டார்ட்மண்ட்

இந்த வாரம் சனிக்கிழமை டார்ட்மண்ட் செல்லலாமா என அறையில் தங்கி இருக்கும் விக்னேஷ் கேட்ட பொழுது அரை மனதுடன் தான் சம்மதித்தேன். ஊர் சுற்றிப் பார்க்கப்போவதில் உள்ளப் பெருந்தொல்லையே அதிகாலை எழுவது தான். முந்தைய நாள் எவ்வளவு முயன்றும் படுக்க மணி பன்னிரண்டு ஆனது. காலை நான்கு மணிக்கே பாலாஜி அழைத்து எழுப்பிவிட, குளித்துக் கிளம்பும் போது மணி ஐந்தரை. செல்லும் வழியில் நிறுத்தக்குறியீட்டுக்காகத் தேநீர் தயாரித்து ப்ளாஸ்கில்(flask) ஊற்றி எடுத்துக் கொண்டோம். ராம் அண்ணாவை ஏற்றிக் கொண்டு பாலாஜி எங்கள் வீட்டிற்கு வருவதற்குள் வானம் வெளுத்திருந்தது. ஆறு மணி வெளிச்சம் எல்லாம் கோடை தொடக்கத்தின் அறிகுறி. நான், விக்னேஷ், பாலாஜி, ராம் அண்ணா, நால்வரையும் ஏற்றிக் கொண்டு கார் ஜெர்மனியை நோக்கி விரைந்தது. முந்தைய நாள் இரவுத் தூக்கமின்மை, அதிகாலை வயிற்றுப் பிரட்டல் காரணமாக நானும் விக்னேஷும் ஏறிய அடுத்த நொடியே உறங்கிப் போக, ஜெர்மனி வந்து தான் எழுந்தோம். இடையில் இருநூறு வேகம் தொட்டதெல்லாம் பாலாஜி சொல்லி செவி வழி கேட்டுக் கொண்டாலும், ஒரு முறையாவது அதை நேரில் காண வேண்டும் என்று ஏக்கம் உள்ளுக்குள் எழுந்தது. ஜெர்மனியில் முந்நூறு கிலோமீட்டர் சாலைகள் இப்படி வேகக்கட்டுப்பாடின்றி இயங்கும் என விக்னேஷ் சொன்னது கூடுதல் தகவல்.

நாங்கள் வந்து வாசலில் வண்டியை நிறுத்திய போது மணி எட்டு ஐம்பது. முந்தைய நாள் கோவில் நிர்வாகத்தை அழைத்துக் கேட்ட பொழுது ஒன்பது மணிக்குக் கோவில் திறக்கப்படும் என்று கூறியிருந்தார். அதைக் கோவில் என்று சொல்வதற்கே மனம் வரவில்லை. தகரத்தால் ஆன ஆள் நடமாட்டமில்லாத பழைய ஆலையைப் போலத்தான் காட்சி அளித்தது. ஆலையை ஆலயமாக்க அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு சிகப்பு வெள்ளை வண்ணப்பூச்சு மட்டும் தான். முன்னால் எழுப்பப்பட்டிருந்த ஒரு சிறு கட்டிடத்தைக் கழித்தால் அதை ஆலயம் என்று நம்புவது மிகவும் கடினம். நேற்று அழைத்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள, இன்னும் சில நிமிடங்களில் வருவதாய் சொன்னது அந்த இலங்கைக் குரல். அயல்நாடுகளில் இருக்கும் பல கோவில்கள் இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது தான் எனச் சென்ற முறை சென்றிருந்த ஹாம்(Ham) கோவில் நிர்வாகம் கூறியதை எண்ணிக் கொண்டிருக்க, ஒன்பது பத்துக்கு உள்ளே நுழைந்த காரிலிருந்து ஓர் ஐம்பது வயதுக்காரர் கீழிறங்கி, ‘ஹலோ’ என்று என்னை நோக்கி வந்தார்.

நான், ‘வணக்கம்’ என்று தமிழில் தொடங்க,

“வணக்கம் , வணக்கம்”, என்று தமிழுக்கு மாறினார். அருகி வந்தவரிடம் நான் பெயரைச் சொல்லி அறிமுகம் ஆனதும், அவரும் ‘சபாரத்தினம்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “எங்கிருந்து வார்றீங்க, பெல்ஜியமா?” என்றார்.

“ஆமா, நீங்க?”

“நான் இங்க தான். சொந்த ஊர் இலங்கை”, என்று மற்றவர்களோடும் கை குலுக்கி அறிமுகமாகி, உள்ளே சென்று கோவிலைத் திறந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் இன்னொருவரும் வந்து கருவறையைச் சுத்தம் செய்யத் தொடங்க, அவர் தான் ஐயராக இருக்கக் கூடும். வந்தவர் உடைமாற்றி சபாரத்தினத்திடம் பேசிக் கொண்டிருக்க, நாங்கள் அங்கிருந்த அட்டவணையை நோட்டமிட்டோம். அதில் திருமணம் நாள் என்று எழுதியிருப்பதைக் குறிப்பிட்ட விக்னேஷ்,

“இங்க திருமண நாள்னு எல்லாம் தனி நாள் இருக்கு பாரேன். இங்கயே கல்யாணம் எல்லாம் செய்வாங்க போல” என்றான்.

“நமக்கு தான இது வந்த நாடு. இலங்கையிலருந்து வந்து இங்கயே செட்டில் ஆனவங்களுக்கு இனி இது தானத் தாய்நாடு”, என்று சொல்லி முடிக்கும் முன் அவன் அதை ஆமோதிக்க, ஜூன் மாதம் வரப்போகும் தேர்த் திருவிழாவிற்கு வரமுடியுமா எனக் கணக்கிடத் தொடங்கினோம். சபாரத்தினமும் ஐயரும் எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் பொழுது, அதைப் பார்த்துக் கொண்டே இருப்பது ஏதோ போல் இருப்பதாகக் கருதி வெளியே வந்து, கொண்டு வந்த தேநீரைப் பகிர்ந்துண்டோம். தேநீர் குளிருக்குக் கொஞ்சம் இதமாய் இருந்தது. நாங்கள் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த நேரம், ஒருவர் பின் ஒருவராகக் கூட்டமும் வரத் தொடங்கியது. எங்கோ கிளம்பிச் சென்ற சபாரத்தினம் செல்லும்முன் எங்களிடம், ‘உள்ளே செல்லுங்கள். பூசைத் தொடங்கப் போகிறது’ என்றார். நாங்கள் வேகவேகமாக உள்ளே செல்ல, ஓர் இருபது பேர் கருவறைத் திறக்கப் போவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் கூட்டத்துடன் எங்களை இணைத்துக் கொள்ள, வழிபாடு தொடங்கியது. ஒவ்வொரு கடவுளையும் ஐயர் சுற்றி வர அவர் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் சென்றது. வரிசை மாறாமல் நானும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல, எல்லோர்க்கும் போல எனக்கும் திருநீறு பூச வந்த ஐயர், நெற்றியில் விழுந்த முடியை வலக்கையின் கடைசி விரலால் தூக்கி, கட்டை விரலால் பூசிவிட்டார். நம்பிக்கையின்மையில் வளர்ந்த நாத்திக எண்ணம், அதை அழிக்கச் சொல்லி எனக்கு ஆணையிட,

‘மழை வேண்டி
மாரியம்மனுக்கு
1008 இளநீர் அபிஷேகம்.
காலி இளநீர்க் காய்களை
வீட்டுக்குக் கொண்டு போகும் சிறுமி
என் காலில்
இளநீர் சிந்திப் போகிறாள்
ஜில் என்று’

முகுந்த் நாகராஜனின் கவிதையை உடனழைத்து, அவர் பூசிய விதத்தில் பூரித்த மனம், வேண்டாம் என்றதற்கு விதிவிலக்கு வாங்கியது. கோவிலை மெல்ல நோட்டமிட்டேன். ஒவ்வொரு கடவுளிடமும் ஒரு சிலர் கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் அத்தனை வேண்டுதல்கள். ஒவ்வொரு கரத்திலும் ஆயிரம் கோரிக்கைகள். நம்பிக்கையை எல்லாம் கடந்து எல்லோரும் வேண்டி நிற்பதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. கடல் கடந்து வந்த எத்தனை இதயங்களுக்கு இந்தக் கோவில் இளைப்பாறக் கொஞ்சம் இடம் கொடுக்கிறது?

உடன் வந்த மூவரும் உள்ளே அமர்ந்திருந்த கணம், பூசை ஒருவாறு புழுக்கத்தைக் கொடுக்க, கொஞ்சம் நடக்கலாம் என முடிவு செய்து வெளியேறினேன். ஒவ்வொரு முறை ஜெர்மனி வரும்பொழுதும் தவிர்க்க முடியாமல் தானாய் வரும், ‘ஜெர்மனியின் செந்தேன் மலரைப்’ பாடலை நான் கொஞ்சம் சத்தமாகவே பாட, அங்கே களைகளை நீக்கி பூச்செடிகளைச் சுத்தம் செய்பவர் என்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகையைச் சிந்திவிட்டு மீண்டும் தன் பணியில் ஆழ்ந்தார். அவர் அருகில் சென்று,

“தமிழா?”, என்ற என்னை ஏறெடுத்துப் பார்த்தவர்,

“இங்கு எல்லோரும் தமிழ் தான்”, என்றார். ஐம்பது வயதிருக்கும். இலங்கைக்காரர். “இந்தியாவா? இலங்கையா?”, என்று பதில் கேள்வி வந்தது.

“தமிழ்நாடு”

“தமிழ் நாட்டுல எங்க?”

“கும்பகோணம்”

“இந்தக் கோவிலக் கட்டுனது உங்க ஊர்க்காராவங்க தான்”, என்று கோபுரத்தைக் காட்டினார். அப்படியா எனக் கோபுரத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு,

“நீங்க?”, என்று அறிவினா ஒன்றை எறிந்தேன்.

“நான் இலங்கை”

“வந்து எத்தன ஆண்டு ஆச்சி?”

“முப்பத்தைந்து ஆண்டுகள்”, என்றார் அழுத்தம் திருத்தமாக.

“எண்பது போர் அப்ப வந்தீங்களா?”, பதில் சொல்லாமல் ஆம் என்பது போல் தலை அசைத்தார். இருவருக்கும் இடையில் ஒரு மௌனம்.

“படிக்கிறீங்களா வேலை பாக்குறீங்களா?”, என்று அவரே மீண்டும் தொடங்க,

“வேல பாக்குறேன். பெல்ஜியம்ல”

“அங்க இருந்து இங்க கோவிலுக்காக வந்துருக்கீங்களா?”, என்று வியப்பானவரிடம், ஆம் என்று தலையசைக்க, “தனியாவா?”, என்றார். இல்லை என்று காத்திருந்து, உடன் வந்தவர்களை கைக்காட்டினேன், விக்னேஷை மட்டும் அறிமுகம் செய்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின்,

“இங்க எதாச்சும் தமிழ் கடை எதாச்சும் இருக்குமா?”

“ஓஹ், ரெனிச்சே ஸ்ட்ரா… போங்கோ”, என்றவர் சொன்னதில், ரெனிச்சே புரிந்தது. போங்கோ புரிந்தது. இடையில் உள்ள சொல் புரியாமல் நான் விழித்துக் கொண்டே இருக்க, ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார். அவர் சொன்னதைத் தேடினால், Rheinische Straße Dortmund என்றது கூகுள். அந்த இரண்டாம் சொல்லின் உச்சரிப்பு எனக்குப் புரியாமலேயே இருக்க, மீண்டும் அவரிடம், “இங்க நல்ல ஹோட்டல் இருக்குமா?”, என்றேன்.

“இங்க எல்லாமே இருக்கு. சாப்பாட்டுக் கடை, துணிக்கடை, பள்ளிக் கூடம்…”, என்றவர் பேசிக் கொண்டே போக, கிளம்பும் வேகத்தில் அவர் சொன்னதை எளிதாகக் கடந்து அவருக்கு நன்றி சொல்லிப் புறப்படோம். “யூன் மாதம் வாருங்கள். உற்சவம் நடக்கும். மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்”, என்று எனக்கும் விக்னேஷுக்கும் விடைகொடுத்தார். அங்கிருந்து கிளம்ப மணி மதியம் பன்னிரண்டானது. பசி வேறு. ஒருவழியாக அவர் சொன்ன முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து வந்தால் அந்தத் தெருவே தமிழ் கோலம் பூண்டிருந்தது. வாசலிலேயே போர்டில் எழுதி வைக்கப்பட்ட தமிழ் உணவு வகைகள், சதீஸ் நகைப்பட்டறை, தமிழ அரங்கம், பொன் மஹால், சக்தி டெக்ஸ்டைல்ஸ், காந்தன் நகைமாடம், முடிதிருத்தக் கடை, அன்னம் உணவகம் என எங்கு நோக்கினும் தமிழ். பாரீஸில் பார்த்தது போலவே ஜெர்மனியிலும் ஒரு தமிழ் தெரு. எல்லாக் கடைகளையும் பார்க்கும் ஆர்வத்தில், தெருமுனை வரை செல்ல, முடிவில் போதி தர்மரைப் போல் காட்சி அளித்தது ஒரு சிலை. ஆனால் தாடி இருந்தது. அருகே சென்று பார்த்ததில் வியப்பிலும் வியப்பு. அது ‘அய்யன் திருவள்ளுவர்’ சிலை. சொல்லவொண்ணா மகிழ்ச்சி. எல்லாக் கோணங்களிலும் அய்யனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கூகுளில் அதிக மதிப்பீடு பெற்ற ஒரு தமிழ் உணவகத்திற்குள் சென்று சாப்பிட்டோம்.

“இந்தத் தெருல இருக்குறதே ஒரு மாரி செய்யிதுல்ல. ஏதோ நம்ம ஊருலயே இருக்க மாரி…”, என்றவனை ஆமோதித்த விக்னேஷ்,

“ஆமா. நம்ம ஊர்ல இருக்க மாரியே இருக்கு. எங்க பார்த்தாலும் தமிழ்”, என்றான். வெளியே வந்தும் அதே வியப்போடே பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த முடிதிருத்தக் கடையில், “கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா?” பாடல் மிகச் சத்தமாக ஒலித்தது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று, அந்தப் பாடல் ஒலிப்பதைக் காணொளியாக்கி, ‘எங்கும் இளையராஜா’ என்று குழுக்களில் எல்லாம் இன்பத்தைப் பகிர்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் ஸ்ரீதரன் மாமா, ‘இது தேவேந்திரன் இசை அமைத்த பாடல், இளையராஜா இல்லை’ என்று தனிச்செய்தி அனுப்பினார். லப்பர் பந்து படத்தில், “ச்சே ராஜா ராஜா தான்ல”, என்று மெச்சிக் கொள்ளும் ஒருவனிடம், “ராஜா ராஜா தான், ஆனா இது தேவா” எனத் திருத்தும் காட்சி தான் நினைவுக்கு வந்தது.

தெருவில் கொஞ்சம் காலாற நடக்க, ஒரு கடையில் வெளியே எழுதியிருந்த சாப்பாட்டு வரிசையைச் சுட்டி, “‘ர’ தப்பாப் போட்டுருக்காங்க பாரு” என்றான் விக்னேஷ்.

அங்கே ‘பிறியாணி’ என்று எழுதியிருந்தது. நம்மூர் கடைகளில் அது ‘பிரியாணி’ தான் ஆனால் இலங்கையில்? முத்துலிங்கம் பயன்படுத்தும் ‘றொறன்றோ'(Toronto) நினைவில் வந்து போனது.

“இல்லடா, இது தப்பு இல்ல. இலங்கைல வல்லின றகரத்தோட பயன்பாடு அதிகமா இருக்கும். அவங்க ஒருவேளை இப்படித் தான் எழுதுவாங்களோ என்னமோ” என்றேன்.

“ஆமாண்டா. ஒருவாட்டி எங்க தமிழ் ஆசிரியர் கூட சொல்லிருக்காரு”, என்றான்.

“தமிழ் ஆசிரியர் என்ன வள்ளுவரே அப்படி தான் சொல்லிருக்காரு. ஒருவர்க்கு – இத எப்படி எழுதுவ? என்ன ரகரம் பயன்படுத்துவ”

“சின்ன ரகரம் தான். ஒருவர்க்கு”, என்று ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான்.

“ஆனா திருவள்ளுவர் ‘ஒருவற்கு’ அப்படின்னு தான் எழுதிருக்காரு”, என்று ஒரு திருக்குறளைக் கூகுளில் எடுத்துக் காட்டினேன்.

‘செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி (40)’

இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏற, கார் பெல்ஜியம் நோக்கிப் புறப்பட்டது.

“சாப்பாடு நல்லா இருந்துச்சு. எப்படிடா இந்த எடத்தக் கண்டு புடிச்சீங்க?”, என்ற பாலாஜியிடம்,

“வெளிய நின்னு ஒருத்தர்க்கிட்டப் பேசிட்டு இருந்தோம்ல அவரு தான் சொன்னாரு”, என்றேன்.

“ஆமா. இலங்கைத் தமிழ்ல அழகா பேசுனாரு. என்ன கதைக்கிறீர்கள். எனக்கு ஒன்றும் விளங்க இல்லா”, என்று இலங்கைத் தமிழைப் பேச முயன்ற விக்னேஷ், “கடைசியா அவரு சொன்னத கவனிச்சியா?”, என்றான். ஒன்றும் புரியாமல் நான் விழிக்க, அவர் சொன்னதை, அவர் மொழியிலேயே கூறினான்.

“இங்க எல்லாமே இருக்கு. சாப்பாட்டுக் கடை, துணிக்கடை, பள்ளிக் கூடம், ரயில் நிலையம் எல்லாம் இருக்கு, ஆனா சொந்தமா நாடு மட்டும் இல்ல”

Shopping Cart
Scroll to Top