“குயில்கள்
மெளனத்தைச்
சுவைத்துக்கொண்டிருக்கின்றன
புல்லாங்குழற் காட்டில்
யாருமில்லை
வீணையின் மீது
ஒரு பூ
விழுந்து கிடக்கிறது
எங்கிருந்தோ
மேகங்களை விலக்கி
வழியும் ஒளிமஞ்சளில்
மிதக்கிறது காற்று
உன் முகமாக
அனைத்துக்குமான
உன் குரலாக
அன்பிசைக்குயில்
எஸ்.ஜானகி அம்மாவுக்கு
ஆழ்ந்த இரங்கல்”
– பழநிபாரதி
பள்ளி நாட்களில் ஒரு பாடலைக் கேட்ட உடனே பாடகர்கள் பெயரைச் சொல்லும் பிரகாஷைப் பார்த்தால் எங்களுக்கு அதிசயமாகவே இருக்கும். சுசீலாவா ஷைலஜாவா என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுதில் சுசிலாம்மா டா என்பான். சித்ராவா சுஜாதாவா என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல், கீச்சுன்னு பாடுறாங்க பாரு, ஸ்வர்ணலதாம்மா என்பான். எப்படி இவனால் மட்டும் இப்படி வேறுபாடு காண முடிகிறது என்று நாங்கள் வியந்து கொண்டிருந்த நாட்களில், என்னாலும் கேட்ட உடனே சொல்ல முடிந்த குரல்களில் முதன்மையானவர் ஜானகி அம்மா தான். ஏனோ தெரியவில்லை அவர் பெயரைச் சொல்லும் போதெல்லாம் ‘அம்மா’வைத் தவிர்க்க முடிவதில்லை. சில முறை ‘ஜானகி’ என்று மட்டும் சொல்ல முயன்றதும் உண்டு, ஆனால் ஏனோ அது மரியாதைக் குறைவாகவே தோன்றியது.
இன்று உறங்கி எழுந்து அவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் மனம் ஒருவாறு சஞ்சலத்தோடே தான் இருக்கிறது. ஒரு சில பிரபலங்களின் இறப்பு தான் தனிப்பட்ட இழப்பாய்த் தோன்றுகிறதோ என்னவோ. சோகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பலர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதில், ‘அடுக்குமல்லி எடுத்து வச்சி’, ‘பூத்தது பூந்தோட்டம்’, ‘அம்மா அம்மா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘சாமிக்கிட்ட சொல்லி வச்சி’, ‘அழகு மலர் ஆட’ என எத்தனை எத்தனை வகையான பாடல்கள்?
இளைய தலைமுறைக்கு அவரை எந்தப் பாடலை வைத்து அறிமுகம் செய்வது?
சதீஷிடம் கேட்டால், ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’ என்பான். மதனிடம் கேட்டால், ‘தென்றல் வந்து தீண்டு போது’ என்பான். என்னிடம் கேட்டால், ‘மார்கழித் திங்கள் அல்லவா’ என்பேன். ‘அவள் அப்படிதான் திரைப்படத்தில்’ மஞ்சுவின் தோழியிடம் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைப் பேட்டி எடுக்கப் போவதாகக் கமல் சொல்லிக் கொண்டிருப்பார். உடனே அந்தப் பெண் “மச்சான பார்த்தீங்களா ஜானகியவாங்க?” எனக் கேட்பார். “எனக்கு சிங்காரவேலனே ஜானகியைத் தான் தெரியும்” என்பார் கமல்.
“குழந்தைகளுக்கான பாடகி, முழுக்க முழுக்க கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் பாடும் பாடகி, கிராமியப் பாடல்கள் பாடும் பாடகி, சரசப் பாடல்கள் பாடும் பாடகி என எஸ்.ஜானகியம்மாவை அவரவர்க்கு தக்கவாறு நினைவில் வைத்திருப்பர் அதுவே அவரது தனித்துவம்”, என்று யாத்திரி சொன்னது போல், இது தான் அவர் என்று எடுத்துரைக்கவே முடியாத இடம் அவருடையது. தமிழ் மட்டுமல்ல, தென்னிந்தியா கண்ட ஆகப்பெரும் அதிசயம் அவர்.
அவர் இறப்பின் இரங்கலுக்காக மனுஷ் எழுதிய கவிதையில்,
“ஜானகியின் குரலோடு
ஆண் குரல்கள்
போட்டியிட்டுத் தத்தளித்தன
எஸ்.பி.பி மட்டும்
அந்தச் சவாலைச் சரி சமமாகச்
சந்தித்தார்”, என்று எழுதியிருந்ததில் ஓரளவு உண்மை இருக்கிறது. கல்லூரி நாட்களில் எஸ்.பி.பியா யேசுதாஸா என்று பட்டிமன்றம் வைத்த நாட்களில் எந்த இடத்திலும் எஸ்.பி.பியை விட்டுக் கொடுக்காத பிள்ளை மனம், ஜானகி அம்மா என்று வந்துவிட்டால் மட்டும் சரி அவர் தானே என்று தோற்றுப்போகச் சம்மதிக்கிறது. ஜானகி அம்மா எவ்வளவு சிறந்த பாடகி என்று எடுத்துக்காட்ட ஒரே ஒரு பாடல் போதும். ‘சாமிக்கிட்ட சொல்லி வச்சி’ பாடலின் முதல் சரணத்தைத் தொடங்கும் பாலு,
“கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே!
பூவோடு வரும் காற்றாக எனை” என்ற இடத்தில் சின்னதாய்க் கொஞ்சம் இளைப்பாறிய பின்னே, “நீ சேரத் தெளிந்தேனே” என்று முடிப்பார். மிக நீண்ட வரி தான். அடுத்த சரணத்தில் அதே இடத்தை இராஜா ஜானகி அம்மாவுக்கு வழங்க,
“காவேரி அணை மேலேறி நதி
ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்” என்று ஒற்றை அடியில் அடித்திருப்பார்.
‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் வரும் ‘ஜன்னல் வந்த காற்றே’ பாடலில் ஒரே இசையை மெலடி, பாப் மற்றும் குத்துப் பாடல் என மூன்று பாடகர்களை வைத்து மூன்று விதமாகப் பாடவைத்திருப்பார் இசையமைப்பாளர் யுவன். ஆனால் இதை அந்நாட்களிலேயே ராஜா ஜானகி அம்மாவை வைத்துச் செய்திருக்கிறார் என்று சொன்னால் அதில் வியப்பென்ன இருக்கிறது? மகளிர் மட்டும் படத்தில் வரும் ‘கரவ மாடு மூனு’ பாடலில், மெலடியை வெளிப்படுத்தும் ரேவதிக்கு, ‘நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம் இன்பம் இன்பம் ஆரம்பம்’ என்ற வரிகள் வரை, ஜானகி அம்மா தன் இயல்பு குரலிலேயே பாடியிருப்பார். அடுத்ததாக வரும் ஊர்வசி தன் சேலையை ஐயர் வீட்டுப் பெண் போல் இழுத்துப் போர்த்த, அங்கே, ‘அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு’ என்று வரும் வரிகளில், தன் குரலையும் அதற்கு ஏற்றாற்போல் மாற்றும் ஜானகி அம்மா, ஒவ்வொரு சொல்லிலும் கொஞ்சம் நெளிவு சுளிவைக் கூட்டி ஐயர் ஆத்து மொழியை அங்கே அழகாகக் கடத்தியிருப்பார். இறுதியாக, ‘வயசுப் பொண்ண மாமா வளைச்சுக் கட்டுப் பார்ப்போம், தேங்கா பாலத் தேடி வந்த இந்த ஆப்பம்’ என்று குப்பத்துப் பெண்ணாக வரும் ரோஹிணி பாடத் தொடங்கிய கணம், அப்படியே கீரை(Gear) மாற்றியிருப்பார் ஜானகி அம்மா. அதில், ‘அழக எண்ணி’ என்ற சொல் எப்போதும் ‘அயக எண்ணி’ என்று அழகிய சென்னைத் தமிழில் தான் ஒலிப்பது ஜானகி அம்மா செய்த கூடுதல் அழகியல்.
திரைப்பாடலை வெறும் பொழுதுபோக்கு என்று கருதாமல், அதைப் பாத்திரங்களின் இயல்பையும் காட்சியின் உணர்வையும் கடத்தும் ஒரு சாதனம் எனக் கருதி ஒவ்வொரு பாடல்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வரிகளுக்கும் நியாயம் செய்த ஒரு ஆகச் சிறந்த பாடகி எஸ். ஜானகி அம்மா. அவர் பாடிய பாடலை இன்னொருவர் பாடிக் கேட்பது அந்தப் பாடலின் உணர்வுக்கு ஜானகி அம்மா எவ்வளவு உண்மை செய்திருக்கிறார் என்று விளக்கம் ஏதுமின்றி எவருக்கும் எளிதாய் விளங்க வைக்கும்.
96 திரைப்படத்தில், திரிஷாவின் பின்னணிக் குரலாய் ஒலிக்கும் சின்மயி, ஜானகி அம்மா முன் அமர்ந்து பாடும் காட்சியில், மிக இயல்பாய் (வேண்டும் என்றே) சங்கதி அற்ற கீதமாய், பூமாலையே பாடலைப் பாடுவார். அதைத் திருத்தும் ஜானகி அம்மா, ‘கோடையில் வாடாத கோவில் புறா’ என்ற வரியில் ‘கோவில்’ என்ற சொல்லைக் கொஞ்சம் இழுத்து சங்கதியோடு பாடச் சொல்லுவார். சின்மயி அதை அப்படியே பாடிய போதும், ஏனோ ஜானகி அம்மாவின் இனிமை அதில் துளியும் இருக்காது. சின்மயி எங்கள் தலைமுறையின் ஆகச் சிறந்த பாடகி என்ற போதிலும், ஜானகி அம்மா பாடலை பாடும் போது, நாம் நம்மை எவ்வளவு சிறுமையாய் உணரக் கூடும் என்று சொல்வது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி. அது உண்மையும் கூட. ஆம்! அவர் பாடலை நாம் பாட முயற்சி செய்யும் போது தான், அவர் பாடிய சங்கதி இன்றி நம்மால் அந்த வரிகளைக் கடந்து செல்லவே முடியாது என்று தோன்றும்.
அதிசயப் பிறவி படத்தில் வரும் ‘தானந்தன கும்மிக்கொட்டி’ பாடலில், இரண்டாம் சரணத்தில் உணர்வுகளைக் கூட்டிக் கொண்டே செல்லும் இசைஞானி, இறுதி வரியை மலேசியா வாசுதேவனிடம் ஒப்படைத்திருப்பார்.
“காதலென்னும் ஆட்சிதனை
வானமும் கூட வாழ்த்துதம்மா” என்று உச்சத்தில் கொண்டு அவர் நிறுத்த, அங்கே ‘தானந்த கும்மிக்கொட்டி’ என்று கீழிருந்து தொடங்கும் ஜானகி அம்மாவின் குரல், ‘தா’வைக் கொஞ்சம் நீட்டித்துப் பாடும். என்னைப் போல் அந்த நீட்டலில் விழுந்தவர்கள் நிறையப் பேர் இருக்கக்கூடும்.
‘மணியே மணிக்குயிலே’ பாடல் கூட அப்படித்தான். பாடலின் முடிவில்,
“மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே”, என்ற வரியை இரண்டு முறைப் பாடும் ஜானகி அம்மா, இரண்டாம் முறையில் அந்த மாலையை மட்டும் கொஞ்சம் நீட்டித்துப் பாடுவார். எத்தனை முறை அந்த நீட்டலின் சுகத்தோடு நான் நித்திரைக்குச் சென்றதுண்டு?
எஜமான் திரைப்படத்தில் சோகத்தைக் கடத்தும் விதமாக அமைந்த ‘நிலவே முகம் காட்டு’ பாடலில், வரிகள் ஒவ்வொன்றும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தேற்றும் படியாக அமைந்திருக்கும். தேற்றும் நெஞ்சம் மட்டும் தேம்பாதா என்ன? பாடலின் இறுதியில்,
“அலை போல் சுதி மீட்டு
இனிதான மொழி பேசு”, என்ற வரிகளைப் பாடும் ஜானகி அம்மா, ‘இனிதான’ என்ற சொல்லை அழும் தொனியில் முழுமையாக உச்சரிக்காமலேயே ஒரு கடந்து செல்வார். அந்த அழும் குரலில் விழுந்து எளிதாய் எழும் மனங்கள் எத்தனை?
கைதி திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் படியில் இறங்கி வரும்போது பின்னால் மெல்ல, ‘ஆசை அதிகம் வச்சி’ பாடலில் பின்னணி இசை ஒலிக்கத்தொடங்கும். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், பாடலின் ஜதிக்கேற்ப வைப்பது போல் காட்சிப் படுத்தியிருப்பார் லோகி. மெல்லக் கீழிறங்கி வந்த அர்ஜுன் தாஸ், போதை வஸ்து ஒன்றை தன் கைகளில் கொட்டி மூக்கால் இழுக்க, அப்போது பாடத் தொடங்குவார் ஜானகி அம்மா. அர்ஜுன் தாஸோடு சேர்ந்து நமக்கும் போதை ஏறத் தொடங்கும். இதே காட்சியை ஹிந்தி டப்பிங்கில் பார்க்க நேர்ந்தது. அங்கே ஜானகி அம்மாவின் குரல் இன்றி வெறும் பின்னணி இசை மட்டும் தான் வரும். அவர் இல்லாத இடம் எவ்வளவு வெறுமையைக் கொடுக்கும் என்பதற்கு அந்த ஒற்றைக் காட்சியே உலகுக்கு உரைக்க வல்லது.
மானசீகன் எழுதிய ‘எங்கே இருக்கிறாய் கேத்ரின்’ சிறுகதையில், கேத்ரினைப் படிக்கும் போது, ’96’ படத்தில் வரும் ஜானு தான் நினைவில் வந்து போவார். பெரும்பாலும் ஜானகி பாடல்களைப் பாடும் கேத்ரின் என்று தான் அவரை மானசீகன் அறிமுகம் செய்வார். அப்பா இல்லாமல், அம்மாவின் முந்தானைப் பிடியில் வளர்ந்த மணிகண்டன் ஒரு கட்டத்தில் அம்மாவையும் இழக்க, அழுது கொண்டிருப்பவனுக்கு ஆறுதலாய் பள்ளி பாட்டுப் போட்டியில் ஒலிக்கும், கேத்ரினின் ‘உன்னை நான் அறிவேன்’ பாடல். அவள் பாடத்தொடங்கிய ஹம்மிங்கை விளக்கிக் கொண்டு வரும் மானசீகன், ‘தேவனென்றால் தேவனல்ல தரை மேல் உந்தன் ஜனனம்’ என்ற வரியில் அவள் பிரபஞ்சத்தையே தன் குரலில் வைத்துத் தூறிக் கொண்டிருந்தாள் என்று எழுதி இருப்பார். அந்த இடத்திலேயே படிப்பதை நிறுத்திவிட்டு நான் ஜானகி அம்மாவிடம் சரணடைந்து மொத்த பாடலையும் கேட்டு விட்டுத் தான் மீண்டும் கதைக்குள்ளேயே நுழைந்தேன். மணிகண்டனும் கேத்ரினும் அந்தப் பாடலில் தொடங்கி காதலில் தொடர, கதை அங்கு தான் திருப்பமெடுக்கும். கேத்ரினை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் சாலையில் ஓடிய மணிகண்டனை ஒரு பேருந்து இடித்து அங்கேயே அவன் இறந்தும் விடுவான். பின் குறிப்பாக, அவனை அடித்துப் போட்ட பேருந்திலும் உள்ளே மேரி மாதா படம் இருந்திருக்கிறது என்று எழுதி இருப்பார்.
மணிகண்டன் இறந்த சோகத்தில், இவரிடம் வந்த கேத்ரின், எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருப்பார். பேச எத்தனிக்கும் இவரை வாயடைக்கும் வண்ணம், ‘மாதா உன் கோவிலில்’ என்று பாடத் தொடங்குவார். அதுவரை எல்லோருக்காகவும் இரங்கி இரங்கிப் பாடிய கேத்ரின், முதல் முறையாய் இரண்டாம் சரணத்தில் தன்னையும் மீறி தாய் முலைக்கு ஏங்கும் சிசுவைப் போல கேவி அழுவாள் என்று கதைத் தொடரும். அதற்குப் பின், ‘மாதா உன் கோவிலில்’ பாடலைக் கேட்கும் துணிவு எனக்கு வந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அதை ஒலிக்க விடும்போதெல்லாம் வெண்ணிற உடையோடு கண்ணீர் சிந்தும் கேத்ரினின் முகம் தான் நினைவில் எனக்கு வந்து போகும். கேத்ரின் அழுததற்கே இப்படி என்றால், ஜானகி அம்மாவின் இறந்த சேதியினைக் கேட்ட அடுத்த கணம், தாய் முலைத் தேடும் சிசுவென்றே கேவ விரும்பியது மனம். பாடத் தொடங்கி பாதியோடு நிறுத்தி அழுது கொண்டே ஓடிய கேத்ரினைப் போலவே, பாடலை இசைக்கத் தொடங்கி அதைப் பாதியிலேயே நிறுத்திய மனம், மீண்டும் மீண்டும்,
“கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே”
ஒற்றை வரிகளிலேயே உன்மத்தம் பிடித்தவனைப் போல் நின்று கொண்டு நீங்க மறுக்கிறது. மூப்பு, இயற்கை என்று என்ன சொன்னாலும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது என்பது, கலைத்துறைக்கு வெறும் கனவாகத் தான் இருக்கும். மனுஷ் தன் கவிதையில், இன்னொரு இடத்தில்,
“எல்லா இரவுகளும்
நிசப்தமானவை தான்!
ஆனால் இந்த இரவின் நிசப்தம்
நாற்பதாயிரம் இசைத்தட்டுகள்
ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்ட
அச்சுறுத்தும் நிசப்தம்” என்று எழுதியிருப்பார்.
அறுபது ஆண்டுகளாய் ஒலித்த குரல், இன்று இரவு நிசப்தங்களைக் கொடுத்து நிரந்தரமாய் உறங்கச் சென்றிருக்கிறது. இனி அந்த, இரவுகளின் மௌனத்தை அவர் இன்னிசை நிரப்பக்கடவது.
அஞ்சலி!