“குக்கிராமத்துச் சாலையில்
லிஃப்ட் கேட்டு நிற்கும்
பள்ளி பிள்ளைகளை
ஏற்றிக்கொள்ளும் அண்ணன்மார்கள்,
பெருநகரச் சந்திப்பில்
தங்கள் பால்யத்தையும்
நிம்மதியுடன் இறக்கி விடுகிறார்கள்”
- ந. சிவநேசன்
மாற்றம் இல்லாத மனிதர் இந்த உலகத்தில் உண்டா? மனிதன் என்ன, இந்த மண்ணுலகமே மாற்றங்களால் ஆனது என்றால் யாரேனும் மறுப்பு சொல்வீர்களா? ஆம்! நாம் மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி இயங்கும் நாள், நேரம், பொழுது, இயற்கை என அனைத்தும் மாறிக் கொண்டே தானே இருக்கிறது. மாறுவதோடு அல்லாமல், நம்மையும் அல்லவா அவை மாற்றிக் கொண்டே இருக்கின்றன? ‘எல்லாம் மாறும் என்ற விதியைத் தவிர எல்லாம் மாறும்’ என்ற மார்க்சிய விதியை ஒருவன் ஒப்புக் கொள்ள அவன் இடதுசாரியாய் இருக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். புரட்சிகள் பேசி ஆட்சிக்கு வந்த பின், புரட்சியையே கூண்டோடு ஒழித்து, சர்வாதிகாரத்தையே சட்டமாக்கிக் காட்டிய ஹிட்லரை மாற்றத்திற்கான மறு பொருளாய் அகராதியில் சேர்க்கலாம் தானே?
சொல், செயல், பணம், பற்று, பசி, பாசம், அவமானம், அதிகாரம், நிகழ்வு, நிறைவு என மனிதருக்கு மனிதர் மாற்றத்திற்கான காரணங்கள் மாறுபடலாம். ஆனால் மாற்றம் என்பது உலகின் மாறா நியதி அல்லவா? அப்படி மாற்றத்திற்குட்பட மறுத்தவை எல்லாம் இன்றும் மலை சூழ்ந்த சிற்றூர்களிலும், மரங்களிலும் விழுதுகள் பிடித்து விளையாடிக் கொண்டு தானே இருக்கின்றன?
ஏற்றமோ இறக்கமோ, மாற்றம் நம் வாழ்வில் இன்றியமையாதது. அப்படிப்பட்ட மாற்றம் இன்னொரு மனிதரால் ஏற்பட்டால்?
“இசை நின்று வெகு நேரமாகி விட்டது!
நான் மட்டும் நாற்காலி
நாற்காலியாய் அமர்ந்து கொண்டிருக்கிறேன்!”
என்ற நேசமித்ரனின் கவிதையை நினைவுகூர்வதைப் போல, திருமணம், குடும்பம், வருமானம், வாழ்க்கை எனச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்க, சாமானிய வாழ்வில் சலித்துப் போன மனம், கூடு கட்டி இருக்கும் இடத்தில் வசிக்கும் வீட்டுக் காரனையே விருந்தாளியாய்ப் பார்க்கும் பறவையைப் போல, சில பொழுது சுற்றத்தையே அன்னியமாய்ப் பார்த்துவிட்டு, மேகங்களைப் போல் இயல்பாய்க் கடக்கும் அன்னிய மனங்களைப் பின் தொடர்ந்து, பாதை தெரியாத போதிலும் அவர்களோடு பயணம் செய்யத் துடிக்கிறது. அப்படிச் செல்லும் பயணத்திலும், வற்புறுத்தலின் பேரில் வாங்கி வந்த புத்தகத்தில், மனங்கவரும் ஒன்றிரண்டு கவிதைகளைப் போல, அங்கங்கே அழகான மனிதர்களையும் காட்டத் தவறுவதே இல்லை வாழ்க்கை. வாழ்க்கைத் தவறினாலும் அதைத் தேடும் என் வாஞ்சை தவறுவதே இல்லை.
கிளப்ஹவுஸ் களைகட்டிய காலங்களில் என்னோடு அவையில் பயணித்த பெரும்பான்மையானவர்கள் நாற்பது ஐம்பது அறுபது வயதினைக் கடந்தவர்கள். அவர்களோடு இரவுகளில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த காலங்களில் ஒருமுறை அதே அவையில் இணைந்து, உடனடியாய் வெளியேறிய ஆர்.கே அண்ணா, “எப்படி அவங்கக் கூட உங்களால பயணம் செய்ய முடியிது?”, என்று இருபதுகளில் இருந்த என்னைப் பார்த்து பெரும் வியப்போடு கேட்டார்.
“ஏன் ணா எல்லாம் நம்ம மக்கள் தான?” என்று நான் புரியாமல் கேட்க,
“இல்லங்க. வயசு வித்தியாசமா தெரியல, என்னால அரை மணி நேரம் கூட அவங்கக் கூட ஒன்றி இருக்க முடியல. அதான் உடனே வெளியேறிட்டேன்”, என்றவரை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இன்னொரு நண்பனும், “எப்படி நம்மள விட வயது மூத்தவங்கக் கூடலாம் உன்னால பயணிக்க முடியிது? அவங்க இசை ரசனை, படம் பாக்குற விதம், போடுற மொக்க ஜோக்கு இப்படி எல்லாமே வேற மாதிரி தான இருக்கும்?” என்று கேட்டதற்கு என்னிடம் அப்போது எந்த பதிலும் இல்லை.
கல்லூரி படிக்கும் ஒருவனோடு பதிவேற்றிய புகைப்படம் ஒன்றைப் பார்த்த ஸ்ரீதரன் மாமா, “என்னங்க இவ்வளவு சின்னப் பசங்கக் கூட எல்லாம் பழக்கம் வச்சிட்டு”, என்று எள்ளலோடு கேட்க,
“எனக்கு இருபதிலும் பழக்கம் இருக்கு. அறுபதிலும் பழக்கம் இருக்கு”, என்று விளையாட்டாய்த் தான் என்னால் அதைக் கடந்து போக முடிந்தது. ஒரு வகையில் அது உண்மையும் தான். இருபதோ அறுபதோ, தேடி வரும் பறவையை எந்த வானம் மறுதலிக்கும்?
நான் மட்டுமல்ல, எல்லோருமே இங்கே யாரிடமோ நம் வானத்தைத் தேடுகிறோம். யாரோ ஒருவருக்கு வானம் ஆகின்றோம். எளிய சொற்களில் சொன்னால், அடைக்கலம் தேடுவதும், அடைக்கலம் ஆவதும் தானே வையம் வகுத்த வாழ்வுக்கான பொருள். அப்படி அடைக்கலமாகும் எல்லோருடனும் வாழ்க்கைப் பயணம் செல்லுமா என்றால், இல்லை என்பது தான் இயல்பின் நியதி. வானம் கூடாக முடியாது தானே? ஆயினும் அப்படித் தங்கிச் செல்ல வந்த எந்தப் பறவையும் தன்னுடைய ஒற்றை இறகையேனும் உதிர்த்துச் செல்லாமல் இல்லை. பின்னாளில் அது பறந்த பின்பும், நம் சிறகைச் சிங்காரிப்பதெல்லாம் சேகரித்த இறகன்றி வேறென்ன?
வேலைத் தேடும் மணிகண்டனையும் வேலை ஓய்வு பெறும் டெல்லி கணேஷையும் மையமாய் வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம், ‘நரை எழுதும் சுய சரிதம்’.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு (374) என்ற திருக்குறள் தான் படத்தின் கதைக்களம். அறிவு இருந்தும், தேநீர் வாங்கக் கூட முடியாமல், வறுமையில் வேலைத் தேடி அலையும் மணிகண்டனை, ஓய்வு பெற்று பணம் படைத்த டெல்லி கணேஷ், உள்ள நிலையில் இருந்து உடை மாற்றி உருமாற்றி ஒரு நல்ல நிலை எய்த வைப்பது தான் படத்தின் கரு. மோதலில் தொடங்கிய அவர்களது அறிமுகம், நாட்பட நாட்பட நட்பாய் மாறும் காட்சிகளே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும். நட்புக்கு மட்டுமல்ல எந்த ஓர் உறவுக்கும் வயது வேறுபாடு ஒரு பொருட்டல்ல என்றெனக்கு நரைக்கப் போகும் நாட்களுக்கு முன்னே, உரக்கச் சொல்லி உறைக்க வைத்த திரைப்படம். ஆண் திமிராலும், குடும்பத்தலைவன் எனும் அதிகாரத்தாலும், எல்லோருடனும் சிடு சிடுவென்றே இருக்கும் டெல்லி கணேஷ், மணிகண்டனுடன் பழகிய பின் முதன்முறையாய் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பார், பேத்தியோடு கொஞ்சி விளையாடுவார், மகன்களின் மனநிலையைப் புரிந்து கொள்வார். டெல்லி கணேஷின் கட்டளையால் சவரம் செய்து கொள்ளும் மணிகண்டனும் முதன்முறையாய் வேலைக்குத் தேர்வாவான். இப்படி நம் வாழ்வில் எதிர்பாரா இடத்தில் அறிமுகம் ஆகும் ஒரு நபர், எப்படி எல்லாம் நம் வாழ்வை மாற்றுகிறார் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாத விந்தை தான்.
வாழ்வு கொடுக்கும் சாவியை வாங்க மறுக்கும் பலர் இங்கே உடைபட்ட பூட்டோடு தான் உலா வருகின்றனர்.
ஜெயகாந்தன் எழுதிய ‘இல்லாதவர்கள்’ கதையில், தனியாய் இருக்கும் கிழவர் ஒருவர் வீட்டில், திருட வந்த திருடன் ஒருவன் அறைக்குள்ளே சென்று ஒடுங்க, அதைக் கண்டுபிடித்த கிழவர் சந்தேகம் எழாமல் அவன் இருக்கும் அறையை வெளியில் இருந்து தாழ் போட்டுவிட்டு சன்னல் வழியே அவனிடம் உரையாடத் தொடங்குவார். தன் பெயர் டோனி என்றும், பக்கத்துக் குப்பத்தில் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வந்து இங்கு மாட்டிக் கொண்டதாகவும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் திருடனை, ஆள் துணையின்றிச் சன்னல் வழியே சீட்டாட அழைப்பார் கிழவர். தப்பிக்க வழியில்லாத திருடன் இரண்டாம் நாள் வரை கொஞ்சம் வெறுப்போடு தான் அவர் சொல்வதனைத்தையும் செய்வான். ஆனால், நேரம் செல்லச் செல்ல அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்து கொள்பவன், அவர் இல்லாத நேரத்தில் அவரது உடையையும், அவரது மனைவியின் உடையையும் துவைத்துப் போடும் அளவுக்கு மனம் மாறி இருப்பான். கிழவரும்,
“நீ ரொம்ப நல்லவன் டா. உன்னை நான் காப்பாத்துறேன். நான் உனக்கு வேலைப் போட்டுத் தர்றேன். ஆனா நீ திருட மாட்டன்னு சொன்னாத்தான். இனிமே இந்த வாழ்க்கை வாழ மாட்டன்னு சொன்னாதான்” என்று ஏதேதோ பேசி அவனை மனம் மாற்ற நினைத்து, அவனுக்குத் தேநீர் முதற்கொண்டு தயாரித்துக் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு கட்டத்தில் அவன் அடைபட்ட அரையில் தான் அத்தனை பணம் நகை பாத்திரம் என அனைத்தும் இருக்கும். ஆயினும் டோனி, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சீட்டாடி வென்ற பணத்தோடு மட்டும் மூன்றாம் நாள் அங்கிருந்து தப்பிச் செல்வான்.
“அதைக் கூட வச்சிட்டுப் போயிடலாம்னு யோசிச்சேன் சாமி. ஆனா என் நிலைமை இப்ப சரியில்லாம இருக்கு. உங்க அனுமதியோட அந்தப் பணத்தை எடுத்துட்டு போறேன். நல்ல காலம் வந்தா நானும் ஒரு நல்ல மனுசனா உங்களை வந்து பாக்க ஆசைப்படறேன்”, என்று டோனி எழுதிய கடிதத்தைப் படிக்கையில் கிழவரின் கண்கள் குளமாக இருக்கும்.
நான் படித்த கல்லூரி, விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது மாணவர்களோடு உரையாடும்படி எனக்கு அழைப்பு விடுத்தது. அழைப்பினை ஏற்று இரண்டு மணி நேரம் உரையாடினேன். பேச்சின் முடிவில் கல்லூரி நிர்வாகத்திடம் அசோக் பில்லர் செல்லும் கல்லூரிப் பேருந்தில் என்னை ஏற்றி விடும்படி கேட்டுக்கொள்ள, மாணவன் ஒருவனை அழைத்து அவன் பேருந்தில் என்னை அழைத்துச் செல்லும்படி கூறினர். நானும் அந்த மாணவனும் பேசிக் கொண்டே அங்கிருந்து புறப்பட, கல்லூரி முதல்வர் என்னைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நீண்ட உரையாடலில் நேரம் போனதையே மறந்து நான் அரை மணி நேரம் கழித்து வெளியே வர, அந்த மாணவனும் எனக்காக வாசலிலேயே காத்திருந்தான்.
“நீ ஏன் டா போகல?”, என்று வினவிய என்னிடம்,
“சார் தான உங்களக் கூட்டிட்டுப் போக சொன்னாங்க”, என்றான் குழந்தைத் தனமாக.
“தம்பி, என்ன இருந்து கூட்டிட்டுப் போக சொன்னது காலேஜ் பஸ்ல. இப்ப தான் காலேஜ் பஸ் போயிருக்குமே. தனியா எனக்கு அஷோக் பில்லர் போகத் தெரியாதா என்ன? நீ போயிருக்க வேண்டியது தான”, என்று நான் கடிந்து கொண்டதைப் பொருட்படுத்தாமல்,
“அதெப்டிணா கூட வரன்னு சொல்லிட்டு நான் மட்டும் போறது?”, என்றான் அக்கறையோடு. அன்பின் மொழி நம்மை அமைதியாக்க வல்லது தானே?
இருவருமாய், ஆவடியில் இருந்து அசோக் பில்லர் சென்றடைய மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் அந்த மூன்று மணி அவனைப் பற்றி முழுதாய் அறிந்து கொள்ள போதுமானதாகவே இருந்தது. ஜெய் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன், தன் வீடு, குடும்பம், படிப்பு, கனவு எனத் தன்னைப் பற்றி அனைத்தையும் பட்டியலிடுவதைப் போலக் கொட்டித் தீர்த்தான். இறங்கிய பின்னும் நான் செல்லும் திசை நோக்கிக் கையசைத்துக் கொண்டே இருந்த ஜெய்யை அற்றை நாளின் ஓர் அங்கமாக மட்டுமே பார்த்துக் கடந்து சென்றேன். ஆனால் அதற்குப் பின் நாள் தவறாதழைத்து நலம் வினவும் அவனின்றிப் பொழுது எனக்குப் புலர்வதே இல்லை. ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது, இறந்து போன தன் அப்பாவைக் குறிப்பிட்ட ஜெய், ‘என் அப்பா தான் உங்கள என் கிட்ட அனுப்பி வச்சிருக்காருன்னு நினைக்கிறேன்’, என்று சொல்ல மறுமொழி இன்றி மௌனமானேன்.
அண்மையில் பார்த்த ‘பத்தா’ படம் ஒருவாறு மனதை ஊடுருவியது. அதை ‘இல்லாதவர்கள்’ கதையின் இன்னொரு வடிவெனலாம். ஊரே பயப்படும் பத்தாவை, தெரியாமல் பள்ளி கழிப்பறையில் அடைத்து வைக்கும் சபரி, அவனைத் திறந்து விட முடியாமலும், உணவின்றி அவன் இறந்துவிடாதிருக்க கதவடியில் தினமும் பொறை போடும் அக்கறையிலும் பாதிப் படம் ஓடும். சிரித்து, முறைத்து, மிரட்டி, சமாதானமாய்ப் பேசி, கெஞ்சி, கடைசியில் அழுதும் கூட பத்தாவால் அங்கிருந்து வெளியே வர இயலாதிருக்க, ஒரு நாள் ஊருக்குச் செல்லும் சபரி, இனி பத்தா உணவுக்கு என்ன செய்வானென அவன் இருப்பிடத்தைப் பிறருக்குச் சொல்லி, அவன் உயிரையே காப்பாற்றும் ஆபத்பாந்தவா ஆகிறான்.
கடைசி வரை தன்னை அடைத்து வைத்தது சபரி தான் என பத்தாவுக்குத் தெரியாமலேயே போக, இறுதிக் காட்சியில் தானே முன் வந்து உண்மையை உடைக்கும் சபரி, “நான் வேணும்னே பொறை வைக்கலண்ணா. எங்கிட்ட பொறை வாங்கத் தான் ண்ணா காசு இருந்துச்சு”, என்று சொல்லிக் கொண்டே சிந்திய கண்ணீர் எல்லோர் கண்களையும் ஈரமாக்கி இருக்கும் என்றே நம்புகிறேன். உண்மையைச் சொல்ல முடியாமல், அவன் உதிர்க்கும் உடைந்த சொற்கள் பத்தா மனதையே உடைக்க, பத்தாவின் மாற்றத்தோடு படம் நிறைவுறும்.
நம் வாழ்வில் ஏதோ ஒரு வடிவில் வந்து போகும் மனிதர்கள் எப்படி நம் வாழ்வையே மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறார்கள் என்று நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. தேர்களில் கடந்து சென்ற தெய்வங்களுக்காக தெருவையே நிறைத்துப் போடப்பட்டக் கோலங்கள் போல, மரண வீட்டு மூலையில் பாதியில் நிறுத்தப்பட்டுச் சிதறிக் கிடக்கும் சீட்டுக் கட்டுகளைப் போல, பறவைகளின் எச்சங்கள் நிரம்பிய அரச மர அடிவாரத்தைப் போல, கல்லறைத் தோட்டங்களில் காலியாய்க் கிடக்கும் சரக்கு பாட்டில்களைப் போல, நிற்காமல் செல்லும் ரயிலுக்காய்க் கட்டப்பட்ட சிறு நிலையங்களில் நிழல் பரப்பி நிற்கும் மரங்களைப் போல, நீர் தழும்பும் குடங்களைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு அலமாரியில் சரிந்து நிற்கும் புத்தகங்களாய்ச் சாலையை சாய்ந்து கடக்கும் தாய்க்குலங்களைப் போல, பயணமெங்கும் பல நூறு மனிதர்களை இந்த வாழ்வு வாரி வழங்கிய வண்ணம் தான் சென்று கொண்டிருக்கிறது.
சொல்லப்போனால் மனிதர்களும் வாழ்வும் வெவ்வேறல்ல. மனிதர்களைப் புரிந்துகொள்வதே வாழ்வினைப் புரிந்துகொள்வதற்கான ஆகப் பெரும் சூத்திரம். அதிக மனிதர்களை வாழ்வின் அங்கமாகக் கொண்டவனைத் தான் வாழ்வின் பாதைக்கு வழிகாட்டியாய் நான் பார்க்கிறேன். டெல்லி கணேஷ் வாழ்வில் வந்த மணிகண்டனை, தனியாய் வாழ்ந்த கிழவரின் வீட்டிற்குள் வந்த டோனி என்னும் துரைசாமியை, பத்தா சென்று கொண்டிருந்த பாதையையே மாற்றிய சபரியை வெவ்வேறு வடிவில் வாழ்வு நம் அன்றாடங்களிலும் அறிமுகம் செய்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அவர்களை எல்லாம் நின்று பார்க்க நமக்கு நேரம் இருக்கிறதா என்று எண்ணும் போது, நினைவில் வந்து போகிறது நேசமித்ரனின் இன்னொரு கவிதை.
“தழுவப்பிரிந்த கைகளைச்
சிலுவையில் அறைந்துவிட்டு
மேகங்களில் கூடுகட்டப் பறக்கும்
பறவை
பூமி திரும்பும் போது
வதியக் கூடிருப்பதில்லை”
The People Who Pass Through Our Lives
“On forgotten village roads,
young men stop
to give schoolchildren a lift,
taking them along on their journeys.
At busy city crossroads,
they quietly leave behind
the childhood they once carried.”
– N. Sivanesan
Is there anyone in this world who remains unchanged? And if I were to say that it is not merely human beings, but the entire earth itself that is made of change, would anyone disagree? Everything around us is in constant motion: the days, the hours, the seasons, nature itself. And it is not merely that these things change. Do they not change us, too, as they pass through our lives?
I have always felt that one need not be a leftist to accept the Marxist proposition that everything changes, except the law that everything changes. Consider Hitler, who came to power speaking of revolution, only to dismantle the very idea of revolution and establish dictatorship as law. Could we not add his name to the dictionary as another meaning of change, a reminder that even those who promise to transform the world can become its most terrible instruments of transformation?
Words, actions, money, attachment, hunger, affection, humiliation, authority, circumstance, fulfilment: the reasons that bring about change may differ from one person to another. But is change not the one unchanging law of this world? And yet, everything that has refused to yield to change continues to exist somewhere, does it not? In little villages ringed by mountains, where monkeys still swing from branches and cling to dangling roots, living as they always have, seemingly untouched by the evolutionary journey that transformed their distant relatives into human beings.
Whether it lifts us up or brings us down, change is indispensable to our lives. But what happens when that change comes to us through another human being?
“The music stopped
long ago.
Yet I keep playing
musical chairs,
moving from one chair
to another”
I am reminded of this poem by Nesamithran.
The music has stopped, but I continue searching for a chair, moving from one to the next as though the game were still going on. Perhaps this is what happens when the familiar ways of living no longer satisfy us. While everyone around me seems caught up in the familiar routines of marriage, family, income and the everyday business of living, my mind, wearied by the sameness of it all, begins to wander elsewhere; like a bird that builds its nest in someone’s home and, once settled there, begins to see the owner as a stranger, I too find myself looking at my old friends and familiar faces as though they were strangers, while seeking new friendships with unfamiliar minds that drift into my life like clouds, longing to travel alongside them even when I have no idea where the journey might lead.
And yet, even along such uncertain journeys, life never entirely fails me. In a book bought reluctantly, perhaps because someone insisted I buy it, I sometimes discover one or two poems that capture my heart. In much the same way, life never fails to place a few beautiful human beings along my path. Even when life itself loses its way, my longing to seek out new souls never does.
During the years when Clubhouse was at its liveliest, most of the people who travelled with me through those virtual rooms were in their forties, fifties and sixties. We would spend our nights talking and laughing together. Once, R. K. Anna joined the same room, only to leave almost immediately. Later, looking at me, a man still in my twenties, he asked with genuine astonishment, “How are you able to spend time with people like them?”
“Why, Anna? Aren’t they all our people?” I asked, unable to understand his surprise.
“No, that’s not what I mean. I can see the difference in our ages. I can’t even spend half an hour with them without feeling out of place. That’s why I left straight away,” he explained.
I still could not quite understand him.
Another friend once asked me, “How do you manage to get along with people much older than us? Their taste in music, the way they watch films, the silly jokes they make. Surely everything is different from what we like?”
At the time, I had no answer.
On another occasion, Sridharan Mama saw a photograph I had posted with a college student and asked, with a trace of mockery, “What is this? You’re even making friends with boys so young?”
All I could do was laugh it off. “I have friends in their twenties, and I have friends in their sixties.”
In a way, it was true. Whether twenty or sixty, which sky would turn away a bird that came looking for it?
It is not just me. Every one of us is searching for a sky somewhere in another person. And somewhere, in turn, we become the sky that someone else has been searching for. Put simply, is this not what life has always been about: seeking shelter, and becoming shelter for another?
But does life allow us to travel alongside everyone who finds shelter in us? No. That, too, is a law of nature. The sky cannot become a nest, can it? And yet, no bird that has come to rest there has ever left without shedding at least a feather of its own. Even after it has flown away, what is it that we gather to adorn our own wings, if not the feathers it left behind?
The film Narai Ezhuthum Suyasaritham centres on two men at opposite ends of their working lives: Manikandan, who is searching for a job, and Delhi Ganesh, who has retired. The foundation of the film is the following Thirukkural:
The world ordains two different ways: Acquiring wealth is one, attaining wisdom another (374)
Manikandan is an educated man, yet so poor that he cannot even afford to buy himself a cup of tea. He wanders in search of employment, while Delhi Ganesh, a retired man of means, helps him transform his circumstances and move towards a better life. Their acquaintance begins in conflict, but as the days pass, their relationship gradually blossoms into friendship. There is something extraordinarily beautiful about watching that transformation unfold.
Long before I grow old enough to have grey hair of my own, this film made me understand, with a force that demanded to be heard, that age is no barrier to friendship, or to any other human relationship.
Delhi Ganesh is a man accustomed to snapping at everyone around him, his behaviour shaped by male pride and the authority he believes comes with being the head of a family. But after he becomes close to Manikandan, something begins to change within him. For the first time, he apologises to his wife. He plays affectionately with his granddaughter. He begins to understand the feelings of his sons.
Under Delhi Ganesh’s instruction, Manikandan shaves and goes for an interview. For the first time, he is selected for a job.
How a person who enters our lives from a place we never expected can alter so much within us remains one of life’s most inexplicable wonders.
There are many people in this world who refuse to accept the key that life offers them. They continue to wander through the world with nothing but a broken lock.
In Illathavargal, a short story by Jayakanthan, an elderly man lives alone in his house. One day, a thief breaks in, only to hide himself inside a room. The old man discovers him. Without raising an alarm, he locks the room from the outside and begins speaking to the thief through the window.
The thief introduces himself as Tony and claims that he has come there after fleeing a murder case in a nearby slum, only to find himself trapped in the old man’s house. The elderly man, who has no one for company, invites him to play cards through the window.
With no way to escape, the thief spends the first two days doing as the old man asks, though not without considerable irritation. But as time passes, he begins to recognise the goodness of the man who has trapped him. His heart softens to such an extent that, when the old man is away, he even washes and hangs out both the old man’s clothes and those of his wife.
The old man, meanwhile, keeps trying to persuade him to change his life.
“You’re a good man, you know. I’ll protect you. I’ll find you a job. But only if you promise me you won’t steal again. Only if you promise you won’t go back to living this kind of life.”
He tries one way after another to reach the man’s heart. He even prepares tea and brings it to him.
At one point, the thief discovers that the very room in which he is imprisoned contains money, jewellery, vessels and all manner of valuables. He could easily take them and disappear. Yet, on the third day, Tony writes a letter, leaves it behind, and escapes with nothing but the money he has won at cards.
In the letter, he writes:
“I thought about taking the money I won, too, sir. But my circumstances aren’t good right now. I’m taking the money I won, with your permission. When better days come, I hope I can return and meet you as a good man myself.”
The old man’s eyes fill with tears as he reads Tony’s words.
When I visited India for a vacation, the college where I had studied invited me to return and speak with its students. I accepted the invitation and spent two hours talking with them. When the conversation ended, I asked the college administration if I could be dropped at Ashok Pillar on the college bus. They called a student and asked him to accompany me there.
As the student and I were preparing to leave, the college principal asked to see me. I went in, and what began as a conversation stretched into a long exchange. By the time I came out, half an hour had passed without my realising it. The student was still waiting for me at the entrance.
“Why didn’t you leave?” I asked him.
“Sir told me to take you with me,” he replied, with an innocence that left me momentarily speechless.
“Thambi, he asked you to take me on the college bus. The bus must have left by now. Do you think I don’t know how to get to Ashok Pillar on my own? You should have gone,” I told him, a little sharply. He paid no attention to my irritation.
“How could I say I’d accompany you and then leave by myself?” he asked, with genuine concern.
Is that not the power of the language of love? It can silence us without uttering a single word of reproach.
It took us three hours to travel from Avadi to Ashok Pillar. But those three hours were enough for me to learn a great deal about him. Introducing himself as Jay, he poured out the details of his life as though reading from an inventory: his home, his family, his studies, his dreams. Even after I had left, he continued waving goodbye.
At the time, I let him pass into memory as nothing more than a small part of that particular day.
But from then on, my days no longer seemed to dawn without his calling me, day after day, to ask how I was.
Once, while we were talking, Jay mentioned his father, who had passed away. Then he said, “I think my father is the one who sent you to me.” I had no answer. I fell silent.
The film Baththa, which I watched recently, found its way into my heart in a way I had not expected. In some respects, it can be seen as another telling of Jayakanthan’s Illathavargal.
Baththa is a man whom the entire village fears. Sabari, without realising who he is, locks him inside a school toilet. The film spends much of its time with Sabari unable to find a way to let him out, yet worrying that Baththa might die of hunger. Every day, he places porai, a simple snack, by the door so that the man inside will have something to eat.
Sabari tries everything. He laughs, scolds, threatens, speaks gently, pleads and, in the end, even weeps. Yet Baththa remains trapped.
One day, when Sabari has to leave for his village, he worries about how Baththa will find food after he is gone. So he tells others where the man is, saving his life in the process. The boy who had unwittingly imprisoned Baththa becomes the very person who rescues him.
Baththa never learns that Sabari was the one who had locked him in until the very end. In the final scene, Sabari steps forward himself and reveals the truth.
“I didn’t put the porai there on purpose, Anna. I only had enough money to buy porai for you.”
As he speaks, tears stream down his face. I can only imagine how many eyes in the audience must have filled with tears of their own. Unable to speak the truth without breaking down, Sabari can manage only these broken words, yet they are enough to break Baththa’s heart. The film ends with Baththa himself transformed.
I have often wondered how people who enter and leave our lives in one form or another possess the power to change our lives so completely.
Life keeps placing hundreds of people along our journey. They are like the kolams that spread across an entire street to welcome the gods carried past on temple chariots; like playing cards left scattered in a corner of a house when death interrupts a game midway; like the ground beneath a sacred fig tree, speckled with the droppings of birds that have come and gone; like empty liquor bottles abandoned among the graves of the dead; like trees spreading their shade beside little railway stations where trains pass without stopping; like women walking along the road, leaning beneath the weight of water-filled pots balanced on their heads and hips, while, back home, books sit tilted and crowded on their shelves, waiting to be read.
Like these, there are countless others all around us, each living a life we may know nothing about, each carrying stories we may never hear, each crossing our path in ways we may never fully understand.
Truthfully, human beings and life are not two separate things. To understand people is perhaps the greatest key to understanding life itself. I have come to see those who allow more people to become part of their lives as the ones who can best show us the way along life’s uncertain roads.
Life keeps introducing us, in our everyday existence, to people like Manikandan, who entered Delhi Ganesh’s life; Tony, also known as Duraisamy, who found his way into the home of an old man living alone; and Sabari, who changed the very course of Baththa’s life. But when I wonder whether we ever have enough time to stop and truly see these people, another poem by Nesamithran comes to mind.
“The bird that flies away
to build its nest in the clouds
after nailing to the cross
the hands that once reached out
to embrace it
finds, when it returns to earth,
no nest in which
it can dwell”