள் வரைமுறைகளை வகுத்தது. புனிதம் என்ற சொல்லைப் புழக்கத்தில் புகுத்தியது. அவர்கள் நம்பிக்கையில் கடவுளர்களைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் நம் வழக்கம் அப்படியா என்ன? இதற்குப் பதிலாய் கண்மணி ராசாவின் கவிதை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும்.

‘செங்கமலத்திற்கு
எல்லாமே
மாரியாத்தாதான்.

அஞ்சாயிரம் அசலுக்கு
ஆறு வருசமா
மாசா மாசம் அஞ்சு வட்டி
கட்டுற கதைய
பேச்சியப்பன் சொல்லக்கேட்டவ
“கலங்காதடா
அவன மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.

டி.வி.யில
வந்த செய்தியைப் பாத்துட்டு
“நாசமா போறவனுக
சனங்க
குடிக்கிற தண்ணியிலயா
பீயக் கலப்பானுக…
அவனுகள மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.

வீட்ட எழுதி வாங்கிட்டு
பெத்த அப்பன
வெளிய தள்ளுனவன
காறித் துப்பி
“பேதியில போவ
உன்ன
மாரியாத்தா கேப்பா.”
என்றாள்.

காசு குடுத்தாதேன்
கையெழுத்து போடும்
விஏஓ வ
“கட்டையில போவ
மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.

ஒரு
மத்தியான வெயில்ல
மாரியாத்தா பீடத்துல
தாயக்கட்டம் போட்டவளிடம்
“ஏந்தா
எதுக்கெடுத்தாலும்
மாரியாத்தா கேப்பாங்கிறியே..
அவ கேட்கலன்னா…?
என்றவனிடம்
சடாரென
உக்கிரமாகி…

“கேட்காம
போவட்டும்
மானங்கெட்ட
மாரியாத்தாவ
நான் கேட்பேன்..”
என்றாள்….
ஒரு காயை வெட்டிய படி’

இப்படித் துக்கத்தில் கேள்வி கேட்கும் துணிவோ, உளைச்சலில் எதிர்க்கும் உரிமையோ, வசை பாடும் வழக்கமோ சத்தியமாய் சனாதனத்தில் சாத்தியமே இல்லை. அங்கே, இட்டக் கட்டளைக்கு இசைவு மட்டும் பதில்.

‘இவையெல்லாம் சனாதனம் இல்லை, சனாதனம் என்றால் இன்னது தான்’ என்று போதிய விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் நமக்கும் இடரொன்றும் இல்லை. ஆனால் இன்னும் இந்து மதமே சனாதனம் என இட்டுக்கட்டி இதிகாசத்தின் பின் இழுக்கும் கதையே இங்குத் தொடருமாயின், எள்ளளவும் அதை ஏற்க மறுப்போம். ஏனெனில் நாம் சனாதானம் விரும்பும் இந்துத்துவா அல்ல, சமாதான விரும்பும் இந்துக்கள்.

தமிழ்ச் சமூகம் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தும் கடந்த பொதுநெறியை நம்பியது. அதைத் தான் வள்ளலார் ‘சன்மார்க்கம்’ என்றார். சன்மார்க்கம் சனாதனத்தின் எதிர்முனை. வாழ்வியல் முறை என்று ஒன்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் வேண்டுமானால் சனாதனத்தின் கைப்பிடித்து சந்தோசமாய் நடக்கட்டும். சன்மார்க்கத்தைப் பின்பற்றி ஒரு வாழ்வியல் முறைக்குள் வாழும் நமக்கெல்லாம் சனாதனம் தேவையே இல்லை. ஆம்! தேவ பாசைக்குச் செவி சாய்க்கும் தெய்வங்கள் எல்லாம் வடக்கிலேயே வாசம் செய்யட்டும், நமக்குக் கூப்பிட்டால் குரல் கொடுக்கும் முனியனும், ஐயனாரும், சுடலை மாடனும் கருப்பனும் போதும்.

Shopping Cart
Scroll to Top