புவி மிசை மரபில் –
பொதுவாக –
இன்னொருவர் படும்
இன்னலுக்கெல்லாம்
உதவிட மக்கள்
உடன்படுவதில்லை; பிறரது
கண்ணீர்க்கெல்லாம்
கடன்படுவதில்லை;
ஆம்!
மண் வாழ்க்கை வாழும்
மக்களிலே பலபேர்
தன் வாழ்க்கை ஒன்றே –
தழைக்கட்டும் என்றே –
வாழ்வதுவே இங்கு
வழமை ஆயிற்றே; அது
பெற்றவர் ஆயினும்
பிறந்தவர் ஆயினும்
மற்றவர் போலே
மாறியதாலே
பற்றெல்லாம் இன்று
பழமை ஆயிற்றே;
இப்படி இங்கே –
எல்லோரும் இருக்க –
துயர் –
உறவுக்கு என்றதும்
ஓடோடிச் சென்றந்த
மரபுக்கு ஒரு கரம்
மண்ணள்ளிப் போட்டது;
அப்படி –
மரபினை எல்லாம்
மறந்திருந்து –
மற்றவர்க்காய்ச் செவி
மடல் திறந்து –
நீளும் கரங்களே
நித்தியம் காணும்;
வாழும் வரையிலும்
வாழ்வுக்குப் பின்னும்
சரித்திரத்தில் இடம்
சத்தியம் காணும்;
ஏன் எனக் கேட்க
எவருமின்றி – இரு
மீனென மழலைகள்
மிதந்து வர –
காலம் தன்னோடு
காத்திருக்கும் கண்ணோடு
கொத்த நேரம் பார்த்துக்
கொக்காயிருந்தது!
நல்லதாய்ப் போனது
நலிந்த வாழ்வுக்கும்
ஆதரவு கொடுக்க ஓர்
அக்காயிருந்தது!
இளமை வயதில்
இமைக்கும் பொழுதில் – இரு
மொக்குள் வாழ்க்கை
முறைக்கெட்டுப் போக – அது
சிக்குள் விழுந்து
சிறைப்பட்டு நோக,
வாழ்வுக்கு –
வசைமாரி பொழிய
வாய்ப்பளிக்காமல்
திசைமாறிச் செல்லும்
சிசுக்களுக்கு –
இடமளிக்கப் பெரியம்மா
முடிவெடுத்தார்;
அவ்விடமே –
அவர்களுக்கு –
இன்னொரு அன்னையாய்
வடிவெடுத்தார்;
ஈன்ற பிள்ளைக்கு
மத்தியில் வந்தது
இன்னும் இரண்டு பிள்ளை; அப்படி
ஆதரவளிப்பது
அற்றை நாளில்
அவ்வளவெளிதாய் இல்லை;
பெற்றோரை நினைத்துப்
பிள்ளைகள் மனது
ஏங்காதிருக்க –
பெரியப்பா அவர்களை
வளர்ப்பதிலே பின்
வாங்காதிருக்க –
பெரியம்மா –
மழலைகட்காய்ப் போட்டார்
மனதிற்குத் திரை;
மடி கொடுத்தார் அவர்கள்
மணம் முடிக்கும் வரை;
அக்கணம் ஈட்டிய
ஆதாரம் அனைத்தையும்
சிக்கனம் மூலம்
சேமித்தார்;
மெய்ப்பொருள் வாழ்வில்
மேம்பட – சேமிக்கும்
கைப்பொருள் போதுமென
காமித்தார்;
பெரியம்மா!
அயற்சிப் பிடியில்
அகப்படாமல் –
முயற்சிப் பாதையில்
முறை கெடாமல் –
நில்லாமல் ஓடும்
சத்ய நதி;
நிஜப்பெயர் என்ன?
சரஸ்வதி;
அவதாரம்
ஆனை மலை
அடிவாரம்;
பேசும் போதே –
புன்னகை ஊடே –
கொஞ்சலிலே குழைப்பார்
கொங்கு நடையை; அவரிடம்
தமிழ்மொழிக் காணாது
தங்கு தடையை;
சொல்லும் சொற்களைச்
சூழும் நயம்; பிறர்
வரவை நம்பாமல்
வாழும் சுயம்;
பிள்ளைகள் வளரும் முன்
பெரியப்பா –
வானழைத்த உடனே
வையம் நீங்க…
தலைவனின் கடமையைத்
தலைவியும் –
தான்கொண்ட பொறுப்பெனத்
தலைமேல் தாங்க…
கொழுநனுக்குப் பின்னும் – கொழு
கொம்பிழந்த முல்லை – தான்
கொண்டிருந்த கொள்கையிலே
பின்வாங்கவில்லை;
ஆம்!
இயல்பாகவே –
இடை விடாது – உறுதி
இடர்ப்படாது – இறுதி
எட்டிவிடும் அவர்
எடுத்த பணி;
எடுத்தது முடிவு –
எட்டிய பின்பே –
ஆரம்பம் ஆகும்
அடுத்த பணி;
தீர்க்கமே அவரைத்
தீயாய் இயக்கும்; அவர்
திடத்தை அவையோ
தினமும் வியக்கும்;
வியப்பு வலையில்
வீழ்ந்து விடாமல்,
எவரேனும் கருத்து –
எடுத்துரைத்தால் அவர் –
அகவை அறிவை
ஆய்ந்து விடாமல்,
செருக்கை வைப்பார்
சிரிப்புச் சிறையில்; அங்குத்
தலைக்கனம் போகும்
தானாய்த் தரையில்;
வாழும் வரையில் –
நாளும் உரையில் –
கன்னித் தமிழைக் –
கற்பிக்கும் முறையில் –
வியந்து இயற்கையை –
வேண்டிக் கொள்கிறேன் –
அதிகரிக்க வேண்டும் அவர்
அகவை எண்களில்; ஒருவர்
மூப்பதைக் கொன்று – தனைக்
காப்பதைக் கண்டு – சுனைத்
தானாய் ததும்பு என்
தமிழ்த்தாய்க் கண்களில்;